அரசியல் மனித உரிமைகள் நல்லாட்சி மதிக்கப்படாவிடின் ஜீ.எஸ்.பி.யை மறுபரிசீலனை செய்ய நேரிடுமென ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். ஜெனிவாவில் இம்முறையும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படலாம். ஆனால் அதனை ஜெனிவாவில் நடைபெறும் கலந்துரையாடல்களிலேயே தீர்மானிப்போம் என இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டங் லை மார்க் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.
தற்போது எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் மனந்திறக்கிறார்.
கேள்வி: ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இலங்கையில் மனித உரிமை விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்பீடு என்ன?
பதில்: இது பதிலளிப்பதற்கு ஒரு இலகுவான கேள்வியல்ல. முன்னேற்றங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை மிகவும் மெதுவாக இடம்பெறுகின்றன. ஒரு முன்னேற்றகரமான விடயத்தை நான் பார்க்கின்றேன். அதாவது காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலகமே அதுவாகும். அது தற்போது இயங்கி வருகின்றது. அதுமட்டுமன்றி இழப்பீடு வழங்கும் அலுவலகம் நியமிக்கப்படவிருக்கின்றது. இதுவும் சிறந்த விடயமாகும். இந்தவகையில் பல முன்னேற்றங்களை நான் காண்கின்றேன். இவை போதுமானவையல்ல. ஆனால் சில விடயங்கள் நடந்துள்ளன. காணி விடுவிப்பு இடம்பெற்று வருகின்றது. இராணுவம் காணிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது. இதன் மூலம் மக்கள் மீள் குடியேறி தமது வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். ஆனால் ஒரு விடயத்தை என்னால் காண முடியவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் நடவடிக்கை இன்னும் இடம்பெறவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு வரைபொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பயங்கரவாதம் என்பது முழு உலகத்திற்கும் பெறும் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எனவே வலுவான பயங்கரவாத சட்ட எதிர்ப்பு என்பது அவசியமானதுதான். ஆனால் அது வரையறுக்கப்படவேண்டும். அந்த சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது. அதுவே மிக முக்கியமானதாகும். அந்த விடயத்தில் மாற்றங்கள் இடம்பெறும் என நான் நம்புகிறேன்.
கேள்வி: ஜெனிவாவில் இம்முறை புதிய பிரேரணை ஒன்று கொண்டு வருவதற்கான வரைபு உருவாக்கப்பட்டுள்ளதா?
பதில்: அதுதொடர்பில் ஆராயப்படவேண்டும். அனுசரணை வழங்கிய நாடுகளில் ஜேர்மன் புதிதாக இணைந்துள்ளது. இதுதொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து ஆராயும். ஆனால் இந்த அனைத்து விடயங்களும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளிலேயே தங்கியிருக்கின்றன. இணை அனுசரணை நீடிக்கும் என்று நம்புகின்றோம். மேலும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படலாம் என எண்ணுகிறோம். முன்னேற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அரசாங்கம் நிரூபிக்குமானால் நிலைமை முக்கியத்துவம் மிக்கதாக அமையும். அப்போது வித்தியாசமான ஒரு வகிபாகம் எதிர்பார்க்கப்படலாம். எப்படியிருப்பினும் இறுதி வெளியீடு தொடர்பில் ஜெனிவாவிலேயே கலந்துரையாடல் இடம்பெறும்.
கேள்வி: இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 ஆகிய உடன்படிக்கைகள் இவ்வருடம் மார்ச் மாதத்துடன் முடிவடைகின்றன. இந்நிலையில் இலங்கை முன்னெடுக்கின்ற மனித உரிமை செயற்பாடுகளை சர்வதேசம் தொடர்ந்து கண்காணிக்கவேண்டுமானால் மற்றுமொரு பிரேரணை ஜெனிவாவில் கொண்டுவரப்படவேண்டும் அல்லவா?
