பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம், இன்று (28) கைச்சாத்திடப்படவுள்ளது. இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளமான 700 ரூபாய்க்கு, கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடவேண்டாமென வலியுறுத்தி, பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் மற்றுமொரு கட்டமாக, முதலாளிமார் சம்மேளனத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை, இன்று (28) நடத்துவதற்கு, பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.
கடந்த நான்கு மாதங்களாக இழுபறியிலிருந்த கூட்டு ஒப்பந்த விவகாரம், கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு இணக்கத்துடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, அடிப்படைச் சம்பளமாக 700 ரூபாயும் விலைக் கொடுப்பனவாக 50 ரூபாயும் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியாக 105 ரூபாய் என்றடிப்படையில், மொத்தச் சம்பளம் 855 ரூபாயும் மேலதிகமாகப் பறிக்கப்படும் ஒரு கிலோகிராம் கொழுந்துக்கு 40 ரூபாயும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டன.
2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரைக்கான நிலுவைக்கொடுப்பவை, தொழிலாளர்கள் தொழிலுக்குச் சென்ற நாள்களை அடிப்படையாக வைத்து வழங்கவும் தீர்மானிக்கப்பட்டன. அதற்காக, 100 மில்லியன் ரூபாயை, தேயிலைச் சபையிடமிருந்து பெற்று, கம்பனிகளுக்கு வழங்குவதற்கும் அன்று தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே, நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக 1,000 ரூபாயை வழங்கவேண்டுமென, ஏற்கெனவே கோரிக்கைகளை முன்வைத்திருந்த பல்வேறான அமைப்புகளும், அந்தக் கோரிக்கையை தொடர்ந்தும் வலியுறுத்தி, புதிய கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
Eelamurasu Australia Online News Portal