பிரியங்கா அடுத்த இந்திரா காந்தியாக முடியுமா?

ஆண்டு 1999. இடம் ரேபரேலி. பரபரப்பான தேர்தல் நேரம். காங்கிரஸ் வேட்பாளர் கேப்டன் சதீஷ் ஷர்மா. பாஜக சார்பில் அருண் நேரு போட்டியிட்டார். ஆம், ராஜீவ் காந்தியின் உறவினரான அதே அருண் நேரு. 27 வயதான இளம்பெண் அப்போது காங்கிரஸ் வேட்பாளருக்காகப் பிரச்சாரம் செய்தார்.

அவரைப் பார்க்கவும், அவருடைய பேச்சை கேட்கவும் பெருமளவு கூட்டம் கூடியது. அருண் நேரு ஏற்கெனவே ரேபரேலியில் வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் பாஜக மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் 27 வயதே ஆன இளம்பெண் கூட்டத்தைப் பார்த்து, “என் தந்தைக்கு துரோகம் செய்தவர்களை இந்த இடத்தில் நீங்கள் எப்படி அனுமதிக்கலாம்” என்று கேட்டார். அந்தக் கூட்டம் பெரிய வெற்றி தருவதாக அமைந்தது. அந்த வார்த்தைகள் டெல்லியிலும் எதிரொலித்தன.

மறுநாள் அருண் நேருவுக்குப் பிரச்சாரம் செய்வதற்கு அந்தத் தொகுதிக்கு வாஜ்பாய் சென்றார். அப்போது 27 வயதான இளம்பெண்ணின் பேச்சு குறித்து விளையாட்டாக சில கருத்துகளை அவர் கூறினார். “இந்தப் பகுதி சிலருக்கு உரியது என்று நான் கேள்விப்பட்டேன். அப்படி சொல்பவர்களை எப்படி நீங்கள் அனுமதிக்கலாம்” என்று அவர் கேட்டார். அந்தத் தேர்தலில் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியானபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பாஜக வேட்பாளர் அருண் நேரு நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார். அவருக்கு சவாலாக இருந்தவர் பிரியங்கா ராஜீவ் காந்தி.

பிரியங்கா காந்தி அடுத்த இந்திரா காந்தியாக முடியுமா? 

பிரியங்கா காந்தி அதிகாரபூர்வமாக இப்போது காங்கிரஸ் அரசியலில் இறங்கியுள்ளார். அவருக்கு ஒரு பகுதிக்கான பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி மற்றும் பாஜக வலுவாக இருக்கும் பூர்வாஞ்சல் பகுதி – கிழக்கு உத்தரப்பிரதேசப் பகுதியின் பொறுப்பு அவருக்கு அளிக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதும், பிரியங்காவுக்கும் இந்திராவுக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளன. அவர்கள் உடையணியும் பாணி, அவர்களுடைய தோற்றம், மக்களுடன் அவர்கள் கலந்து பேசுவது, மிதமான பாணியில் எதிர்ப்புகளைக் காட்டுவது, – என்பவை போன்றவை விவாதிக்கப்பட்டு, நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டன. பிரியங்கா அடுத்த இந்திராவா? இந்திராவிடம் இருந்த அதே உறுதியை இவரும் காட்டுவாரா? இந்திரா காந்தி சாதித்தவற்றை எல்லாம் பிரியங்கா காந்தியால் சாதிக்க முடியுமா?

இந்திரா காந்தியுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்குமா?

இந்திரா காந்தியின் காலங்களும், இங்கு அவருக்கு உள்ள அரசியல் மற்றும் சவால்களும், பல வகைகளில் மாறுபட்டுள்ளன. இந்தப் பின்னணியில் பிரியங்கா காந்தியை இந்திரா காந்தியுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்குமா? காங்கிரஸ் அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளரும், நிபுணருமான ரஷீத் கித்வாயிடம் இதுபற்றிக் கேட்டதற்கு, “எந்த இரண்டு பேராக இருந்தாலும் அவர்கள் மாறுபட்ட ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்திரா காந்தியின் பணியாற்றும் பாணி, அரசியல் மற்றும் மக்களுடன் இணைந்து பணியாற்றுவது எல்லாமே ஜவஹர்லால் நேருவிடம் இருந்து மாறுபட்டிருந்தன. இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அல்லது ராஜிவ் காந்தி மற்றும் சோனியா காந்தி விஷயத்திலும் இப்படித் தான் இருந்தது. உணர்ச்சிவசப்படாத பிரியங்கா காந்தியின் மனநிலை, அரசியல் மற்றும் செயல்படும் பாணி ஆகியவை இந்திரா காந்தியிடம் இருந்து மாறுபட்டிருக்கும்” என்று கூறினார்.