பதில்: இதன் சட்டத்தன்மை மற்றும் தொழில்நுட்ப நிலைமை தொடர்பில் என்னால் எதுவும் கூற முடியாது. ஆனால் இந்த பிரேரணையை நிறைவேற்றும் செயற்பாடு தொடரவேண்டும். அதை நாங்கள் பார்த்துக்கொண்டிருப்போம். அரசாங்கத்திடமிருந்து இது தொடர்பில் நாங்கள் அர்ப்பணிப்பை எதிர்பார்க்கின்றோம். அதாவது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்பை எதிர்பார்க்கின்றோம். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடு இன்றி நிரந்தரமான உண்மையான சமாதானத்தை அடைவது கடினமானதாகும். இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இது தொடர்பில் பாரிய அனுபவம் இருக்கின்றது. நாங்கள் யுத்தம் முடிந்ததும் நல்லிணக்கத்தை தேடவேண்டிய நிலைமை காணப்பட்டது. அது மிகவும் நீண்டசெயற்பாடாகும். ஆனால் நாங்கள் அந்த விடயத்தில் ஒரு சிறந்த இடத்தில் தற்போது இருக்கின்றோம். காரணம் அங்கு நல்லிணக்க செயற்பாடுகள் இருந்தன.
கேள்வி : காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகளை எவ்வாறு மதிப்பீடு செய்கின்றீர்கள்? காரணம் காணாமல் போனோரின் உறவினர்கள் இன்னும் வீதிகளில் நீதிகேட்டு போராடுகின்றனரே?
பதில் : எந்தவொரு புதிய விடயத்தை உருவமைக்கும்போது அதனை இலகுவாக விமர்சிக்கலாம். எப்படியிருப்பினும் ஒரு பொறிமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுவே என்னைப் பொறுத்தவரையில் மிகமுக்கியமானதாகும். அது தொழிற்பட ஆரம்பித்துள்ளது. இதற்கு தடைகளும் கஷ்டங்களும் ஏற்படலாம். ஆனால் நான் ஆரோக்கியமான சமிக்ஞைகளை காண்கின்றேன். இன்னும் மக்கள் விரக்தியுடன் இருக்கின்றனர். எனவே தற்போது ஒரு விடயத்தை செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
கேள்வி : இலங்கை அரசாங்கத்துக்கு இந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தவதற்கு மேலும் நேரம் வழங்கப்படவேண்டும் என்று கூறப்பட்டால் அந்த நிலைப்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியமும் இருக்கின்றதா?
பதில் : அது தொடர்பில் ஜெனிவா கலந்துரையாடல்களில் தீர்மானிக்கப்படலாம். முக்கியமான அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. முன்னேற்றங்கள் இருக்கின்றன. ஆனால் அவை மெதுவாக இடம்பெறுகின்றன. உணரக்கூடிய விடயங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
கேள்வி : குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமையை ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு பார்க்கின்றது?
பதில் : பொறுப்புக்கூறல் பொறிமுறை ஊடாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாமல் நீடிக்கும் நிலைமை முடிக்கப்படவேண்டும். ஆனால் நான் இலங்கை பத்திரிகைகளை பார்த்தேன். அதில் பாதுகாப்பு செயலர் அனைத்து இராணுவத்தினரும் இராணுவ வீரர்கள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.
கேள்வி : இலங்கை குறித்த இரண்டு அறிக்கைகளும் வெ ளிநாட்டு நீதிபதிகள் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் இடம்பெறவேண்டும் என்று கூறியுள்ளன. அது தொடர்பில்?
பதில் : நான் இந்த விடயம் குறித்து பார்த்திருக்கின்றேன். முறையான வழக்கு விடயங்களை ஆராயும் ஒரு பொறிமுறையானது இடம்பெறவேண்டும். இது முறையான வகையில் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். அது எனது தனிப்பட்ட கருத்தாகும். எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது? எவ்வாறானவர்கன் இவற்றை முன்னெடுக்கப்போகின்றனர்? என்பனவையே முக்கியமாகும். நீதிக்காக அனைத்து விடயங்களும் உள்ளடங்கிய ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியமாகும்.
கேள்வி : இலங்கையின் 51 நாள் அரசியல் நெருக்கடியின்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் வகிக்கப்பட்ட வகிபாகம் என்ன?
