வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கணவன் முருகனுக்கு ஆதரவாக மகளிர் சிறையில் இருக்கும் நளினியும் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் தமிழக ஆளுநருக்கு உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், கடந்த 7 ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், உணவு சாப்பிட மறுத்துவிட்டார். நேற்று 3வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
இந்நிலையில் பெண்கள் சிறையில் உள்ள அவரது மனைவி நளினியும் நேற்று முதல் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளார். இதுதொடர்பான கடிதத்தை நளினி தமிழக ஆளுநருக்கு அனுப்பி உள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
அரசியல் அமைப்பு சட்டம் 161ஐ பயன்படுத்தி எங்களை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.
கடந்த 9.9.2018 அன்று எங்கள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு எடுத்து கடந்த 11.9.2018 அன்று கவர்னருக்கு அனுப்பியது.
சுமார் 5 மாதங்கள் கடந்தும் எங்கள் விடுதலை குறித்து கவர்னர் கையெழுத்து இடாமல் காலதாமதம் செய்து வருகிறார்.
எங்களை விடுதலை செய்வதாக வெளிப்படையாக அறிவித்தார்கள். ஆனால், 1000க்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்தீர்கள்.
நாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம். நாங்கள் உடல் மெலிந்து, உள்ளம் பலவீனமாகி, எப்போது இந்த 28 ஆண்டுகளாக அனுபவித்த நரகத்தை விட்டு வெளியே வருவோம் என ஏங்கித் துடிக்கிறோம்.
`உண்மை கண்டறியும் சோதனை செய்தால் நாங்கள் நிரபராதி என நிரூபிக்கிறாம்.
எனது கணவரின் கோரிக்கைக்கு ஆதரவாக நானும் உண்ணாவிரதம் இருக்கிறேன். நான் இந்த உலகத்தை விட்டு போகிறேன் என நளினி அந்த கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.