அபுதாபி நீதிமன்றம் இந்தி 3-வது அலுவல் மொழியாக சேர்ப்பு!

அபுதாபி  நீதிமன்றங்களில்   இந்தி 3-வது அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தி மொழி பேசக்கூடிய தொழிலாளர்கள் தங்களது குறைகளை எளிதில் தெரிவித்து தீர்வு காண உதவியாக இருக்கும்.

அபுதாபி நீதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அபுதாபி நீதித்துறை செயல்பாட்டில் கடந்த ஆண்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நீதிமன்றத்தில் வாதி, பிரதிவாதிகளுக்கு ஆவணங்கள் அரபி மொழியில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து அனைத்து சிவில் மற்றும் வர்த்தகம் தொடர்புடைய வழக்குகளில் ஆவணங்கள் கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் முதல் ஆங்கில மொழியிலும் வழங்கப்படுகிறது. மேலும் அமீரகத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்கள் எளிதில் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும், தங்களது வழக்குகள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளவும், குறைகளை தெரிவிக்கும் வகையிலும் இந்தி மொழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரபி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக 3-வது மொழியாக இந்தி மொழி பயன்படுத்தப்படுகிறது. இணையதளம் மூலமும் இந்தி மொழியில் கருத்துக்களை கூறவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தி மொழி பேசக்கூடிய தொழிலாளர்கள் தங்களது குறைகளை எளிதில் தெரிவித்து தீர்வு காண உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.