மே மாதத்திற்கு முன் மாகாணசபை தேர்தல்!- ஜனாதிபதி பிரேரணை

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்  எதிர்வரும் மே மாதம் 31ம் திகதிக்கு   முன்  ஒரே நாளில்  பழைய தேர்தல் முறைமைக்கு அமைய  25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்துடன்   மாகாண சபை தேர்தல் இடம்பெறும்  என்ற பிரேரணையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்தார்.

ஜனாதிபதியின் சிறப்பு அமைச்சரவையின் பரிந்துரைக்கு  அமைய  இப்பிரேரணை  அமைச்சரவையினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

பதவிக்காலம் முடிவடைந்துள்ள மாகாண சபைகளுக்கும்,  பதவிக்காலம் முடிவுறும் தறுவாயில் உள்ள மாகாண சபைகளுக்கும் மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன் ஒரே நாளில் நாடுதழுவிய ரீதியில்  பழைய முறையில் தேர்தலை   நடத்துவதற்கான யோசனையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மாகாண சபை தேல்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் பொழுது பெண் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் 25 சதவீதமாக காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி குறித்த பிரேரணையில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரேரணை அடுத்த  அமைச்சரவை  கூட்டத்தின் பொழுது கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வட மத்திய மாகாணங்களின் பதவி காலம் 2017ம் ஆண்டு செம்டெம்பர் மாதம்  முடிவடைந்துள்ள நிலையில் மத்திய மாகாணம்,   வடமேல் மாகாணம்,  மற்றும் வடக்கு  மாகாணம் ஆகிய மாகாணங்களின் பதவி காலம்  கடந்த வருடம்  செப்டெம்பர் மாதத்துடன் முடிவடைந்துள்ளது.

தென், மேல் மாகாணத்தின் பதவி காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடனும்,  ஊவா மாகாண பதவி காலம் ஒக்டோபர் மாதத்துடன் முடிவடையும்  என்பது குறிப்பிடத்தக்கது..