கூட்டுஒப்பந்தத்திற்குப் பின் உருவாகியுள்ள எதிர்ப்புகள்!

தோட்டத்தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்த விவகாரம் இன்னும்  நீறுபூத்த நெருப்பாக கணன்று கொண்டிருக்கிறது. முதல் தடவையாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை  தொழிற்சங்க கூட்டமைப்பு தவிர்த்துள்ளது. இரண்டு தொழிற்சங்கங்கள் மட்டுமே கைச்சாத்திட்டுள்ளன. மட்டுமல்லாது சில திருத்தங்களுடன் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன.

 

ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத ஏனைய மலையக தொழிற்சங்கங்களைப்பற்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கமும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தமது தரப்பில் பேச்சுக்களில் ஈடுபட்ட ஒரு தொழிற்சங்கம் கூட்டு ஒப்பந்தத்தை புறக்கணித்தமை பற்றி    தொழிற்சங்க ரீதியாக எழுந்துள்ள  அழுத்தங்களுக்கு அவர்கள் பதில் கூறக்கடமைப்பட்டுள்ளனர்.

இதே வேளை கூட்டு ஒப்பந்தம் முடிவுக்கு வரும் வரை  நியாயமான சம்பளத்துக்கு ஆதரவு தருகிறோம் என்று அறிவித்து வந்த தமிழ் முற்போக்குக்கூட்டணியினர் தற்போது ஒப்பந்தம் கைச்சாத்தாகி  தமது தேசிய தலைவர் பிரதமர் ரணிலுடன் ஒப்பந்த தரப்புகள் ஒன்றாக நின்று படம் எடுத்தவுடன் அவர்களை  பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.

இதையடுத்து ஒப்பந்தமாகியுள்ள  சம்பளம் போதாது என்ற கோஷத்தை கையிலெடுத்துள்ள கூட்டணியினர் அதில் உற்பத்தி ஊக்க கொடுப்பனவுத்தொகையை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிடின் அரச தரப்பிலிருந்து விலகப்போகிறோம் என்றும் கூறி வருகின்றனர்.

அதே வேளை தொழிலாளர்கள் தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாளன்று முதலாளிமார் சம்மேளன தலைமை காரியாலயத்திற்கு முன்பாகவும் மலையகத்தின் பல பகுதிகளிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர். ஆகவே இவ்வருடம்  தொழிலாளர்களின் வேதனத்தை  தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தமானது தொழிற்சங்க, சமூக  மற்றும் அரசியல் ரீதியான எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னதாக இப்படியான எதிர்ப்புகளை இந்த விவகாரம் சந்தித்ததில்லை என்பது முக்கிய விடயம்.

ஆனால் எல்லாவற்றுக்கும் பதில்களை தயாராக வைத்திருக்கின்றனர் அரசியல்வாதிகள். அதாவது கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பும் போது கூட அதற்கு தொழிற்சங்க ரீதியான பதில்களை வழங்காது அரசியல் ரீதியான பதில்கள் அல்லது சமாளிப்புகளே வெளிப்படுத்தப்படுகின்றன.

ஆயிரம் ரூபாவை முதலில் யார் கேட்டது?

ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை முதலில் முன்வைத்தது தொழிற்சங்கங்களா அல்லது தொழிலாளர்களா என்ற கேள்வி இங்கு முக்கியமானது. 2015 ஆம் ஆண்டிலேயே இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அது அடிப்படை சம்பள கோரிக்கை இல்லை. அச்சந்தர்ப்பத்தில் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த கே.வேலாயுதம்  ஆறுமுகனின் இந்த கோரிக்கையை வரவேற்றிருந்தார். ஆனால் அக்கோரிக்கை நீண்ட இழுபறிகளுக்குட்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்தையும் கடந்து தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகையையும் பெற்றுக்கொடுக்காத தோல்வி ஒப்பந்தமானது.

