தமிழர் பிரதேசங்களில் இறுதிப் போர் நடைபெற்று ஒரு தசாப்த காலத்தின் பின்னர், போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக் குழு ஆகிய இரண்டு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இப்பணியை மேற்கொள்ள உள்ளன.
இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு, இலங்கையில் உள்ளவர்களும் வெளிநாடுகளில் உள்ளவர்களும் தங்களிடமுள்ள விவரங்களை வழங்க வேண்டும் எனவும் இவ்விரு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
“ஆகக் குறைந்தது, இறந்தவர்களின் பெயர்களைச் சேகரிப்பதன் மூலமாவது, அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்” என, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்து உள்ளார்.
திருகோணமலை, மாவிலாறில் 2006ஆம் ஆண்டு ஆரம்பமாகி, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு ஓய்வுக்குவந்த, சராசரியாக மூன்று ஆண்டு காலம் நீடித்த யுத்தமே, இறுதி யுத்தம் ஆகும்.
இந்தக் கொடும் பெரும் போரின் நடுவே அகப்பட்டு, குற்றம் எதுவும் புரியாது சிக்கித் சிதறிய, அப்பாவித் தமிழ் மக்களது எண்ணிக்கை தொடர்பாக, தெளிவான தகவல்கள் இல்லை.
“எமது படையினர், உலகின் கொடுமையான பயங்கரவாதிகளுடன் போரிட்டனர். ஆகவே, போரின் நடுவே மக்கள் மடிவதைப் பெரிய விடயமாகப் பார்க்க முடியாது” என்றவாறாக அவ்வப் போது, தெற்கு அரசியல் தலைவர்கள் கொஞ்சமும் கூச்சமின்றிக் கூறி வருகின்றனர்.
“நாங்கள் ஏன் கைது செய்யப்படுகின்றோம்; ஏன் சித்திரவதை செய்யப்படுகின்றோம்; மொத்தத்தில் நாங்கள் ஏன் கொல்லப்படுகின்றோம்” எனத் தெரியாது, இந்தக் கொடூரத்துக்குள் கொடுமைப்படுத்தப்பட்டவர்களின் மனநிலையை, அவர்களின் நிலையிலிருந்து அனுபவித்து உணர்ந்தால் மாத்திரமே, அவர்களின் வலியும் வேதனையும் புரியும்.
பொதுவாக, ஒரு விடயத்தில் இரு அம்சங்கள் இருக்கின்றன. அதாவது, ஒரு விடயத்தைத் தொடங்குதல், அத்துடன் அதைத் தொடருதல் என்பன ஆகும்.
தமிழ் மக்கள் விவகாரத்தில், மிகவும் முக்கியத்துவம் நிறைந்ததும் ஆனால், மிகச் சவாலானதுமான அரும்பணியை, இரண்டு சர்வதேசஅமைப்புகளும் தொடங்க உள்ளன.
நம்நாட்டில் தேர்தல்கள் நடைபெறும் வேளைகளில், ஆகக் குறைந்த வாக்களிப்பு சதவீதங்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ்ப் பிரதேசங்களிலேயே பொதுவாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
அத்துடன், வாக்காளர் பட்டியல்கள் பதிவுகள் நடைபெறும் போதோ, மீள்பதிவுகள் நடைபெறும் போதோ, அக்கறையற்று, அலட்சியப் போக்குடன் காணப்படுவதும், தமிழ்ப் பிரதேசங்களிலேயே அதிகமாக உள்ளன.
இவைபோல, தற்போது நடைபெறவுள்ள இறுதிப் போரில் இறந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பில், தமிழ் மக்கள் அசமந்தப் போக்குடன் இருக்கக் கூடாது. அவர்கள் (உறவுகள்) செத்துப் போய் விட்டார்கள். இவர்களால், (சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள்) அவர்களது உயிரை மீளப் பெற்றுத் தர முடியுமா என, ஆர்வமற்று இருக்கக்கூடாது.
