வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரிப்பில், சின்னா பழனிச்சாமி இயக்கியுள்ள படம் மியாவ். ஆடு, மாடு, யானை, குரங்கு, நாய், பாம்பு, சேவல் என பல மிருகங்களை வைத்து படங்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக பூனையை மையமாக வைத்து இந்த படம் தயாராகியுள்ளது.
இந்த படத்தில் இதுவரை 2 ஆயிரம் மேடை நாடகங்கள், 125 படங்கள், 50 சீரியல்களில் நடித் துள்ள நடிகர் டெலிபோன் ராஜ், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காமெடி கலந்த போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.
அதுபற்றி டெலிபோன் ராஜ் கூறுகையில், இந்த படத்தில் எனக்கு கொலையை கண்டு பிடிக்கிற போலீஸ் வேடம். காமெடிக்கு என்னை பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக, ஒரு பப்பு சீன் கலக்கலாக அமைந்துள்ளது. அதில் போலீஸ் டிரஸ் இல்லாமல் கலர் டிரஸ் அணிந்து நடித்தேன். அதோடு, இந்த படத்தில் எனக்கு ஒரு தனி பாடலும் உள்ளது.
அதில் பூனையுடன் இணைந்து நடனமாடியிருக்கிறேன். அந்த பாடலை சென்னையிலுள்ள செந்தில் ஸ்டுடியோவில் செட் போட்டு கிராபிக்ஸ் பூனையை வைத்து படமாக்கினார்கள். மேலும், மியாவ் படம் பூனையை மையப்படுத்திய கதை என்பதால் அவுஸ்திரேலியாவில் இருந்து ஒரு பெண் பூனை வரவழைக்கப்பட்டது. அந்த பூனை மிக அற்புதமாக நடித்துள்ளது.
ஒரு காட்சியில் எனது டவுசரையெல்லாம் அவிழ்த்து காமெடி செய்து விடும். அந்த வகையில, இந்த மியாவ் படத்தை சிறுவர்கள மட்டுமின்றி பெரியவர்களும் பார்த்து ரசிக்கும் வகையில் ஒரு சிறந்த படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சின்னா பழனிச்சாமி. அவருக்கு நகைச் சுவை உணர்வு அதிகம் என்பதால் படத்தை காமெடி கலந்து இயக்கியிருக்கிறார்.
அதோடு, இந்த மியாவ் படத்தில் நடித்து வரும்போது பிரபுசாலமனின் தொடரி படத்திலும் நடித்தேன். முதன்முதலாக தனுசுடன் நடிக்கும் படம் என்பதால் எனது காட்சிகளும் பெரிய அளவில் ரீச் ஆகும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என்ன காரணத்தினாலோ எனது காட்சிகளை கத்தரித்து விட்டனர்.
இருப்பினும் எதிர்காலத்தில் எனக்கு பிரபுசாலமன் நல்ல ரோல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் அந்த இழப்பை சரிகட்டும் வகையில் இந்த மியாவ் படத்தில் எனக்கு வெயிட்டான வேடம் கிடைத்துள்ளது. இது எனது திரைப்பயணத்தில் திருப்புமுனை படமாக அமையும்.
நான் 125 படங்கள் வரை நடித்திருந்தபோதும் வடிவேலுவின் காமெடி மூலமாகத்தான் மக்களுக்கு பரிட்சயமான நடிகராக இருக்கிறேன். இந்நிலையில், சுராஜ் இயக்கத்தில் நடித்துள்ள கத்திச்சண்டை, பி.வாசு இயக்கும் சிவலிங்கா ஆகிய படங்களிலும் தற்போது எனக்கு வாய்ப்புக்கொடுத்துள்ளார் வடிவேலு. அதனால் வடிவேலுவின் ஆசீர்வாதத்தினால் மறுபடியும் அதிக படங்களில் காமெடியனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறேன்.
மேலும், கத்திசண்டை படத்தில் நடித்தபோது, டெலிபோன் ராஜ் நல்ல திறமையான நடிகர் என்று வடிவேலுவே டைரக்டர் சுராஜிடம் சொல்லியிருக்கிறார். இது எனக்கு பெருமையாக இருந்தது. அதோடு, மற்றவர்களிடம் எனக்கு சிபாரிசும் செய்கிறார் வடிவேலு. அதனால் வடிவேலுக்கு காலத்துக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
எனக்கு வாய்ப்பே தரவில்லை என்றாலும் எனக்கு எப்போதுமே பிடித்தமான நடிகர் வடிவேலுதான் என்று சொல்லும் டெலிபோன்ராஜ், தற்போது மியாவ், தொடரி, மல்லி, முப்பரிமாணம், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க, பேய் இருக்கா இல்லியா, ஜெயிக்கிற குதிரை, அழகான நாட்கள், என்னதான் உன் கதை, ஒரு சொல் உள்பட 15 படங்களில் நடித்து வருகிறார்.