அரசியல் தெரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்!- நடிகர் கார்த்தி

ஊடகங்களை வெவ்வேறு தரப்பினரும் எப்படிப் பார்க்கிறார்கள்? ஊடகங்களிடம் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? இப்படி ஒரு கேள்வியுடன் ‘ஊடகங்கள்… ஊடலும் உறவும்!’ எனும் கலந்துரையாடலை நடத்தியது ‘இந்து தமிழ்’ நாளிதழ். ஈரோட்டில் சில நாட்களுக்கு முன் ‘சக்தி மசாலா’ நிறுவனம் நடத்திய ஐம்பெரும் விழாவின் ஊடாக நடந்த முதல் கலந்துரையாடலில் பங்கேற்றவர் நடிகர் கார்த்தி. வேளாளர் பொறியியல் கல்லூரி வளாகத்தில், மாணவ – மாணவியர் உற்சாகமான ஆர்ப்பரிப்பின் நடுவே ‘இந்து தமிழ்’ நாளிதழின் முகவர்கள் – விற்பனையாளர்கள், வாசகர்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், கார்த்தியுடன் கலந்துரையாடினார் ‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ். திறந்த மனதோடு, மிக வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பதில் அளித்த கார்த்தியின் அணுகுமுறை வாசகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

சமஸ்: ஊடகங்களை மக்களோடு மேலும் பிணைக்கும், மேலும் மக்களுக்கானதாக ஆக்கும் நோக்கத்தோடு நடக்கும் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஈரோட்டில் ‘இந்து தமிழ்’ நடத்துவது சாலப் பொருத்தமானது; பெருமிதத்துக்குரியது.

ஏனென்றால், இந்தியா குடியரசான எழுபதாமாண்டு நெருங்கும் நிலையிலும், இன்னும் ஜனநாயகத்துக்கும் குடியரசுக்குமே என்ன வேறுபாடு என்று தெரியாதவர்கள் பெரும்பான்மையினராக வாழும் நாட்டில், 1925-ல் பிரிட்டிஷாரின் காலனிய ஆட்சிக் காலத்திலேயே பெரியாரால் ‘குடிஅரசு’ பத்திரிகை தொடங்கப்பட்ட ஊர் ஈரோடு. அந்தக் குடியரசுத்தன்மையை மேன்மேலும் வளர்த்திடும் நோக்கில்தான் இப்படியான ஒரு கலந்துரையாடலுக்குத் திட்டமிட்டோம்.

இது ஒரு முயற்சி. சமூகத்தில் வெவ்வேறு தரப்பினரைப் பற்றியும் வெவ்வேறு தரப்பினர் கொண்டிருக்கும் அபிப்ராயங்களைப் புரிந்துகொள்ள முற்படும் முயற்சி. நாம் நடிகர் கார்த்தியுடன் உரையாடுவோம். கார்த்தி, உங்களுடைய வாழ்க்கையில் முதன்முதலில் நீங்கள் பார்த்த பத்திரிகை எது? எந்த வயதிலிருந்து வாசிக்க ஆரம்பித்தீர்கள்?

கார்த்தி: பாடப்புத்தகத்தைக் கண்டே பயப்படுபவன் நான். புத்தகம் என்றாலே பயம்தான். அப்பா நிறைய வாசிப்பார் என்பதால், வாசிப்பை வலியுறுத்துவார். அதிகபட்சமாக நான் எடுத்துப் படித்தது ‘டிங்க்கிள்’ இதழாகத்தான் இருக்கும். அதில் நிறையப் படங்கள் இருக்கும். அப்புறம் சினிமா பாட்டுப் புத்தகங்கள். வீட்டில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வாங்குவார்கள். பத்தாம் வகுப்புக்கு மேல் கட்டாயம் செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகை வாசிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார் அப்பா. ஆனால், ‘தி இந்து’வில் நான்கு வார்த்தைக்கு மேல் படித்தால், பத்து முறை ஆங்கில அகராதியைப் பார்க்க வேண்டி வரும். ஆக, வலுக்கட்டாயமாக, ‘தி இந்து’வுடன்தான் என்னுடைய உறவு தொடங்கியது. அதற்குப் பிறகும்கூட, பத்திரிகை வாசிக்கும் பழக்கம் குறைவாகத்தான் இருந்தது. தேடல் என்று தொடங்கியது படிப்பதற்காக நான் அமெரிக்கா சென்றதற்குப் பிறகுதான்.

