யாழ்ப்பாணத் தமிழர் மத்தியில் நிலவிவரும் அபிப்பிராயங்களில் ஒன்று யாழ்ப்பாணம் இலங்கைத் தீவின் தலை என்பது. தலைப் பகுதியில் வாழ்பவர்கள் நாட்டின் போக்கைத் தீர்மானிப்பர் என்று தமிழர்கள் நினைக்கின்றனர். இது சற்று அபரிமிதமான கற்பனை என்பதைத்தான் கடந்த 70ஆண்டுகள் நிரூபித்துள்ளன.
யாழ்ப்பாணத் தமிழரின் 100வீதத் திறமையையும் கொழும்புடன் ஒப்பிடும்போது 15வீத அடைவுகூட இல்லை. தென் னிந்தியாவில் இருந்து ஆரம்பக் குடியிருப்புகள் நிகழ்ந்தபோது பூநகரி, மன்னார்ப் பகுதிகளுக்கு ஊடாகவே மக்கள் இலங்கைத் தீவுக்குள் நுழைந்த தற்கான ஆதாரங்கள் உண்டு.
ஆதி மக்கள் நீர் நிலைகளை அண்மித்தே தமது குடியிருப்புகளை அமைத்தனர். அவ்வாறு பார்க்கும்போது ஆறுகளோ, நீர்த் தேக்கங்களோ, குளங்களோ இல்லாத யாழ்ப்பாணத்தில் ஆதி மக்கள் குடியேறவில்லை. யாழ்ப்பாணத்தின் அமைவிடத்தை நோக்கும்போது அது ஒரு வகை யில் கொழும்பின் கொல்லைப் புறமே.
ஏனைய மக்கள் இலகுவாக வந்துபோகும் இடமும் அல்ல(திருகோணமலை போல இல்லை). இந்தக் கொல்லைப்புற வாழ்க்கைதான் யாழ்ப்பாணத் தமிழரை ஓரம் கட்டிய முக்கிய காரணியாகும்.
தமிழர்களுக்குள் பிரிவினை
யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தமது உறக்காரருடன் பழகிக் கொள்வது என்பது குறித்துப் பல தீர்க்கங்க ளைக் கொண்டிருக்கிறார்கள். ‘ஓடும் புளியம் பழமும்போல’ எனும் பழமொழியையும் அதன் ஓர் அங்க மாகக் குறிப்பிடலாம்.
புளியம்பழத்தில், ஓடும் உள்ளிருக்கும் புளியும் ஒன்றாக இருப்பதுபோல தெரிந்தாலும் அவை இரண்டுக்கும் ஒட்டுறவு இல்லையென்பதே அதன் அர்த்தம். தமது சொந்தக்காரர்களுடன் ஓடும் புளியம் பழமும்போல இருக்க நினைக்கும் ஓர் இனம் ஏனைய மதத்தவர்களுடனும், இனத்தவர்களுடனும், வேறு மொழிகளைச் சார்ந்தவர்களுடனும், வேறு பிரதேசத் தைச் சார்ந்தவர்களுடனும் நல்லுறவைப்பேணி வாழ்வார்கள் என்பதை முழுவதுமாக எதிர்பார்க்க முடியாது. இதுவே யாழ்ப்பாணத் தமிழரின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. இதன் மறுதலையான ஒரு யதார்த்தத்தைக் கேரள மக்களிடம் காண முடியும்.
சிங்களத்தை எதிர்த்தவர்கள் ஏன் ஆங்கிலம் கற்கவில்லை?
1956ஆம் ஆண்டில் பண்டாரநாயக்காவால் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்த தமிழர்கள் சிங்களம் படிப்பதில்லை என்று கூறியது நியாயமானது. ஆனால், தமிழர்கள் ஏன் ஆங்கிலத்தைக் கற்கவில்லை? 2009 ஆம் ஆண்டுக்குப் பின்பான வட மாகாண அலுவலகங்களில் ஆங்கில, சிங்கள அறிவு இல்லாததன் காரணத்தால் கொழும்பு நிர்வாகத்துக்குச் சமதையாகச் செயற்பட முடியவில்லை.
