தமிழிலேயே கேள்வி கேட்கலாம்; பதில் சொல்லலாம்!

சர்வதேச அளவில் பயனர்களே கேள்வி கேட்டு, பயனர்களே பதில்கள் கூறும் இணையதளம் ‘கோரா’ (Quora).

முதன்முதலில் ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இது, பயனாளர்களின் வரவேற்பு காரணமாக இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் உட்பட 16 மொழிகளில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது பதினேழாவதாக தமிழில் ‘கோரா’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

”அறிவைப் பகிர்வதற்கும் உலகை நன்கு அறிவதற்குமான ஓர் உயரிய இடம்” என்று கோரா தமிழ் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் நீங்கள் என்ன வகையான கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம், பதில் அளிக்கலாம். ஒரே கேள்விக்கு எத்தனை பேர் வேண்டுமானாலும் பதில் கூறலாம்.

இந்நிலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ‘கோரா’ தமிழ் தளத்தின் பயன்பாட்டாளர் ஒருவர், ”கோரா ஒரு அறிவுசார் தளம் என்பதால், அறிவுப்பூர்வமான கேள்விகளையும், விடைகளையும் இடுங்கள். வெற்றுப் பெருமை, வெறுப்புப் பேச்சு ஆகியவற்றைத் தவிருங்கள். உங்களது பெயர், முகவரி போன்ற விவரங்களை தமிழில் குறிப்பிடுங்கள்.

தரும் தகவல்கள் உண்மையானவை என்று உறுதிப்படுத்த சான்றுகள் இருந்தால் சேருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது ‘கோரா’ இணையதளத்தை உலகம் முழுவதும் 30 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

Quora தமிழ் தளத்தின் இணைப்பு: https://ta.quora.com