அமெரிக்கா போன பின்புதான் எனக்கு எதுவும் தெரியவில்லை என்பது எனக்குத் தெரிந்தது. ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்றால், அது சம்பந்தமாக ஆழ்ந்த புரிதல் இல்லை; இப்படியே காலத்தைத் தள்ள முடியாது என்று புரிந்தது. வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால், இன்றைக்கும் என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றி நான் தெரிந்துகொள்வது குறைவுதான் என்ற வருத்தம் இருக்கிறது.

சமஸ்: உங்கள் வாழ்வில் நீங்கள் முதன்முதலில் சந்தித்த பத்திரிகையாளர் யார்? என்ன மாதிரியான பார்வை பத்திரிகையாளர்கள் மீது அப்போது உருவானது?

கார்த்தி:  அப்பா எல்லோரையும் அறிமுகப்படுத்தும்போதே மரியாதையாகத்தான் அறிமுகப்படுத்துவார். ‘சார்’ என்று சொல்லிக்கூட இல்லை; ‘மாமா’ என்று சொல்ல வேண்டும் என்பார். ‘தினத்தந்தி’ பாண்டியன் மாமாதான் எனக்குப் பத்திரிகையாளராக அறிமுகமானவர். ஆச்சரியமாகத்தான் பார்த்தேன்.

சமஸ்: உங்கள் அப்பா சிவகுமார் உங்கள் சிறுவயதில் அவருடைய புகழின் உச்சத்தில் இருக்கிறார். உங்கள் கல்லூரிப் பருவத்தில் உங்கள் அண்ணனும் – சூர்யா – நடிகர் ஆகிவிடுகிறார். ஒரு பிரபலமான குடும்பத்தில் பிறந்ததாலேயே நீங்கள் பத்திரிகையைப் படிக்கும்போது அதில் இடம்பெறும் பிரபலங்கள் பலர் உங்கள் அன்றாட வாழ்க்கையில் உங்களுக்கு அறிமுகமானவர்களாக இருந்திருப்பார்கள். இந்தச் சூழலில், ஊடக வெளிச்சத்தை நீங்கள் எப்படிப் பார்த்தீர்கள்?

கார்த்தி: அப்பா நாங்கள் ஊடக வெளிச்சத்துக்கு வெளியே இருக்க வேண்டும் என்பதில் ரொம்பக் கவனத்துடன் இருந்தார். நாங்கள் இயல்பாக, சாதாரணமான சூழலில் வளர வேண்டும் என்று அவர் நினைத்தார். சினிமா ஆடம்பரமோ, பரபரப்போ இல்லாமல்தான் நாங்கள் வளர்க்கப்பட்டோம். நடுத்தரக் குடும்பச் சூழலில்தான் நாங்கள் வளர்ந்தோம். கல்லூரி இறுதியாண்டு வரை நான் சைக்கிளிலும் பஸ்ஸிலும்தான் சென்றுவந்தேன். சினிமா ஷூட்டிங் பார்க்கக்கூட அதிகம் அழைத்துச் செல்ல மாட்டார். அதனால், பத்திரிகை நண்பர்களோ, புகைப்படக் கலைஞர்களோ எங்களைச் சந்திப்பதை அப்பா ஊக்குவித்ததில்லை. நான் நடிக்க வந்த பிறகுதான் பத்திரிகையாளர்களைச் சந்தித்தேன் என்பதால், ஊடக வெளிச்சம் என்பதே பின்னர்தான் தெரிந்தது.

தொடக்கக் காலங்களில் பேட்டியின்போது பயங்கர பதற்றமாகிவிடும். ‘எதுவும் தவறாகப் பேசிவிடக் கூடாது. எதாவது, ஒரு சின்ன தவறு செய்தோம் என்றால்கூடப் பிரச்சினையாகிவிடும்’ என்று பயமாகவே இருக்கும். அதனால், எந்தக் கேள்வி கேட்டாலும்,  ‘பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ்’ சார்ந்தே பதில் சொல்வேன். இதையன்றி வேறொரு கதையும் எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. ரஜினியின் ஆரம்பக் காலங்களில், ‘பொம்மை’ பத்திரிகையில் ஒரு பேட்டி வெளியானதாம். ரொம்ப வெளிப்படையாக மனதில் பட்டதையெல்லாம் பேசியிருந்தாராம் ரஜினி. பாலசந்தர் படித்துவிட்டு ரஜினியிடம் சொன்னாராம், “பத்திரிகைகள்கிட்டே ஒரு ஜாக்கிரதை வேணும். குறைவாத்தான் பேசணும்!” அப்பா என்னிடம் இதைச் சொன்னபோது எனக்கான அறிவுரை இது என்றும் எடுத்துக்கொண்டேன்.

