எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்துவதற்கு சர்வதேச உறவுகளுக்கான நிலையம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.

சிறிலங்கா அதன் சர்வதேச உறவுகளை எவ்வாறு சிறந்தமுறையில் வலுப்படுத்துவது என்பது தொடர்பில் கற்கைநெறிகளையும் ஆராய்ச்சிகளையும் சர்வதேச உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையம் நடத்தும் என்று எதிர்க்கட்சி தலைவரின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ருவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

நிலையத்தின் செயலாளராக ஜானக நிமலச்சந்திர நியமிக்கப்பட்டிருக்கிறார். சிறிலங்காவின்  இறைமையையும் சுயாதிபத்தியத்தையும் மனதிற்கொண்டு பிராந்தியத்தில் உள்ள பங்காளர்கள் உட்பட வெளிநாட்டுப் பங்காளர்களின் கொள்கைகளை ஆராய்வதற்கும் சொந்த வெளியுறவுக்கொள்கையை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்கும் இந்த நிலையம் தன்னை அர்ப்பணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.