தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில், தான் தனது பாட்டிக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை என்று கூறினார்.
வாரிசு நடிகையாக அறிமுகமானாலும் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். முக்கியமாக நடிகையர் திலகம் படத்தில் மூத்த நடிகை சாவித்திரியை கண் முன் கொண்டு வந்ததால் நாடு முழுக்க பிரபலம் ஆகிவிட்டார்.
கீர்த்தி சுரேஷ் முன்னாள் நடிகை மேனகா சுரேசின் மகள். கீர்த்தியின் பாட்டியும் ஒரு நடிகை தான். சில படங்களில் நடித்துவிட்டு ஒதுங்கியவர், தனது 80 வயதில் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
ரெமோ, கடைக்குட்டி சிங்கம் படங்களில் நடித்த அவர் தாதா 87 படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் பாட்டிக்கு வாய்ப்பு கேட்பதாக ஒரு செய்தி வந்தது.
இதுபற்றி கேட்டதற்கு ‘யார் இப்படி எல்லாம் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் அப்படி யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. வாய்ப்பு கேட்டு நடிக்கும் அளவுக்கு பாட்டி ஒன்றும் முழுநேர நடிகை அல்ல. இந்த செய்தியை படித்துவிட்டு குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தோம்’ என்றார்.
Eelamurasu Australia Online News Portal