சமஸ்: உங்களைப் பற்றி பத்திரிகையில் வெளிவந்த சங்கடமான செய்தி எது? அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எப்படி எதிர்கொண்டீர்கள்?

கார்த்தி: சினிமாவுக்கு வரும் எவருக்குமான முதல் சர்ச்சைச் செய்தி காதல் கிசுகிசுதான். “கிசுகிசுக்களுக்குப் பதில் அளிப்பது என்று முடிவெடுத்துவிட்டால் வாழ்நாளை முழுக்கவும் பதில் சொல்வதற்கு என்றே செலவிட வேண்டியதுதான்” என்று அப்பா ஏற்கெனவே சொல்லியிருந்தார். அதனால், கிசுகிசுக்களை அலட்சியமாகத்தான் கடந்தோம். ஆனால், ஏன் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்ற சங்கடமும் எழத்தான் செய்யும்.

சமஸ்: ஊடகங்களில் உள்ள குறைபாடுகளில் ஒன்று இது, தனி மனிதர்களின் அந்தரங்கங்களைப் பற்றி – அதுவும் அவதூறாக எழுதுவது என்பது. சமூக வலைதளங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டன. ஒரு ஆறுதல் நம்மூர் சூழலில் இது கொஞ்சம் குறைவு…

கார்த்தி: நிச்சயமாக. நான் வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது பார்க்கிறேனே, அதுவும் வடநாட்டில் இந்த ‘பாப்பராஸி கலாச்சாரம்’ ரொம்ப மோசம். ஒரு இடத்தில் நிம்மதியாகச் சாப்பிடக்கூட முடியாது. புகைப்படக்காரர்கள் துரத்திக்கொண்டே இருப்பார்கள். வக்கிரத்தை, வன்முறையைப் பரப்பும் செய்திகளும்கூட அங்கே அதிகம் என்று என் நண்பர்களிடம் அடிக்கடி சொல்வேன். ஆனால், அந்தக் கலாச்சாரம் தமிழ்நாட்டுக்கும் வந்துவிடுமோ என்ற பயம் சமீப காலமாக எழுகிறது.

ஊடகப் போட்டி, வியாபார நோக்கம்தான் எல்லாவற்றையும் பரபரப்பாக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது. இப்படியான பரபரப்பான சூழலிலேயே வளரும் அடுத்த தலைமுறையின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற பயமும்கூட ஏற்படுகிறது. ஊடகங்கள் மக்களுக்கானதாக இருந்த காலம் போய், முழுக்க வியாபாரத்துக்கானவையாக மாறிவிடுமோ என்ற கலக்கமும்கூட ஏற்படுகிறது.

சமஸ்: உண்மைதான். அடிப்படையில் இதுவும் ஒரு தொழில் என்ற வகையில் வருமானத்தின் மீதான கவனம் தவிர்க்க முடியாதது. ஆனால், விளம்பரமும் வியாபாரமுமே பிரதானம் என்றாகிவிட்டால், சிக்கல்தான். இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். பத்திரிகைகளின் வரலாறு வியாபாரச் சமூகத்துடனும், விளம்பர நோக்கங்களுடனும்தான் தொடங்கியது. சில ஆண்டுகளுக்கு முன்புகூட “நாங்கள் விளம்பரங்களுக்காகப் பத்திரிகை நடத்துகிறோம். கூடவே கொஞ்சம் செய்திகளும் வெளியிடுகிறோம்” என்று இந்தியாவின் பெரிய பத்திரிகை ஒன்றின் அதிபர் சொன்னதை இங்கே நினைவுகூரலாம்.

பத்திரிகைகளை மக்கள் வாங்க வாங்க, அதன் பிரதான வாசகர்களாக எந்தத் தரப்பு மாறுகிறதோ அவர்களுக்கேற்ப பத்திரிகையின் பண்பும் மாறுகிறது. அந்த வகையில், பத்திரிகைகளை மக்கள் பத்திரிகைகளாக மாற்ற வாசகர்களின் தொடர் விமர்சனங்களும், இடையீடும் முக்கியம் என்றே தோன்றுகிறது. நீங்கள் சொன்ன விஷயம் மிக முக்கியமானது. ஊடகத் துறை தன் பொறுப்பை உணர வேண்டும். நான் எனக்கும், எங்களுக்கும் சேர்த்தே சொல்லிக்கொள்கிறேன்…

கார்த்தி: சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் எனக்கே இங்கு ஒரு படம் என்ன செய்கிறது என்று தெரியாது. ரசிகர்களை அதிகம் கவர வேண்டும் என்பதற்காகச் சண்டைகளில் மேலும் மேலும் ரத்தம் தெறிக்கவிட்டோம்.