பதில் : முதலில் என்ன நடக்கின்றது என்பதனை நான் ஆராய்ந்து பார்க்கவேண்டியிருந்தது. உங்கள் நாட்டின் அந்த குழப்ப நிலையை புரிந்துகொள்வதே எனக்கு சவாலாக இருந்தது. ஆனால் எமது பிரதான கொள்கை நாட்டின் உள்ளக விடயங்களில் தலையிடுவது இல்லை என்பதாகும். இது ஒரு அரசியலமைப்பு செயற்பாடாகும். நாம் அனைத்துக்கட்சிகளுடனும் தொடர்பில் இருந்தோம். இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை காணமுடியுமா என்பது தொடர்பில் பார்த்தோம். அதாவது இந்த நெருக்கடியானது மறுசீரமைப்பு செயற்பாடுகளில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் பொருளாதாரத்தில் எவ்வாறு தாக்கத்தை என்பதுமே எமது கரிசனையாக இருந்தது. இந்த நெருக்கடி உங்கள் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. ஐரோப்பிய ஒன்றியமும் வேறுபல நாடுகளும் இந்தப் பிரச்சினை முடிந்த விதத்தை வரவேற்கின்றன. சட்டத்தின் ஆட்சிப்படுத்தல், மற்றும் உயர் நீதிமன்றம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் கொடுத்தமை முக்கியத்துவம் மிக்கதாகும். தீர்ப்பதற்கான ஒரு முறைமை இருந்தது. எல்லாத்துறைகளும் ஆரோக்கியமற்றதாக இருக்கவில்லை. முடிவு ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இந்தப் புதிய அரசாங்கம் நெருக்கடியின்போது தாக்கத்தை ஏற்படுத்திய விடயங்கள் தொடர்பில் ஆராயவேண்டும். குறிப்பாக பல முதலீட்டாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். அரசாங்கம் அந்த முதலீடுகளை திருப்பி பெறவேண்டும். அத்துடன் நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணவேண்டும். பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது என்பது சாதாரண விடயமல்ல. குறிப்பாக முதலீடுகளைப் பொறுத்தவரையில் நாட்டின் அரச அதிகார மட்டங்கள் , மேலும் செயற்றிறனாகவேண்டும். முதலீட்டாளர்கள் நாட்டின் முழுமையான நிலைமை குறித்து அவதானம் செலுத்துவார்கள். அவர்கள் முதலீடுகளை செய்வதற்கு முன்னர் அதனைப் பார்ப்பார்கள். அதிகளவான ஐரோப்பிய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதா இல்லையா என்பதை கேட்டுக்கொண்டிருந்தன . நான் அரசியல் நிலைமையைப் பற்றி மட்டும் பேசவில்லை. சட்ட சூழல் வரிசலுகைகள், வர்த்தகர்களுக்கான நீண்டகால வீசா உள்ளிட்ட விடயங்கள் குறித்து பார்க்கவேண்டும். முன்னேற்றமடைவதற்கு உங்கள் நாட்டிலும் சிறந்த ஆற்றல் காணப்படுகின்து.
கேள்வி : 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் முதலீட்டாளர்களை ஊக்குவிக்காத நிலைமை காணப்படுகின்றதா?
பதில்: நான் ஐரோப்பிய ஒன்றிய – இலங்கை முதலீட்டுக் கலந்துரையாடலை நடத்துகிறேன். இதன்போது ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் முறைப்பாடுகளை முன்வைக்கின்றன. தொழில்நுட்ப பிரச்சினைகள், நிர்வாகப் பிரச்சினைகள், சுங்கத்திணைக்கள சிக்கல்கள் போன்றவற்றை அவர்கள் எதிர்கொள்கின்றனர். செயற்பாடுகளை ஆரம்பிப்பதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். எனவே நாங்கள் சர்வதேச கூட்டுறவு வர்த்தக அமைச்சுடன் இணைந்து இந்த ஐரோப்பிய ஒன்றிய இலங்கை முதலீட்டு கலந்துரையாடலை நடத்துகின்றோம். ஒவ்வொறு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் இந்த கலந்துரையாடல் நடைபெறும். அந்த கலந்துரையாடலில் நாங்கள் இணைத்தலைமை வகிக்கின்றோம். கொள்கைகள், முதலீட்டாளர்களுக்கான ஊக்குவிப்புகள், என்பன தொடர்பில் பேசுகிறோம். முறைப்பாடுகளை முன்வைக்கும் நிறுவனங்களும் இதில் பங்கேற்கின்றன. இது சிறந்த பயன்களை தருவதாக அமைந்திருக்கிறது. மூன்றில் இரண்டு பிரச்சினைகளை இதன்மூலம் நாங்கள் தீர்த்திருக்கிறோம்.