ஆனால், “இந்திரா மற்றும் பிரியங்காவின் உடை அணியும் பாங்கு ஒரே மாதிரி உள்ளது. இருவருக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இந்திரா காந்தி மீது மக்களுக்குப் பிரியம் இருந்தது. அவர் எளிதாக மக்களுடன் கலந்து பழகுவார். அவருடைய முகத்தில் உறுதிப்பாடு தெரியும். ஆனால், மக்களுடன் கலந்துவிட்டால் அவர் அன்பானவராக மாறிவிடுவார். பிரியங்கா காந்தியும் ஓரளவுக்கு அதேபோலத்தான். எளிதாக மக்களுடன் கலந்து நிற்கிறார். வேகமாக உரையாடும் திறன் அவரிடம் உள்ளது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

பிரியங்கா காந்தி அடுத்த இந்திரா காந்தியாக முடியுமா? 

“அவருக்கு ஓர் ஈர்ப்பு உள்ளது. உத்தரப்பிரதேசத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் இந்திராவுக்கு இருந்த அதே ஈர்ப்பு பிரியங்கா காந்தி மீதும் இருக்கிறது. குறைந்தபட்சம் உத்தரப்பிரதேசத்தில் மட்டுமாவது நிச்சயமாக இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போதும் இந்திரா காந்தியைப் போற்றக் கூடிய பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். பிரியங்கா காந்தியின் முகத் தோற்றம், ஸ்டைல், உடை மற்றும் முழு தோற்றம் ஆகியவை இந்திரா காந்தியே திரும்ப வந்திருப்பதைப் போன்ற எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திராவைப் போல தோன்றுவது போதுமா?

இந்தக் காரணங்களால் மட்டும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் கணக்குகள் மாறிவிடுமா? பாஜகவையும், நரேந்திர மோடியையும் தோற்கடிக்க இது மட்டும் போதுமா? மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் சமூக பிரச்சாரத்திற்கு மாற்றாக இது இருக்குமா? இந்திரா காந்தியைப் போலவே தோற்றம் அளிக்கும் பிரியங்கா காந்தியின் தோற்றம் மட்டும் காங்கிரஸ் புத்துயிர் பெறுவதற்குப் போதுமானதாக இருக்குமா?

இது பற்றியும், ஒட்டுமொத்த உத்தரப்பிரதேச அரசியல் பற்றியும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவர்களில் ஒருவருமான பிருத்விராஜ் சவான் கூறும்போது, “இந்திரா காந்தியை போல பிரியங்கா காந்திக்கு தோற்றம் இருந்தாலும், அவருடைய முடி அலங்காரம், உடை அணியும் பாங்கு ஆகியவை இந்திரா காந்தியை போல இருந்தாலும், நீண்ட காலத்துக்கு அரசியலில் அது உதவிகரமாக இருக்காது. எனவே அந்த வகையில் நான் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டேன். பிரியங்கா மென்மையானவராக இருக்கிறார் என்பது மிக முக்கியமான விஷயம். அவரை தங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று மக்கள் நினைக்கிறார்கள். யாரும் அவருடன் தொடர்பு கொள்ள முடியும். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கட்சித் தொண்டர்களும், தலைவர்களும் பல ஆண்டுகளாக விருப்பம் தெரிவித்து வந்தனர். ஆனால், குடும்பக் காரணங்களுக்காக அவர் அதைத் தவிர்த்து வந்தார். ஆனால் அவர் கட்சியில் தீவிரமாகப் பங்கேற்கும் நிலையில், தொண்டர்களும், தலைவர்களும் அதிக உத்வேகம் பெற்றிருக்கிறார்கள்” என்று கூறினார்.