ஒருமுறை வயதான மருத்துவர் ஒருவர் என்னைச் சந்தித்தபோது என்னிடம், “எதற்கு சினிமாவில் இவ்வளவு வன்முறை?” என்று கேட்டு சில விஷயங்களை விளக்கினார். அதற்குப் பிறகுதான் தவறைப் புரிந்துகொண்டு, திருத்திக்கொள்ளத் தொடங்கினேன். மக்கள் இது கற்பனை என்று நன்றாக உணர்ந்திருக்கும் சினிமாவில் வெளிப்படும் வன்முறையே அவர்கள் மனதில் அவ்வளவு தாக்கத்தை உண்டாக்கும் என்றால், மக்கள் உண்மை என்று நம்பும் ஊடகங்களில் வெளிப்படும் வன்முறை எவ்வளவு தாக்கத்தை உண்டாக்கும்? ஆனால், இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று எனக்குத் தெரியவில்லை.

சமஸ்: என்ன தீர்வு, நீங்கள் உங்கள் துறையின் தவறை உணர்ந்து திருந்துவதுபோல, ஊடகத் துறையில் இருப்பவர்களும் தங்கள் துறையின் தவறை உணர்ந்து திருந்துவதுதான் தீர்வு. ஆனால், இது பெரிய சவால்தான். ஏனென்றால், ஊடகங்கள் என்று நாம் குறிப்பிடுவது ஊடகவியலாளர்களால், ஊடக நோக்கங்களுக்காக மட்டும் நடத்தப்படுவதாக இன்று இல்லை. நவீன காலத்தில் ஒரு சமூகத்தின் புத்தியைக் கட்டமைக்கும் இடத்தில் ஊடகங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன.

இதை உணர்ந்திருப்பதால்தான், ஊடகத் துறையின் முக்கியத்துவம், அதன் தாக்கத்தின் வீச்சைப் புரிந்துகொண்டிருப்பதால்தான் பெரிய வியாபார நிறுவனங்கள் தங்கள் வியாபார நலனுக்கென்று, தங்களைத் தற்காத்துக்கொள்ள ஊடகங்களைத் தொடங்குகின்றன. ஒருவரின் அந்தரங்க வாழ்வைப் பற்றி இன்று ஒரு செய்தி வருகிறது என்றால், பரபரப்பு வியாபாரம் மட்டும் இன்று அதன் பின்னணியில் இல்லை. அவருடைய அரசியல் அல்லது துறைசார் எதிரிகளால் திட்டமிட்டுப் பரப்பப்படும் செய்தியாகவும் அது இருக்கலாம் என்ற சூழலும் மிகுந்திருக்கிறது. ஊடகங்கள் மேலும் மேலும் பணமயமாகும்போது ஊடகவியலாளர்களின் கட்டுப்பாடு அங்கே தளர்ந்துவிடுகிறது. ஊடகங்கள் மக்கள்மயமாவதும் இதற்கு ஒரு தீர்வாக அமையலாம்… ஆனால், எப்படியும் பொறுப்புணர்வு வேண்டும், சுய கட்டுப்பாடு வேண்டும்.

கார்த்தி: உண்மைதான், நல்லதோ, கெட்டதோ; பத்திரிகைகள் ஒன்றை எழுதும்போது சில வார்த்தைகள் மக்களிடம் அப்படிப் போய் ஒட்டிக்கொள்கின்றன. ‘பருத்திவீரன்’ வந்தபோது, “மிகச் சிறப்பான அறிமுகம் – ‘பராசக்தி’ சிவாஜிக்குப் பிறகு!”  என்று ஒரு பத்திரிகையில் எழுதினார்கள். அதன் பிறகு பல வருஷங்களுக்கு நான் எந்த ஊர் போனாலும், இந்த வார்த்தைகளைச் சொல்லித்தான் மக்கள் அறிமுகப்படுத்துவார்கள்.