கேள்வி: அரசியல் நெருக்கடி நேரத்தில் நீங்கள் அனைத்துக் கட்சிகளையும் சந்தித்தீர்கள். அப்போது பிரச்சினை தீர்க்கப்படாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை நிறுத்துவதாக எச்சரித்தீர்களா?
பதில்: நான் ஒருவிடயத்தை கூறினேன். ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்த ஒரு கலந்துரையாடலில் நான் கலந்துகொண்டேன். கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர். ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையானது அரசாங்கம் வழங்கிய அர்ப்பணிப்புக்காகவே மீண்டும் வழங்கப்பட்டது. குறிப்பாக 27 சர்வதேச சாசனங்களை அமுல்படுத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதில் நல்லாட்சியும் காணப்படுகின்றது. இந்த சாசனங்களும் மக்களுக்கு நன்மை பயப்பதாகவே அமைந்திருக்கின்றன. அந்த வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மதிக்கப்படவேண்டும். அந்தவகையில் இந்த வாக்குறுதிகள் அர்ப்பணிப்புக்கள் மதிக்கப்படாவிடின் நாம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய நேரிடும் என்பதை நான் அந்தக்கூட்டத்தில் கூறினேன். அதாவது எமது தரப்பு விடயங்களை நாம் செய்திருக்கின்றோம். 2017ஆம் ஆண்டிலிருந்து ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை அமுலில் இருக்கிறது. அதனூடாக மக்கள் பயனடைந்திருக்கின்றனர். இதன் மூலம் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதி 18 வீதத்தினால் அதிகரித்திருக்கிறது. ஐரோப்பா இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய சந்தையாக காணப்படுகின்றது. இலங்கையின் பொருளாதாரத்திற்கு அது ஆரோக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கேள்வி : அதற்கு ஜனாதிபதியின் பதில் எவ்வாறு அமைந்தது?
பதில் : அவர் அதற்கு கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அர்ப்பணிப்பு மதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
.கேள்வி : சர்வதேச சாசனங்கள் மதிக்கப்படாமல் இருப்பதாக கருதுகின்றீர்களா?
பதில் : அவற்றை நாங்கள் ஜெனிவாவில் கலந்துரையாடுவோம். எனவே அது தொடர்பில் தற்போது பேச நான் தயாரில்லை. ஜெனிவாவுடன் இந்த விடயம் தொடர்புபடாவிடினும் நாங்கள் அதனை அங்கு ஆராய்வோம். கண்காணிப்பு நடைமுறை இருந்துவருகின்றது. மதிப்பீட்டு அறிக்கைகள் உருவாக்கப்படும். வருட ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கண்காணிப்பு குழு ஒன்று இலங்கைக்கு வருகை தரும். இந்த விடயங்களை ஆராயும். அவர்கள் தயாரிக்கும் அறிக்கை ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு அனுப்பப்படும். அனைத்து நாடுகளும் அனைத்து விடயங்களையும் ஒரே தடவையில் அமுல்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
கேள்வி : 27 சாசனங்கள் மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமை குறித்தும் பேசுகின்றன. இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் அரசியல் அதிகார தீர்வுக்காக நீண்டகாலம் காத்துக்கொண்டிருக்கின்றனர். அரசியலமைப்பு செயற்பாடும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. அது தொடர்பில் உங்கள் பார்வை?