உத்தரப்பிரதேச அரசியல் பற்றிக் கூறும்போது, “பெரிய சவாலை பிரியங்கா காந்தி ஏற்றுக் கொண்டிருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேரூன்றி இருக்கிறது. மாயாவதியும், அகிலேஷும் கூட்டு சேர்ந்து காங்கிரஸ் கட்சியிடம் இருந்து விலகி நிற்கிறார்கள். ஆனால், பிரியங்கா வருகைக்குப் பிறகு நிச்சயமாக பாஜக பதற்றம் அடைந்திருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான வாக்கு வங்கியாக இருந்துள்ளது. பிரியங்காவின் வருகையில் அந்த வாக்கு வங்கி மீண்டும் திரும்பி வரும்” என்று தெரிவித்தார்.

குஜராத்தில் அதிக இடங்களை வென்றது, கர்நாடகாவில் பாஜகவை ஆட்சிக்கு வர முடியாமல் தடுத்தது, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் பெற்ற வெற்றிகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால், தோனியை போல இறுதி நேரத்தில் வெற்றியை ஈட்டித் தரும் நபராக பிரியங்கா காந்தி இருப்பாரா? இந்தக் கேள்விக்கு பிருத்விராஜ் சவான் எச்சரிக்கையுடன் பதில் அளிக்கிறார். “கிரிக்கெட் விளையாட்டை இங்கு நான் ஒப்பீடு செய்ய மாட்டேன். வெற்றி கிடைத்தால் நிச்சயமாக கட்சிக்கு மகிழ்ச்சி. ஆனால், ஒரு தலைவர் தோற்கடிக்கப்பட்டால், விமர்சனங்கள் கடுமையாக இருக்கும். நிறைய கேள்விகள் எழுப்பப்படும்” என்று அவர் பதில் அளித்தார்.

பிரியங்கா காந்தியின் தோளில் சுமத்தப்பட்டிருக்கும் பொறுப்பு முக்கியமானது. பூர்வாஞ்சல் பகுதியில் 24 மாவட்டங்கள் பாஜக வலுவாக உள்ள பகுதிகள். பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர். யோகி ஆதித்யநாத் ஆதரவு அதிகமாக உள்ள கோரக்பூர் பகுதியும் பூர்வாஞ்சலில் வருகிறது.

2014 தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளில், பாஜக 71 தொகுதிகளை வென்றது. 2019 தேர்தலுக்கு மாயாவதியும், அகிலேஷும் கைகோர்த்திருப்பதால், மாநிலத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தி அடுத்த இந்திரா காந்தியாக முடியுமா? 

காங்கிரஸ் கட்சியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்கா?

இது காங்கிரஸ் கட்சியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்கா? இந்திரா காந்தியை போல தோற்றம் அளிப்பது பிரியங்காவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உதவிகரமாக அமையுமா? மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான அம்பரீஷ் மிஸ்ரா இந்தக் கேள்விக்கு சுருக்கமான பதிலை அளிக்கிறார். “பிரியங்கா காந்தியின் தோற்றம், முடி அலங்காரம், உடையணியும் பாங்கு ஆகியவை இந்திரா காந்தியை நினைவுபடுத்துகின்றன. அவர் மூலமாக தொண்டர்களும், தலைவர்களும் இந்திரா காந்தியை பார்க்கிறார்கள். பலமான ஒருவரின் முகம், இந்திரா காந்தியை போன்ற ஒரு தலைவர் வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்பது இதன் அர்த்தம். ஆனால் அவர் இந்திரா காந்தியை போல இருக்கிறாரா என்பதை காலம் முடிவு செய்யும்” என்று அவர் கூறினார்.