இலங்கை அரசாங்கம், இந்தப் பணியை ஒருபோதும் நடத்தப் போவதில்லை. வடக்கு, கிழக்கில் அரசியல் செய்யும் தமிழ்க் கட்சிகளும் இது தொடர்பில், அக்கறை கொண்டு கருமங்கள் ஆற்றியதாக இதுவரை தெரியவில்லை. ஆகவே, சர்வதேச அமைப்புகள் தொடங்கவுள்ள வேலைத் திட்டத்தை ஊக்குவித்து, அதை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு, தமிழ் மக்கள் அனைவருக்கும் உரியதாகும்.
இறுதிப் போர், பல்லாயிரக் கணக்கில் தமிழ் மக்களை பலி கொண்டது என்பது, இரகசியம் அல்ல; அது உலகு அறிந்த உண்மை. ஆகவே, அப்பாவிகளாகப் பலி எடுக்கப்பட்டவர்களது எண்ணிக்கை பிரதானமானது. இது எதிர்காலத்தில், தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளை முன் நோக்கி நகர்த்த, உதவக் கூடிய வலுவான ஆயுதம் ஆகும்.
அத்துடன், இறுதிப் போரில் இறந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பை, உள்நாட்டை மய்யமாகக் கொண்ட அமைப்புகள் நடத்துவதைக் காட்டிலும், சர்வதேச அமைப்புகள் நடத்துவது பெறுமதி கூடியதும் வலுவானதுமாகும். ஆகவே, இந்த வாய்ப்பைத் தமிழ் மக்கள், பயனுறுதி உள்ளதாக மாற்ற வேண்டும்.
இதற்கிடையில், மன்னாரில் ‘சதோசா’ வளவில், இதுவரை 300 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு உள்ளன. ஏறத்தாழ ஒரு வருத்தை அண்மித்த வரையில், குவியல் குவியல்களாக எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறாக, இலங்கையில் தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தில் மட்டும் கொல்லப்படவில்லை. 1956, 1977, 1983ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போதுகூடத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
மேலும், இலங்கைப் படையினர் இந்தியப் படையினர் ஆகிய இரு தரப்புகளுடனும் விடுதலைப் புலிகள் போரிட்ட காலப் பகுதியிலும் போரில் சிக்கி, தமிழ் மக்கள் காலத்துக்குக் காலம் கொல்லப்பட்டு உள்ளார்கள்.
சராசரியாகக் குடும்ப வாழ்விலேகூட, கணக்குகள் சரியாக இருந்தால் மாத்திரமே வாழ்வு சிறக்கும். இந்நிலையில், தனது விடுதலைக்காக உயிர்களைப் பல்லாயிரக் கணக்கில் தாரை வார்த்தது தமிழ்ச் சமூகம். ஆகவே, இவ்வாறான சூழ்நிலையில் இவ்வாறான கணக்கெடுப்புகள் காலத்தின் தேவையாக உள்ளன.
இதைவிட, எழுபது ஆண்டு காலமாகத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்தத்தில், தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் பற்றிய ஆவணங்களோ, தரவுகளோ தமிழர் தரப்புகளிடம் இல்லை. அவை தொடர்பான கணக்கெடுப்புகளையும் ஆரம்பிப்பது காலத்தின் அவசர தேவையாக உள்ளது.
இவ்வாறு நிற்க, முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து, அமைக்கப்பட்டு வரும் விகாரை, சட்ட விரோதமானது என, தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாகத் தெரிய வந்துள்ளது.
மேலும், சட்ட விரோதமானது எனத் தெரிவிக்கப்பட்ட விகாரை, பொலிஸ், தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் பரிபூரணமான ஆசீர்வாதங்களுடன், அவசரமாகத் திறப்பு விழாவும் கண்டு விட்டது.
இதுபோலவே, முல்லைத்தீவு, கொக்கிளாயிலும் அத்துமீறி விகாரை கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது, பிரதேச செயலாளர், நீதிமன்றம் வரை சென்று, கட்டுமானங்களை நிறுத்தும் படி கோரியும், முற்றும் துறந்த துறவிகளால் நிறுத்தவில்லை.