பதில் : அது மிகவும் முக்கியமான அம்சமாகும். நாட்டின் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு அது அவசியமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கு இந்த விடயத்தில் பாரிய அனுபவம் இருக்கின்றது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கவேண்டும் என்பது பொதுவான விடயமாகும். ஆனால் அது மிகவும் முறையாக செய்யப்படவேண்டும். அது ஏன் முக்கியத்துவம்? உள்நாட்டு மட்டத்தில் மக்களின் தேவைகள் வித்தியாசமாக காணப்படும். பாடசாலை வீதிகள் போன்ற .தேவைகள் இருக்கும். அவை மாநில மட்டத்திலேயே செய்யப்படவேண்டும். எப்படியிருப்பினும் இலங்கை இறைமை உள்ள நாடாகும். அது உங்கள் முடிவாகவே அமையும். மாகாணங்களில் வாழும் மக்கள் தமது அன்றாட விடயங்களை நிர்ணயிக்க விரும்புவார்கள். அரசியலமைப்பு உருவாக்க செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும் என்று நாங்கள் இன்னும் நம்புகின்றோம். வரப்போகின்ற வெ ளியீடு குறித்து பார்க்கின்றோம். நான் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருக்கின்றோம்.
கேள்வி : அரசியல் நெருக்கடியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணிலுக்கு ஆதரவளித்திருந்தது. அந்த முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு பார்க்கின்றது?
பதில் : அந்த விடயத்தை மத்தியஸ்தம் செய்வதற்கு நான் தயாரில்லை. இது உள்ளக அரசியல் விவகாரமாகும். அது குறித்து நான் கருத்து வெ ளியிடுவது பொருத்தமாகாது.
கேள்வி : இலங்கையில் சீனாவின் வகிபாகத்தை ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு பார்க்கின்றது?
பதில் : இந்த விடயத்தில் சரி சமமான ஒரு பார்வை அவசியமாகும். சீனா பெரிய நாடு. இந்தியாவும் கூட பெரிய வகிபாகத்தை வகிக்க முடியும். ஆனால் அனைத்து நாடுகளும் சரி சமமான அனுகுமுறையை முன்னெடுக்கவேண்டும் என்பதே முக்கியமாகும். 2015 ஆம் ஆண்டிலிருந்து இந்த விடயங்களில் ஒரு முறையான அனுகுமுறையை நாங்கள் அவதானிக்கின்றோம். இலங்கையில் இந்தியா மிக முக்கிய வகிபாகத்தை வகிக்கவேணடும். அதேபோன்று மேற்கு நாடுகள் ஜப்பான் போன்றவற்றுக்கும் வகிபாகம் உள்ளது. இங்கு நிலைமை நன்றாக இருந்தால் முதலீடுகள் அதிகரிக்கும். உங்கள் நாடு புவியியல் ரீதியாக சிறந்ததொரு இடத்தில் அமைந்திருக்கின்றது. துறைமுகங்கள், என்பன முக்கியத்துவம் மிக்கதாகும்.
கேள்வி: அரசியல் நெருக்கடி நேரத்தின்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீடுகள் திட்டங்கள் எதுவும் பாதிக்கப்பட்டனவா?
பதில்: ஆம் நிச்சயமாக பாதிக்கப்பட்டன. இரண்டு வகையான திட்டங்களை நாம் முன்னெடுக்கின்றோம். அதாவது அரசாங்க மடத்திலான திட்டங்கள் மற்றும் தனியார் மடத்திலான திட்டங்களே அவையாகும். அரசாங்க திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிதி அளிக்கின்றன. அவ்வாறான சில திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன. அவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. தனியார் துறை திட்டங்களிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டன. சில நிறுவனங்கள் தமது முதலீடுகளை நிறுத்திவிட்டன. அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவார்கள் என்று நம்புகிறோம். அதுதொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.
கேள்வி: மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியிருக்கின்றது. அந்தநாடு இலங்கை பிரேரணை விடயத்தில் பங்களிப்பை செலுத்தியிருந்தது. அந்த இடைவெளியை ஐரோப்பிய ஒன்றியம் நிரப்புமா?
பதில்: ஐரோப்பிய ஒன்றியம் என்பது ஒரு பிராந்திய அமைப்பாகும் எனவே அந்த விடயத்தில் நாங்கள் உடனடியாக தலையிட முடியாது. ஆனால் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுக்கலாம். ஜேர்மன் இதில் முன்வந்துள்ளது. அப்படியாயின் எமது தரப்பில் ஒருவர் அங்கு இருக்கிறார். எப்படியிருப்பினும் ஜெனிவாவில் நாங்கள் பரந்துபட்ட பேச்சுவார்த்தை நடத்துவோம்.
– நேர்கண்டவர் – ரொபட் அன்டனி