புதிய அரசியல் யாப்பு ஒன்று வரவுள்ளது என்னும் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றன. ஆனால் இன்றைய தென்னிலங்கை அரசியல் நிலைமைகள் ஒரு விடயத்தை தெளிவாக நிரூபித்துவிட்டது. அதாவது, அவ்வாறானதொரு அரசியல் யாப்பு ஒன்று வரப்போவதில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான நிபுனர் குழு அறிக்கையொன்று வெளியாகியிருக்கிறது. இதனை தாம் நிராகரிப்பதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியியான புளொட்டின் தலைவர் சித்தார்த்தனோ, பல்வேறு சந்தர்ப்பங்களில், புதிய அரசியல் யாப்பு ஒன்று வரப்போவதில்லை என்று கூறியிருக்கிறார். அவ்வாறாயின் கூட்டமைப்பு அரசியல் தீர்வு தொடர்பில் பேசிவருவது, ஒரு வகையில் ஏமாற்று நாடாகம்தானா? இப்படியொரு கேள்வி எழலாம். ஆனால் இந்தப் பத்தி கூட்டமைப்பு தொடர்பில் எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. வழமைக்கு மாறாக சற்று மாறுபட்ட வகையில் அரசியல் தீர்வு விடயத்தை ஆராய முற்படுகிறது. இது தொடர்பில் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பரவலான உரையாடல்கள் இடம்பெறுவது காலத்தின் தேவை.
இலங்கைத் தீவில் இடம்பெற்றது ஒரு உள்நாட்டு யுத்தம். அது முடிவுற்று ஏறக்குறைய பத்து வருடங்கள் ஆகப்போகின்றது. இது ஒரு சாதாரணமான காலப்பகுதி அல்ல. மனித வாழ்வை பொருத்தவரையில் ஒரு தசாப்தகாலம். இந்தக் காலத்தில் தமிழ் மக்களை முன்னிறுத்தி பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறான விடயங்கள் உள்நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பெரியளவில் எந்தவொரு முன்னேற்றங்களையும் எவராலும் காண்பிக்க முடியவில்லை. இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் பல்வேறு விடயங்கள் தொடர்பில், பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்த விவாதங்கள் ஒரு முடிவுக்கு வந்தன. இதன் பின்னர் கடந்த மூன்று வருடங்களாக புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவரும் முயற்சியில் கூட்டமைப்பும் அரசாங்கமும் இணைந்து பயணித்திருந்தது. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கம் செய்ததன் மூலம், கூட்டமைப்பு அதுவரை மேற்கொண்டு வந்த பயணமும் முடிவுக்குவந்தது. இதன் பின்னர் இடம்பெற்ற மைத்திரி தின்ற உப்பு – கடிநாயை கட்டிப்போடுதல் என்றவாறான விவாதங்களை எல்லாம் ஒரு பக்கமாக தூக்கிவீசிவிடுங்கள். ஏனெனில் அவையெல்லாம் தேர்தல் அரசியலுக்கான மூலதனங்கள். ஆனால் கேள்வி – பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பிற்கான முயற்சிகள் அனைத்தும் ஏன் விழலுக்கு இறைத்த நீராகியது?
2015 செப்டம்பர் மாதம் இடம்பெற்ற ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 வது கூட்டத் தொடரின் போது, அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்களசமரவீர, முதல் முதலாக புதிய அரசியல் யாப்பு ஒன்றைப்பற்றி பேசியிருந்தார். இதன் பின்னர்தான் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் கூட்டமைப்பும் பேசியது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுண்டு. அதாவது, புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவருவது தொடர்பில் மங்கள பேசியிருந்தாலும் கூட, அதில் தமிழ் மக்களுக்கு எவ்வாறானதொரு அரசியல் ஏற்பாட்டை வழங்கப் போகின்றோம் என்பது தொடர்பில் எவ்வித கருத்தையும் அரசாங்கம் கூறியிருக்கவில்லை. இங்கு பிறிதொரு விடயத்தையும் ஆழமாக கவனிக்க வேண்டும். அரசாங்கம் அமுல்படுத்துவதாக இணங்கிய மனித உரிமைகள் பேரவையின் பிரேணையிலும் கூட, அரசியல் திர்வு தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதில் அரசியல் தீர்வு தொடர்பில் ஏதாவது இருக்கிறதா என்று தேடினால் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் மட்டும்தான் பேசப்பட்டிருக்கிறது. அவ்வாறாயின் அரசாங்கத்திற்கு புதிய அரசியல் யாப்பு சமஸ்டி பண்புகளை கொண்டிருக்க வேண்டும், அதில் தமிழர் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்றவாறான எந்தவொரு சர்வதேச கடப்பாடும் இல்லை. அவ்வாறிருக்கின்ற போது, அரசாங்கம் புதிய அரசியல் யாப்பில் சமஸ்டி தீர்வை உள்ளடக்கவில்லை என்று கூட்டமைப்பினர் குற்றம்சாட்டுவதில் ஏதாவது பொருள் இருக்க முடியுமா?
