வவுனியா வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்!

வவுனியா வடக்கு கச்சல் சமளங்குளத்தில் நடைபெறும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தையும், பௌத்த மத ஆக்கிரமிப்பையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்டத்தின் ஒரு பகுதியான வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவு எல்லைக்குட்பட்ட கச்சல் சமளன்குளம் சீரமைக்கப்படுவதாகவும், அக்குளத்தின் கீழ் உள்ள காணிகள் அப்பிரதேசத்திற்கு வெளியேயிருந்து கொண்டு வந்து குடியேற்றப்படும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அங்கு குளத்தினருகே வாடி அமைத்து ஒரு சில பெளத்த குருமாரும், ஊர்காவல்ப்படை மேற்சட்டை அணிந்த சிலரும், சாதாரண உடையிலிருந்த சிலரும், கமநலசேவைத் திணைக்கள அனுராதபுர அதிகாரிகளும் இருப்பதை நேரில் சென்று அவதானித்தேன்.

கமநலசேவைத் திணைக்கள அதிகாரிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திய அதிகாரிகள், குளத்தைச் சீரமைப்பதாகவும், அதனூடாக சுமார் 200 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

குளத்தின் அணைக்கட்டின் கீழ் தொல்பொருள் சான்றுகள் என ஊகிக்கக்கூடிய கருங்கற்களாலான எச்சங்களையும் காணக்கூடியதாக இருந்தது. தொல்பொருள் அடையாளமாகக் காணக்கூடிய மண்மேடு ஒன்றில் சிமேந்திலான புத்த பெருமானுடைய திருவுருவச்சிலை இரண்டும் அண்மையில் வைக்கப்பட்டுள்ளது.

குளத்தை அண்டிய காட்டுப்பிரதேசம் ( ஊற்றுக்குளம் மற்றும் கச்சல் சமளன்குளத்திதுக்கு இடைப்பட்ட காட்டுப்பிரதேசம்) பல துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு பகுதியளவில் சிறுகாடுகள் துப்பரவு செய்யப்பட்டு சிறு குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குளத்தை சீரமைப்பதற்கான அனுமதி கமநலசேவைத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதா?
வயல்களை அமைக்கும் நோக்கத்திற்காக காடுகள் அழிப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா?

பூம்புகார் மற்றும் புதியவேலர் சின்னக்குளம் போன்ற குளங்கள் அரச நிதியில் சீரமைப்புச் செய்யப்பட்டு இன்றுவரை அக்குளங்களுக்குக் கீழ்வரும் காணிகளில் பயிற்செய்கை மேற்கொள்ள வனவளத்தினைக்களம் அனுமதி வழங்கவில்லை.

மேற்கூறப்பட்ட காணிப் பகிர்ந்தளிப்பானது பிரதேச செயலாளர் வவுனியா வடக்கு அவர்களால் எவ்வடிப்படையில் அல்லது பயனாளர் தெரிவு எவ்வடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது?

தொல்பொருள் திணைக்களம், தொல்பொருள் சின்னங்களை உள்ளபடி பாதுகாப்பதற்கு மேலதிகமாக எவ்வடிப்படையில் ஒரு மதம் சார்ந்த வழிபாட்டு உருவச்சிலைகளை அங்கு வைத்துள்ளது? அச்சிலைகள் அவர்களால் வைக்கப்படவில்லையாயின் சிலை வைப்பதற்கும் அப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும் அனுமதியளித்தது யார்?

மேற்கூறிய சட்டத்திற்குப் பிறழ்வான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். எமது மாவட்டத்தில் மூவின மக்களும் சம அந்தஸ்தோடு வாழுவதற்கும் , சமூகங்களிற்கிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் ஆவன செய்ய வேண்டும்- என்றுள்ளது

கடிதத்தின் பிரதிகள் நாடாளுமன் உறுப்பினர்கள், மாகாணக்காணி ஆணையாளர், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், கமநல சேவைத் திணைக்கள உதவி ஆணையாளர், மாவட்ட வனவளத்திணைக்கள அதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.