வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உடனான இரண்டாவது சந்திப்பு வியட்நாமில் இம்மாத இறுதியில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி செய்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறினர். இது உலக நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.
இந்நிலையில், வடகொரிய தலைவருடனான சந்திப்பு மற்றும் சந்திப்பு நடைபெறும் தேதியை டிரம்ப் உறுதி செய்துள்ளார். நாடாளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றிய டிரம்ப், வடகொரியா விஷயத்தில் இன்னும் நிறைய வேலைகள் இருப்பதாகவும், ஆனாலும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் நல்ல நட்புறவு நீடிப்பதாகவும் கூறினார்.
மேலும், வியட்நாமில் வரும் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் வடகொரிய தலைவரை சந்தித்து பேச உள்ளதாகவும் டிரம்ப் அறிவித்தார்.