வலிகாமம் கல்வி வலயத்தில் கடமையாற்றிய ஓர் ஆசிரியை 2016ஆம் ஆண்டில் உரிய முறையில், உரிய வரைமுறைகளுக்கு உட்பட்டு ஓய்வூதியத்துக்கான தகுதியைப் பெற்றபோதிலும் 2018ஆம் ஆண்டில்தான் (ஒன்றரை வருடங்களின் பின்பு) அவரால் தனக்கான ஓய்வூதியத்தைப் பெற முடிந்தது. இதற்குக் காரணம் கல்வி வலய நிர்வாக உத்தியோகத்தருக்குத் தமிழைத் தவிர வேறு மொழிகள் தெரியாதமையும், கொழும்பிலுள்ள அதிகாரிகளுக்குத் தமிழ் தெரியாமல் ஆங்கிலமும், சிங்களமும் தெரிந்திருக்கின்ற மையுமே. குறிப்பிட்ட ஆசிரியையின் ஆவணங்கள் கொழும்பு ஓய்வூதியத் திணைக்களத்திட மிருந்து 4 தடவைகள் திருப்பி அனுப்பப்பட்டு இழுபறிநிலைக்குட்பட்டுள்ளது. இந்த ஆசிரியரைப்போலத்தான் இங்குள்ள ஓய்வூதியர்கள் பலரின் ஓய்வூதியங்களின் நிலையும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஓய்வூதிய விடயம் மாத்திரமன்றி இன்னும் பல விடயங்கள் இதனால் இழுபறிக்குட்படுவது நிகழ்ந்தே வருகிறது.
சிங்களவர்கள் இறக்குமதி செய்யப்படலாம்…!
வடக்குக்கான புதிய ஆளுநரின் மும்மொழிக் கொள்கையை நடைறைப்படுத்தும்போது மேற்கூறிய சிக்கல்களைத் தவிர்க்க முடியும். ஆனால், இத்தகைய மும்மொழி ஊழியர்களை யாழ்ப்பாணத்துக்கு வெளியில் இருந்தே இறக்குமதி செய்யவேண்டியிருக்கும். தற்போதுள்ள தமிழ் உத்தியோகத்தர்கள் ஆங்கிலமோ, சிங்களமோ கற்றுத்தேறிப் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது முயற்கொம்பு. இந்த நிலையில் சிங்கள மொழியில் பணியாற்றக்கூடிய ஒருவர் தமிழ்ப் பகுதிகளின் சகல அலுவலகங்களுக்கும் நியமிக்கப்பட வாய்ப்புண்டு.
இதன் மூலம் ஒய்வூதியம் பெறுவதில் ஒன்றரை வருடகால தாமதங்கள் தவிர்க்கப்பட்டு ஒரு மாதத்துக்குள் அவற்றைப் பெறும் வாய்ப்பு மக்களுக்கு ஏற்படும். இது விடயத்தில் தமிழர் ஆங்கிலம் கற்காதது தமது தலையில் தாமே மண் அள்ளிக் கொட்டியதாகவே இருக்கும். தமிழருக்கு உரிமைகளை வழங்கினால் அரசுடன் இணைந்து செயற்படலாம் என வடக்கின் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் அண்மையில் கூறினார். அவரது கையில் ஐந்து வருடங்களாக அதிகாரங்கள் இருந்தபோது மாகாண சபை ஓர் ஆடுகளமாக இருந்ததே தவிர, மக்களுக்குப் பணியாற்றும் மையமாக இருக்கவில்லை என்பதை அவர் சடுதியில் மறந்து பேசிய பேச்சு அது.
இலஞ்சம், ஊழலில் தமிழர் கெட்டிக்காரர்
வட பகுதித் தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே தேசிய அரசியலிலோ, தேசியப் பொருளாதாரத்திலோ பங்கெடுக்காது ஒதுங்கிக் கொண்டனர். இதனாலோ என்னவோ தேசிய ரீதியில் போட்டியிடக்கூடிய வல்லமையையும், அனுபவத்தையும் அவர்கள் இழந்துள்ளனர். ஆனால் இலஞ்சம், ஊழல் ஆகிய விடயங்களில் மிகவும் வினைத்திறன் மிக்கவர்களாக இருக்கின்றனர்.
இது தமிழ்ச் சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டது. அண்மையில் சுன்னாகம் பகுதியில் கைப்பற்றப்பட்ட எதனோல் என்கிற சாராய ஸ்பிறிட் மூலம் பல கோடி ரூபாய்களை ஒரு சிலர் உழைத்தார்களே தவிர யாழ்ப்பாணத்து மக்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என அவர்கள் எண்ணவில்லை. ‘‘தம்பி முந்நூறு ரூபாயான் ஒண்டு தா’’ என்று கேட்டு வாங்கி இத்தகைய தரம் குறைந்த சாராயங்களைச் சாதாரண கூலித் தொழிலாளர்கள் குடிப்பார்களே தவிர, அது என்ன சாராயம் என்று அறியவோ, கேட்கவோ போவதில்லை. குடித்தவுடன் வெறிக்க வேண்டும் என்பது அவர்களின் இலக்கு.
ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள திரையரங்குகளில் ‘என்ர ரைமன் பார்’ என்ற பகுதி அனுமதிக்கப்பட்டிருந்தது. பொழுதுபோக்கு என்ற ரீதியில் குறிப்பிட்டளவு போதைக்குட்படும்படியாக, நின்ற நிலையில் வாங்கிக் குடிக்கும் அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி மேசை, கதிரை போட்டு ஆற அமர்ந்து ஆறுதலாகப் போதையை அளவு கணக்கற்று ஏற்றிக் கொள்ளும் வசதிகளைத் திரையரங்குகள் தற்போது ஏற்படுத்தியுள்ளன. மது வரித் திணைக்களத்தினர் அதைக் கண்டு கொள்ளாது இருக்கின்றனர். தமிழரின் கையிலிருந்த அதிகாரங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதால் தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர். வயதான தாயோ இளம் பெண்ணோ தங்கச் சங்கிலி போட்டுக் கொண்டு வீதியில் நடமாட முடியாத சூழலே இன்றைய யாழ்ப்பாணத்தின் கந்த புராணக் கலாசாரம்.
சிங்களவரின் நகர்வு
தமிழரின் நிலை இவ்வாறிருக்கும்போது 2009ஆம் ஆண்டு வரை அநுராதபுரம் மகாபோதியுடன் தமது வடக்கு நோக்கிய பயணத்தை முடக்கியிருந்த சிங்கள மக்கள் தமது புனித யாத்திரையை ஜம்புகோளம், கந்தரோடை, நயினாதீவு நாகவிகாரை என நீட்டியுள்ளனர். அண்மையில் கிளிநொச்சி ரயில் நிலையத்துக்கு அருகில் அறிவியல் நகரை மையப்படுத்திப் புதிய ரயில் நிலையம் ஒன்று திறக்கப்பட்டது. இது தற்பொதுள்ள கிளிநொச்சி நகரின் முக்கியத்துவத்தைப் படிப்படியாகக் குறைக்கும். பல்கலைக் கழகம், வர்த்தக முதலீடுகள், பொருளாதார அபிவிருத்தி எனப் பல விடயங்கள் அறிவியல் நகருடன் இணைக்கப்பட்டுள்ளதால், அறிவியல் நகர் கிளிநொச்சி வாசிகள் அல்லாத
மக்களால், நிரப்பப்படவுள்ளது. இங்குள்ள பல்கலைக் கழகங்களுக்குத் தமிழ் மாணவர்கள் மிகவும் குறைவாகவே அனுமதிக்கப்படுகின்றனர். தமிழரின் சனத் தொகைப் பெருக்கத்திலும் கல்வியிலும் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக மிகக் குறைந்த வீதத்தையே நிரப்ப முடியும். அத்தோடு இந்தப்பெரு நகரத்துக்குத் தேவையான குடிநீரை இரணைமடுக்குளமே வழங்க வேண்டியிருக்கும். வறட்சியான பின் அரையாண்டு காலத்துக்கு நீர் பற்றாக்குறை கிளிநொச்சி எங்கும் காணப்படுவதால், இரணைமடுக்குளத்துக்கு மகாவலி நீரைப் பாய்ச்ச வேண்டிய யதார்த்தம் உள்ளது. இவை அனைத்தும் கொழும்பு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விடயங்கள் என்பதால் அரசு மிக இலகுவாகவே அவற்றை நடைமுறைப்படுத்தும்.
அநுராதபுரம் பழைய நகரம் தமிழருக்குச் சொந்தமானதாக இருந்தது. அதை முறியடிக்க 1977ஆம் ஆண்டில் ஜே.ஆர் அரசு செய்த யுக்தியின் காரணமாக அநுராதபுரம் புதியநகரம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழரின் முக்கியத்து வம் அநுராதபுரத்தில் குறைந்து போயிற்று. இதுபோன்றதொரு நகர்வே தற்போது கிளிநொச்சி நகரத்துக்கும் ஏற்படவிருக்கிறது. வட மாகாண சபையின் தலைமைச் செயலகத்தை மாங்குளத்தில் அமைத்திருந்தால், இத்தகையதொரு நகரத்தைத் தமிழர்களால் உருவாக்கியிருக்க முடியும். இரணைமடுக்குள விவகாரம், திணைக்களங்களின் செயற்பா டின்மை, எதனோல் சாராய விவகாரம், தமிழ் அரசியல் வாதிகளின் பினாமி மதுச்சாலைகள் என ஒட்டுமொத்தமாக வடக்குத் தமிழரை அச்சுறுத்தி வருகின்றன.
தமிழர்களின் கையிலிருந்த எச்ச சொச்ச அதிகாரங்களும் தமிழரின் திறமை யின்மையாலும் இலஞ்ச ஊழலாலும் கைநழுவிப் போய்க்கொண்டிருக்கின்றன. இதன் பின்னர் சிங்களவர், அல்லது முஸ்லிம்கள் உயர் அதிகாரிகளாக நியமிக்கப்படலாம். அதன் பின்னர் ஆர்ப்பாட்டம் செய்வதால் தமிழர்கள் எதையும் அடையப்போவதில்லை.
நன்றி- உதயன்