சமஸ்: திரைப்படத் துறை என்பது சில சமயங்களில் பல நாட்கள் தொடர்ந்து ஷூட்டிங் நீடிக்கக்கூடிய, சில நாட்களில் இரவெல்லாம் உழைக்க வேண்டிய, வெளியூர்களில் அதிகம் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ள ஒரு தொழில். இந்தத் தொழில் கலாச்சாரத்தில் நேரத்தை எப்படிக் கையாள்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தினருடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? உங்கள் வாசிப்பு எப்படியானதாக இருக்கிறது?

கார்த்தி: ரொம்பக் கஷ்டம். நேரம், காலம், உழைப்பு என்பதையெல்லாம் தாண்டி ஒரு சினிமாவுக்காக அந்தப் பாத்திரமாகவே மாற வேண்டிய தொழில் இது. மனது முழுக்க அங்கே இருக்க வேண்டும். வீட்டில் பிரச்சினை இருக்கலாம், இரவெல்லாம் தூக்கமின்றிப் பயணித்திருக்கலாம், ஆனால், காதல் காட்சியில் முகத்தில் மகிழ்ச்சி பொங்க நடிக்க வேண்டும்.

இப்போதோ நம் மனம் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுகிறது. வேலை செய்யும்போதும் வேலையைப் பற்றி யோசிக்கிறோம். வீட்டுக்கு வந்த பிறகும் வேலையைப் பற்றி யோசிக்கிறோம். அப்படி ஒரு காலத்தில் இருக்கிறோம். கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் நான் சென்னையில் இருந்ததே, 150 நாட்கள்தான். மீதி நாட்கள் முழுக்க வெளியூர். அப்படியென்றால், என் மகள் வளர்வதை நான் பார்க்கவே இல்லை.

அவளுடைய மூன்று முதல் நான்கு வயது வரை நான் அவள் அருகிலேயே இல்லை. இழந்தது இழந்ததுதான். ஒன்றை இழக்காமல், இன்னொன்று கிடைப்பது இல்லை என்று வேலைக்காக கழித்த நாட்களைக்கூட நியாயப்படுத்திக்கொள்ள முயலலாம். ஒரு நாளைக்குப் பல மணி நேரங்களை செல்பேசியில் வாட்ஸ்அப் பார்க்கச் செலவிடுவதை எப்படி நியாயப்படுத்துவது? செல்பேசி பெரிய வில்லனாகிவிடுகிறது.

எனக்குத் தெரிய எல்லா வீடுகளிலும், “திருமணத்துக்கு முன் சுற்றிச் சுற்றி வந்தீர்கள், திருமணத்துக்குப் பின் எனக்கு நேரமே கொடுப்பதில்லை” என்பது பெண்களின் புகாராக ஒலிக்கிறது. வீட்டுக்கு வந்தாலும், வேலைக்குப் போனாலும் செல்பேசியை நோண்டிக்கொண்டேயிருப்பது ஒரு வியாதியாகியேவிட்டது. ஆண் – பெண் இருபாலருக்குமே. நானே யோக்கியம் இல்லை. செல்பேசியைப் பெரிய எதிரியாகத்தான் என் மனைவி பார்க்கிறார். ஒன்றும் இல்லாவிட்டாலும் ‘வாட்ஸ்அப்’பை நூறு தடவை திறந்து பார்க்கும் தவறை நானும் செய்கிறேன். என் வாசிப்பு நேரத்தையும்கூட அது பறித்துக்கொண்டிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் விடுபடப்பார்க்கிறேன். பேன் பார்க்கிற மாதிரி ஒரு வியாதியாகிவிட்டது இது. நாம் செல்பேசிக்கு அடிமையாகிவிட்டோம். “செல்பேசியை நோண்டுவது ஒரு கெட்டபழக்கம்” என்பதைச் சொல்லிக்கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருப்பதாக நினைக்கிறேன்.

சமஸ்: தமிழ்நாட்டு நடிகர்களுக்கு ‘முதல்வர் கனவு’ என்பது பிறப்புரிமை மாதிரி ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், மக்கள் பிரச்சினைகளில் துணிச்சலாகக் குரல்கொடுப்பவர்கள், உண்மையான அரசியல் பேசுபவர்களை இங்கே தேட வேண்டியிருக்கிறது. சினிமாவில் அரசியல் வசனம் பேசுவதில் ஈடுபாடு காட்டாதவரான சூர்யாவின் சில இடையீடுகளை விதிவிலக்காகச் சொல்லலாம். ‘இந்து தமிழ்’ நாளிதழில் தூத்துக்குடி படுகொலை, ‘நீட்’ தேர்வு ஆகியவற்றை எதிர்த்து அவர் எழுதிய கட்டுரைகள் ஒரு நல்ல இடையீடு. ‘அகரம் அறக்கட்டளை’ மூலம் அவர் ஆற்றும் கல்விப் பணி ஒரு நல்ல இடையீடு. நீங்கள் சூர்யாபோல விமர்சிப்பதில்லை. ஏன்?