பிரியங்காவின் ஆளுமை மற்றும் அரசியல் வளர்ச்சி பற்றிப் பேசும்போது, சோனியாவை உதாரணமாகக் கூறுகிறார் அம்பரீஷ் மிஸ்ரா. “ராஜீவ் மரணத்துக்குப் பிறகு, ஆறு முதல் ஏழு ஆண்டுகள் வரை அரசியலில் இருந்து சோனியா விலகியிருந்தார். யாருடனும் அவர் பேசவில்லை. அவர் கருத்துகள் கூறவில்லை. இதனால் அவரை புத்திசாலி, ஜாக்கிரதையானவர், புதிராக இருப்பவர் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் அப்படியில்லை. இல்லாவிட்டால், காங்கிரஸ் இந்த அளவுக்கு கீழே வந்திருக்காது. அதேபோல பிரியங்காவும் `சோதனை செய்து பார்க்கப்படாத ஏவுகணை’ போன்றவர்தான். அவருக்கு உண்மையான பரிசோதனை இனிமேல்தான் நடக்க வேண்டும். எந்தவொரு முடிவுக்கும் வருவதற்கு முன்னதாக, அவருடைய அரசியல் எச்சரிக்கை நிலை, சிந்தனை ஆற்றல், முடிவு எடுக்கும் திறன் மற்றும் அரசியல் பற்றி பார்க்க வேண்டியது முக்கியம்” என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், பிரியங்கா வருகை மூலமாக காங்கிரஸ் கட்சி தனது கடைசி மாஸ்டர் ஸ்ட்ரோக்கை முயற்சி செய்து பார்க்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்திரா காந்தியுடன் அவரை ஒப்பிடுவது பயன் தரும் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் அது காங்கிரசில் இரட்டை அதிகார மையங்களை உருவாக்கும் என்றும் கூறுகின்றனர்.

பிரியங்கா காந்தி அடுத்த இந்திரா காந்தியாக முடியுமா? 

இந்திராவைப் போல பிரியங்கா தோற்றமளிப்பது, பாஜகவுக்கு சவாலா?

இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன், “இந்திரா காந்தியுடன் அவரை ஒப்பிடுவது தவறு. ஆப்பிளை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிடக் கூடாது. இந்திரா காந்திக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது, அந்தக் காலம் முடிந்துவிட்டது. மோதிக்கு சவாலாக பிரியங்கா காந்தி இருப்பாரா? அப்படியானால் அவர் வாரணாசி தொகுதியில் போட்டியிட வேண்டும். உண்மையில், உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மோதி முடிவு எடுத்ததற்கான காரணத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்களின் வாக்குகள் தான் முடிவை நிர்ணயிக்கும். மேலும் பிரியங்காவின் வருகை மாயாவதி, அகிலேஷுக்கும் எதிரானது. இருவருமே காங்கிரஸ் கட்சியிடம் இருந்து விலகியே இருக்கிறார்கள். பிரியங்காவின் வருகை மாயாவதிக்கான பதிலாக இருக்கும். இந்திரா காந்தியை துர்கா என்று ஒரு முறை வாஜ்பாய் கூறினார். உண்மையிலேயே அவர் உறுதியான பெண்மணி. இந்திராவுடன் ஒப்பிடுவது சாத்தியமற்றது” என்று கூறினார்.

பிரியங்கா காந்தி அடுத்த இந்திரா காந்தியாக முடியுமா? 

இருந்தபோதிலும், இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களிடம் உத்வேகம் நிச்சயமாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், பிரியங்காவின் வருகையை அடுத்து, மாநிலக் கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமா? ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து இடங்கள் மட்டுமே தருவதற்கு சந்திரபாபு நாயுடு தயாராக இருக்கிறார். மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் இந்த நடவடிக்கையை வரவேற்கவில்லை. அவருடைய செயல்பாடுகள் பூர்வாஞ்சல் பகுதியுடன் தொடர்புடையதாக மட்டுமே இருக்கும் என்று ராஜகோபாலன் தெரிவித்தார்.

ஆனால் ராஜகோபாலன் கருத்தில் இருந்து ரஷீத் கித்வாய் முற்றிலும் மாறுபடுகிறார். “அவருக்கு அரசியல் எச்சரிக்கை உணர்வு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் பின்னால் இருந்து ஏற்கெனவே அவர் செயல்படத் தொடங்கிவிட்டார். ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் முதல்வர்களைத் தேர்வு செய்வதில் முட்டுக்கட்டை ஏற்பட்ட போது திறமையாக அதற்குத் தீர்வு கண்டிருக்கிறார். அவர் அதில் முக்கியப் பங்காற்றினார். யாருக்கும் மனக் கஷ்டம் வந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்வற்கு அவர் நிறைய முயற்சிகள் மேற்கொண்டார்” என்று அவர் கூறினார்.