இந்நிலையில் கடந்த வருடம் காலாவதியாகிய கூட்டு ஒப்பந்தத்தையடுத்து  தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வேண்டும் என்ற கோரிக்கையை ஆறுமுகன் எம்.பியே முன்வைத்தார். இது சாத்தியப்படாத கோரிக்கை என அப்போதே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது ஏற்கனவே இருந்த அடிப்படை சம்பளத்தை விட இது நூறு வீத அதிகரிப்பு கோரிக்கையாக இருந்ததே காரணம். எனினும் தனது கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்த ஆறுமுகன் இறுதி தொகை முடிவு செய்யப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் கூட பாராளுமன்றில் தொழிலாளர் வேதனம் தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் ஆயிரம் ரூபா இல்லாவிட்டால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவே மாட்டேன் என்று சூளுரைத்திருந்தார். எனினும் ஒரே நாளில் காட்சிகளும் ,பேச்சுக்களும் ,உத்தரவாதங்களும் , சத்தியங்களும் காற்றில் பறந்தன. அடிப்படை சம்பளத்தில் 40வீத அதிகரிப்பு என இ.தொ.காவும் ,தே.தோ.தொ.சங்கமும் மார்தட்டிக்கொண்டன. இதற்கு ஒரு படி மேலே சென்ற ஆறுமுகன் எம்.பி. ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்தது இ.தொ.கா மட்டுமே தொழிலாளர்கள் எவரும் அத்தொகையை கேட்கவில்லை. மேலும் 750 ரூபா சம்பளத்தொகையும்  தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே முடிவு செய்து கைச்சாத்திடப்பட்டது என அனைத்தையும் தொழிலாளர்களின் தலையில் தூக்கிப்போட்டார்.

இக்கூட்டு ஒப்பந்த பேச்சுக்கள் கடந்த வருடம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தறுவாயில் தே.தோ.தொ.சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் இம்முறை அவசரப்பட்டு கையெழுத்திடப்போவதில்லை என உறுதியாக ஊடகங்களுக்கு அறிக்கை விட்டிருந்தார். எனினும் கடந்த வருடத்தில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் அவர் நடந்து கொண்ட விதம் மக்கள் மத்தியில் அவரை நம்பிக்கையற்ற ஒருவராகவே மாற்றியிருந்தது. இதனால்  கூட்டு ஒப்பந்த விவகாரத்திலும் அவர் சொல்வதை நம்புவதற்கு தொழிலாளர்கள் தயாராக இருக்கவில்லை. இறுதியில் அதே போன்றே நடந்தது. எப்போதுமே கூட்டு ஒப்பந்த மேசையில் இ.தொ.காவின் கையே ஓங்கியிருக்கும். அதே போன்று இம்முறை  தொழிலாளர்களின் சம்பள கோரிக்கையை காவடி எடுத்து ஆரம்பித்து விட்டு ஆடி முடித்து பின்பு இறக்கி வைத்ததும் இ.தொ.கா மட்டுமே. தனது தொழிற்சங்கத்தின் சார்பில்  இறுதி நேரத்தில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதும்   பிரதமர் ரணிலுடன் அலரி மாளிகையில் ஒப்பந்தத்தை வழங்கி படம் எடுத்துக்கொண்டதுமே வடிவேல் சுரேஷ் எம்.பி செய்த வேலையாக ஆனது.

சிவில் அமைப்புகளின் எதிர்ப்பு

இதே வேளை தொழிலாளர்களுக்காக போராட்டத்தை முன்னெடுத்திருந்த சிவில் அமைப்புகளும் தமது கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு இவ் ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க அழுத்தங்களை பிரயோகிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால் இத்தகையை எதிர்ப்புகளை சர்வசாதாரணமாக இ.தொ.கா எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் கடந்த முறை கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தின் பிரதிபலிப்புகள் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலித்திருந்ததை மறுக்க முடியாது. இவ்வருடம் மாகாண சபை தேர்தல்கள் இடம்பெறுவதற்குரிய சாத்திய கூறுகள் இருக்கின்றன. பாரம்பரியமாக  ஒரே கட்சிக்கு வாக்களித்து வரும் தொழிலாளர்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இம்முறை சம்பளப்போராட்டத்தில் பங்கு கொண்ட இளைஞர்களின் தொகை அதிகம். தமது சமூகத்தின் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு ஏற்பட் கதியை நினைத்து அவர்கள் கடுங்கோபத்தில் இருப்பது தெரிகிறது. ஆகவே இம்முறை எந்த தேர்தல் வந்தாலும் அவர்கள் தொழிலாளர்களின் நலன் குறித்து வாக்குறுதிகளை வழங்கும் எந்த கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளையும் ஆதரிப்பதாகத்தெரியவில்லை.

தற்போது ஒப்பந்தம் கைச்சாத்திட்டவுடன் போராட தயாராகியிருக்கும் தமிழ் முற்போக்குக்கூட்டணியினரும் இது குறித்து சிந்தித்தல் அவசியம். இறுதியில் வாக்குகள் எல்லாம் சிதறிப்போய் பாராளுமன்றில் தமிழ் பிரதிநிதித்துவம் குறைவதற்கு வழிகளை ஏற்படுத்தி விடக்கூடாது.