கார்த்தி: உண்மையைச் சொல்லட்டுமா, எனக்கு அவ்வளவு விஷயம் போதாது என்று நினைக்கிறேன். சமூக ஊடகங்கள் வந்த பின்னர், “என்ன சார், இவ்வளவு அநியாயம் நடக்கிறது. நீங்கள் ஒரு ‘ட்வீட்’கூடப் போடவில்லையா?” என்று பலர் பல சமயங்களில் கேட்பதுண்டு. எல்லாவற்றுக்கும் நடிகர்கள் எதிர்வினையாற்ற வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். நடிகராக இல்லாவிட்டாலும் குடிமகனாகவும்கூட இந்த எதிர்பார்ப்பு நியாயமானதுதான். ஆனால், எது சரி, தவறு என்று ஓரளவுக்குதான் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் என்னுடைய அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயத்தில் வாயை மூடிக்கொண்டிருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.

ஒரு பிரச்சினை நடக்கும்போது ஊடகங்களில் விஷயம் தெரிந்தவர்கள் பேசாமல் இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்தோ, அதைவிடவும் பெரிய ஆபத்து விஷயம் தெரியாதவர்கள் பேசுவது. சூர்யாவுக்குச் சில விஷயங்களில் விஷயம் தெரியும் என்பதால், அவர் பேசுகிறார். எனக்குப் போதாது என்பதாலேயே தவிர்க்கிறேன். ஆனால், இந்த மாதிரியான இடையீடு முக்கியம் என்று நினைக்கிறேன். அதனால்தான் நடிகர் சங்க விவகாரத்தில் தலையிட்டேன். த.செ.ஞானவேல் அண்ணன் தந்த உந்துதலில் சூர்யா கல்விக்குச் செய்வதுபோல விவசாயத்தில் எனக்கு அக்கறை உண்டு. அதனால்தான், ‘உழவன் அறக்கட்டளை’யை உருவாக்கினோம்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவரவர் தனிப்பட்ட விஷயம். ஆனால், அரசியல் தெரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம். ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்தபோது, இயக்குநர் பா.இரஞ்சித், ‘சமூக அரசியல்’ என்று ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினார்.  “சமூக அரசியல் என்றால் என்னவென்றே எனக்குப் புரியவில்லை” என்று அவரிடம் சொன்னேன். எனக்கு அவ்வளவுதான் அரசியலறிவு இருக்கிறது என்பது வெட்கம் தரும் விஷயம்தான். ஆனால், இப்படியுள்ள ஒவ்வொருவருக்கும் அரசியல் சொல்லித்தர வேண்டிய சூழல் இன்று உள்ளது. அரசியலுணர்வை யாரோ ஊட்ட வேண்டியிருக்கிறது. நீங்கள் ஊடகங்கள் இதை முன்னெடுங்களேன், நடிகர்களைக்கூடப் பயன்படுத்துங்கள். என்னால் உதவ முடியும் என்றால், நானும் உதவுகிறேன்.

சமஸ்: மிக சந்தோஷமான விஷயம், நாங்கள் – இந்து தமிழ் நாளிதழ் – இதில் ஏற்கெனவே மிகுந்த அக்கறை காட்டிவருகிறோம். ‘அரசியல் பழகு’ என்று ஒரு தொடரையே மாணவர்களுக்காகப் பத்திரிகையில் வெளியிட்டோம். இப்படியான கலந்துரையாடல்கூட அதன் ஒரு பகுதிதான். உங்களைப் போன்ற கலைஞர்களும் ‘அரசியல் பழகு’ என்று இளைய தலைமுறையிடம் பேசும்போது இந்தப் பணி மேலும் உத்வேகம் பெறும். தங்கள் வெளிப்படையான கருத்துகளுக்கு மிக்க நன்றி. மக்களுக்கானதாய், மக்கள் நலனை மையப்படுத்துவதாய் ஊடகங்கள் மாறட்டும். நன்றி.

– எஸ்.கோவிந்தராஜ்,

தொடர்புக்கு: govindaraj.s@thehindutamil.co.in