பிரியங்கா காந்தி அடுத்த இந்திரா காந்தியாக முடியுமா? 

மோடியின் பேச்சுத் திறன் நாடு முழுக்க பாராட்டப் படுகிறது. மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் காந்தியால் பதில் அளிக்க முடியவில்லை என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், கைகொடுத்து உதவக் கூடிய மீட்பரைப் போல பிரியங்கா இருப்பார் என்று கித்வாய் கருத்து தெரிவிக்கிறார். இதற்கு அத்தாட்சியாக 2014 தேர்தலை அவர் குறிப்பிடுகிறார்.

“கடந்த தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சிக்கு அதிக வயதாகிவிட்டது என்று மோடி பிரச்சாரம் செய்தார். அதற்கு பொதுக் கூட்டம் ஒன்றில் உடனடியாக பதில் அளித்தார் பிரியங்கா. “நான் வயதானவராக உங்களுக்குத் தெரிகிறேனா?” என்று அவர் கேட்டார். வரக் கூடிய தேர்தல்களில் இதுபோன்ற தாக்குதல்கள், எதிர் தாக்குதல்களைக் காண முடியும். இந்திரா காந்தியின் காலத்திலும் இதுபோல இருந்தது” என்று அவர் தெரிவித்தார்.

இந்திராவுக்கும் பிரியங்காவுக்கும் இடையிலான ஒப்பீடுகளுக்குப் பிறகு, பிரியங்காவின் அரசியல் அனுபவம் பற்றி அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த அம்பரீஷ் மிஸ்ரா, “இந்திரா காந்தி அரசியலுக்கு வந்தபோதும், இதேபோல புதியவராகத் தான் இருந்தார். ஆரம்பத்தில் அவருக்கு அசவுகரியமாகத்தான் இரும்தது. அவர் மவுனமாக சமாளித்தார். ஆனால் எழுபதுகளில் மக்கள் மனதில் அவர் இடம் பெற்றுவிட்டார். அவருடைய பிரபலத்துவம் பூதாகரமாக வளர்ந்திருந்தது.

பிரியங்கா காந்தி அடுத்த இந்திரா காந்தியாக முடியுமா? 

அந்த ஈர்ப்பு அவரிடம் இருந்தது. அவரிடம் ஒரு மேஜிக் இருந்தது. அத்துடன் ஒப்பிடும் போது மோடிக்குகூட அது கிடையாது. இந்திராவுக்கு சவாலாக இருந்த ராம் மனோகர் லோஹியா போன்ற தலைவர்கள் இருந்தனர். ஆனால் அரசியல் பாதையில் இந்திரா வெற்றிகரமாகப் பயணித்தார். இப்போதைக்கு காங்கிரஸ் கட்சி வாழ்வா – சாவா நிலையில் உள்ளது. இந்திரா என்ற நற்பெயர் மக்கள் மனதில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. எனவே, பிரியங்கா மூலமாக இந்திராவுக்கு இருந்த ஈர்ப்பை மீண்டும் உருவாக்க முடியும் என்ற எண்ணத்தில் 2019 தேர்தல் களத்தில் அவரை காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தியிருக்கிறது” என்று அவர் கூறினார்.

பிரியங்கா அடுத்த இந்திராவாக முடியுமா? அவருக்கு தலைமைப் பண்புகள் இருக்கின்றனவா? மோடியின் சவாலுக்கு எதிராக காங்கிரசின் வீழ்ச்சி பற்றி அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப் படுகிறது. இந்த நிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, இந்திராவை போல தோற்றம் அளிக்கும் பிரியங்காவால் புத்துயிரூட்ட முடியுமா? இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் 100 நாட்களுக்குள் தெளிவான பதில் கிடைக்கும். நாடு தேர்தலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.