எனவே, இவ்வாறாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில், கடந்த காலங்களில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட, அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைகளின் எண்ணிக்கைகளும், வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
தமிழ் மக்கள், தங்களது மனங்களில் உள்ள துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் பரிகாரம் காண, ஆண்டவன் சன்னதிக்கு மட்டுமே செல்லும் நிலையில் உள்ளனர். இந்நிலையில், சட்ட விரோதமாகவும் திடீரெனவும் முளைத்து வருகின்ற விகாரைகள், தமிழ் மக்களது துன்பங்களையும் துயரங்களையும் இரட்டிப்பாக்குகின்றன.
இந்நிலையில், அண்மையில் முதல் முறையாக வடமாகாண ஆளுநராகத் தமிழரான கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டு உள்ளார். “தமிழர் பகுதிகளில், அரசியல் நோக்கத்துடனான பௌத்த மயமாக்கல், நிறுத்தப்பட வேண்டும் என்பது தனது நிலைப்பாடு” எனத் தெரிவித்து உள்ளார்.
“ஒரு தமிழனாக, இதனையிட்டுக் கவலை கொள்ளவில்லை. ஓர் ஆளுநராக, பௌத்த தத்துவத்தை மதிக்கின்ற ஒருவராக, இது சரியானது அல்ல” எனவும் தெரிவித்துள்ளார். “உண்மையான பௌத்தர் எதையும் மீற மாட்டார்; எதையும் வைத்திருக்க விரும்பமாட்டார்; எதையும் விரிவுபடுத்த விரும்பமாட்டார்” என, மேலும் தெரிவித்து உள்ளார்.
நீதியரசர் விக்னேஸ்வரன் நீண்ட காலம் கொழும்பில் வசித்து, 2013இல் மக்களால், வடக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர், தமிழ் மக்களது நியாயமான, நீதியான கோரிக்கைகளை முன்வைத்தமையால், சிங்களத் தலைவர்களால் வெறுக்கப்பட்டார்; புலிச்சார்பு முத்திரை குத்தப்பட்டார்.
இதேபோலவே, கலாநிதி சுரேன் ராகவன், நீண்ட காலம் கொழும்பில் வசித்து, 2018இல் ஜனாதிபதியால் வடக்கு மாகாண ஆளுநராகத் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். இவரும் தமிழ் மக்களது நியாயமான, நீதியான கோரிக்கைகளை முன்வைக்கின்றமையால், (தமிழர் பகுதிகளில் அரசியல் நோக்கிலான பௌத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்) சிங்களத் தலைவர்களால் வெறுக்கப்படுவார். புலிச்சார்பு முத்திரை குத்தப்படுவார் அல்லது இவரது கோரிக்கைகளை, ஒட்டுமொத்தமாகத் தெற்கு அலட்சியப்படுத்தும்.
ஆகவே, ஒரு முட்டைக்குள் உறங்கும் கோழிக்குஞ்சு, வெளி உலகத்துக்கு வருவதற்கான வெப்பத்தையும் இதர தேவைப்பாடுகளையும் தாய்க்கோழி வழங்கலாம். ஆனால், அந்த ஓட்டை உடைத்துக் கொண்டு, வெளியே வர வேண்டும் என்ற அக்கறையும் ஆர்வமும் ஆசையும் குஞ்சுக்கு இருப்பதாலேயே, அதனால் வெளியே வரமுடிகின்றது. அந்த உத்வேகமே உயிரினங்களின் இயற்கைக் குணம் ஆகும்.
அந்த வகையிலேயே, தமிழ் மக்களும், தங்கள் மீது கடந்த 70 ஆண்டு காலமாக, ஆட்சியாளர்களால் திணிக்கப்பட்டுள்ள அரசியல் நெருக்குவாரங்களிலிருந்து விடுபட்டு, வெளியே வரத் துடிக்கின்றார்கள் என்பதை, சுதந்திரத்தை மறுதலிப்பவர்கள், சுதந்திரமாகச் சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா, நிந்திப்பார்களா?
காரை துர்க்கா