ஒப்பந்தம் மீள கைச்சாத்திடப்படுமா?

தமிழ் முற்போக்குக்கூட்டணியினர் விடுத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில் தற்போது வழங்கப்படும் சம்பளத்தொகைக்கு அதிகமாக மேலதிக கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு கம்பனிகள் தயாராகுமா என்பது நிச்சயமில்லை. ஆனால் அதற்கான ஏற்பாடுகளை பிரதமர் மூலம் செய்து கொண்டால் அதன் பின்பு அது சாத்தியப்படுவதற்கு சந்தர்பங்கள் அதிகம். ஒப்பந்த தரப்புகள் இணங்கினால் மட்டுமே கைச்சாத்திடப்பட்டு தொழில் ஆணையாளரால் வர்த்தமானி அறிவித்தலுக்குட்பட்ட கூட்டு ஒப்பந்தம் மீளவும் திருத்தங்களுடன் கைச்சாத்திடப்பட முடியும். அவை இணங்காத பட்சத்தில் முடியாது. ஆனால் எம்மால் இவ்வளவு தான் பெற்றுக்கொடுக்க முடிந்தது இதை விட அதிகமாக எவரும் பெற்றுக்கொடுக்க தயாரானால் ஆதரவு தருகிறோம் என ஆறுமுகன் எம்.பி அறிவித்திருக்கிறார். அது ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு தெரிவித்த கருத்து. அப்படியிருக்கும் போது தற்போது தமிழ் முற்போக்குக்கூட்டணி விடுத்துள்ள வரவு ஊக்குவிப்பு கொடுப்பனவு 140 ரூபாவை பெற்றுத்தர பிரதமர் நடவடிக்கை எடுத்து அது சாத்தியமானால் மறுபக்கம் தொழிலாளர்களிடத்தில் தனது செல்வாக்கில் சரிவை இ.தொ.கா சந்திக்க வேண்டி ஏற்படும்.

மட்டுமன்றி  ஐ.தே.கவின் தொழிற்சங்கமான  தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் வடிவேல் சுரேஷ் எம்.பிக்கும் இது பாரிய பிரச்சினையாகி விடும். ஆரம்பத்திலேயே பிரதமரிடம் கதைத்து அத்தொகையை ஏன் பெற முடியாமல் போனது என்ற கேள்விக்கு அவரால் பதில் கூற முடியாது. ஆகவே இந்த விவகாரத்தில் தமது செல்வாக்கை தக்க வைக்க இ.தொ.காவும் ,தே.தோ.தொ.சங்கமும் இரண்டு விடயங்களை மட்டுமே தற்போதைக்கு செய்ய முடியும்.

பிரதமர் குறித்த கோரிக்கைக்கு இணங்குவதாக இருந்தால் அதை தாமே மறுபடி பேசி பெற்றுக்கொடுத்ததாக மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தில் அத்தொகையையும் சேர்த்து கைச்சாத்திடலாம்.

அப்படி செய்தால் தமது அழுத்தம் காரணமாகவே அத்தொகை கிடைத்தது ,மீண்டும் ஒப்பந்தத்தை கைச்சாத்திட வைத்தோம் என தமிழ் முற்போக்குக்கூட்டணியினர் மறு பக்கம் தொழிலாளர்களிடத்தில் தமது செல்வாக்கை உயர்த்திக்கொள்வர்.

ஆனால் கூட்டணியின் 6 எம்.பிக்களும் பிரதமர் ரணிலுக்கு தற்போதைக்கு தேவைப்படும் பிரதிநிதிகளாக இருக்கின்றனர். இவர்கள் கடந்த தனக்கு ஆதரவாக இருந்த விடயத்தையும் ரணில் சீர் தூக்கிப்பார்க்க வேண்டும்.

இவர்களின் கோரிக்கைக்கு இணங்க இப்போது கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் வர்த்தமானிபடுத்துதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னர் தொழிலாளர்களுக்கு நன்மை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.

ஆகவே இம்முறை கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பது தொழிலாளர்கள் மட்டுமல்ல  என்பது புரிகிறது. எல்லா பக்கங்களும் கிளர்ந்தெழுந்துள்ள எதிர்ப்புகள் தொழிலாளர்களுக்கு சாதகமான முடிவை தருமா ?

– சிவலிங்கம் சிவகுமாரன்