இந்த விடயங்களை தொகுத்து நோக்கினால் கடந்த மூன்று வருடங்களாக இல்லாத ஒன்று, இருப்பதான நம்பிக்கையுடன்தான் தமிழரின் அரசியல் விவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறாயின் தமிழர்களுக்கான தீர்வுதான் என்ன? எவரிடம் பதிலுண்டு?
இந்த இடத்தில் எழும் கேள்வி – ஒரு உள்நாட்டு யுத்தம் மிக மோசமான விளைவுகளுடன் முடிவடைந்திருக்கின்றது. அதில் ஒரு தரப்பு மிகவும் மோசமாக அழிக்கப்பட்டிருக்கிறது. அந்த அழிவு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு ஆறாத காயமாக இருக்கிறது. எனவே காயத்தை ஆற்ற வேண்டும் என்றால், மீளவும் அவ்வாறானதொரு நிலைமை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுவிடாத வகையில், அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் தேவை. அது நிச்சயமாக மீளவும் பறிக்கப்பட முடியாதவொரு அரசியல் தீர்வாகத்தான் இருக்க முடியும். ஆனால் அது சாத்தியப்படவில்லை. அதனை சாத்தியமாக்க வேண்டும் என்று மேற்குலகமும் (அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும்) அரசாங்கத்தின் மீது கடுமையான அழுத்தங்கள் எதனையும் பிரயோகிக்கவில்லை. ஆனால் தமிழர் தரப்புக்களோ சர்வதேசத்திடம் முறைவிடுவோம் – என்று கிளிப்பிள்ளைகள் போல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அதனை ஒரு பெரிய விடயமாக சர்வதேச சக்திகள் எடுக்கவில்லை. இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது?
இலங்கையில் தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டை ஒரு மானிலமாக கொண்டிருக்கும் இந்தியாவால் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது – என்னும் வாதத்தின் அடிப்படையில்தான் இலங்கையின் மீதான இந்தியத் தலையீடு நிகழ்ந்தது. அதன் விளைவாக வந்ததுதான் 13வது திருத்தச் சட்டம். அதனை ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது என்னும் அடிப்படையில்தான் விடுதலைப் புலிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்தியாவையும் பகைத்துக் கொண்டனர். இந்த சந்தர்ப்பத்திற்கு பின்னர் இந்தியா எட்ட நிற்பதாகவும் – மேற்கு கிட்ட நிற்பதாகவும்தான் தமிழரின் அரசியல் நம்பிக்கைகள் நகர்ந்தன. ஆனால் மேற்கின் தலையீட்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் ஏதோவொரு இடத்தில் தோல்வியைத்தான் தழுவியிருக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட போது, சந்திரிக்கா குமாரதுங்க திடிரென்று, மூன்று முக்கிய அமைச்சர்களை பதவி நீக்கி, சமாதான முன்னெடுப்புக்களில் முட்டுக்கட்டை போட்டார். இறுதியில் நோர்வேயின் முயற்சி படுதோல்வியில் முடிந்தது. அதற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேற்குலகின் பிரதான தலையீடு என்றால் அது தற்போது முன்னெடுக்கப்பட்டுவந்த அரசியல் யாப்பு முயற்சிதான். அந்த முயற்சிகள் முன்னகரும் என்னும் நம்பிக்கை நிலவிய சூழலில்தான், மைத்திரிபால சிறிசேன திடிரென்று ரணிலை பதவி நீக்கி, நல்லாட்சி அரசாங்கத்தின் ஆயுளை முடித்தார். புதிய அரசியல் யாப்பின் கதையும் முடிவுக்கு வந்தது. இந்த பின்புலத்தில் நோக்கினால் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர், இலங்கைத் தீவில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தீர்விற்கான அனைத்து முயற்சிகளும் ஏதோவோரு வகையில் தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. ஏன்? இந்திய – இலங்கை ஒப்பந்தம் தோல்வியில் முடிந்ததாக சொல்லப்பட்டாலும் கூட, அதன் விளைவாக வந்த 13வது திருத்தச்சட்டம்தான் சட்டர்Pதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்வாக இருக்கிறது. அதனை தீர்வாக ஏற்றுக்கொள்ளாது விட்;டாலும் கூட. ஏன் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னரான எந்தவொரு மேற்குலக முயற்சியும் இலங்கைத் தீவில் வெற்றிபெறவில்லை. இதில் எங்காவது நாம் விளங்கிக்கொள்ளாத ஒரு பக்கம் உண்டா? தெற்காசிய பிராந்தியத்தின் சக்தியாக தன்னை நிறுவ முயலும் இந்தியாவின் முழுமையான ஈடுபாடு இல்லாமல் எந்தவொரு மாற்றமும் இலங்கைத் தீவில் ஏற்படாதா? ஏனெனில் சமாதான ஒப்பந்தம் தொடங்கி 2009இற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு அரசியல் இணக்கப்பாட்டு முயற்சிகளிலும் இந்தியாவின் நேரடியான தலையீடு இருந்திருக்கவில்லை. இந்த நிலைமைதான் இனியும் தொடரப் போகிறது என்றால், தீர்வு தொடர்பான முயற்சிகள் என்பது ஒரு வீண் வேலையா?
யதீந்திரா