விசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு!- அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளவர்களின் விசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

பிராந்திய பகுதிகளில் வாழ விரும்பும் குடியேறிகளின் விசா விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலனை செய்யப்படும் என குடிவரவு துறை அமைச்சர் David Coleman தெரிவித்துள்ளார்.

சிட்னி, மெல்பேர்ன், குயின்ஸ்லாந்து போன்ற நகரங்களில் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதினால் குறித்த நகரங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமா பிராந்திய பகுதிகளில் புதிய குடியேறிகளை அனுப்புவதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் நகரங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் பிரதேச செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிராந்திய பகுதிகளில் புதிய குடியேறிகளை அனுப்பும் திட்டத்திற்காக அடுத்த 4 ஆண்டுகளுக்கு 19.4 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இந்த திட்டத்தின் கீழ் பிராந்திய பகுதிகளில் வாழ இணங்கும் புதிய குடியேறிகளின் விசா விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை வேலைக்கு வரவழைப்பது தொடர்பில் புது ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவில் புதிதாக குடியேறுபவர்கள் சுமார் 5 வருடங்கள் பிராந்திய பகுதிகளில் வாழ்ந்தால் மட்டுமே நிரந்தர குடியுரிமை பெறமுடியும் என்பதாக மாற்றம் கொண்டுவரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.