எல்.ஜி. நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் மற்றும் சில சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது.
எல்.ஜி. நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் ஜி8 ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி வழங்கப்படாது என தகவல் வெளியானது. இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 24 ஆம் திகதி சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் வேப்பர் சேம்பர் பயன்படுத்தப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் வேப்பர் சேம்பர் ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.
இந்த வேப்பர் சேம்பர் எல்.ஜி. வி40 தின்க் ஸ்மார்ட்போனின் ஹீட் பைப்-ஐ விட 2.7 மடங்கு பெரியது என்றும் இதில் இருமடங்கு அதிகளவு நீர் இருப்பதாக எல்.ஜி. தெரிவித்துள்ளது. வேப்பர் சேம்பரில் செம்பு பகுதி பெரியதாக இருப்பதால் ஸ்மார்ட்போனில் ஏற்படும் வெப்பம் அதிவேகமாக குறைக்கப்படும்.
சேம்பரில் இருக்கும் நீர் செம்பு பகுதியில் ஏற்படும் வெப்பத்தை குறைத்து ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்து கொள்ளும். இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இது எல்.ஜி. வி40 தின்க் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருப்பதை விட 20% அதிகம் ஆகும்.
புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனில் 5ஜி வழங்கப்படுகிறது என்றாலும், ஸ்மார்ட்போனின் பேட்டரி அதிகளவு பயன்படுத்தப்படாது என எல்.ஜி. தெரிவித்துள்ளது. கொரியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதில் எல்.ஜி. கவனமாக இருக்கிறது.