திட்டமிடப்பட்ட நில அபகரிப்பு!

திருகோணமலை,  கோணேசபுரி வனப் பகுதியை, வனப் பாதுகாப்புத் திணைக்களம், திட்டமிட்டு அபகரிப்பதாக, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உப்புவெளிப் பிரதேச சபை உறுப்பினர் ச.விவுசன் குற்றஞ்சாட்டினார்.

திருகோணமலை,  சாம்பல் தீவு 06ஆம் வட்டாரப் பகுதி, ஆத்திமோட்டை, கோணேசபுரி, சாம்பல்தீவு குடியிருப்புப் பிரதேசங்களின் நடுவில் காணப்படுகின்றது.

இதனுள் இரு கிராமங்களை இணைக்கும் வீதிகள்,  குடியிருப்புக் காணிகள், வயல் நிலங்கள், தோட்டக் காணிகள் காணப்படுவதாகவும் இவற்றையே, வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் அடையாளக்கல் இட்டு, முற்றுகையிட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் நிலங்களும், பொது இடங்களும் பரவலாக அரச திணைக்களங்கள் மூலம் அபகரிக்கப்பட்டு வருவதாகவும் இச்செயற்பாட்டால் இப்பிரதேச மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

வனப் பாதுகாப்புத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் அனைத்தும் “சிங்களத்தின் பிரதிபலிப்பு” என, தமிழ் மக்கள் மத்தியில் இன ரீதியான முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இவ்வாறான நில அபகரிப்புகளை, மக்களோடு இணைந்து தாமும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்த அவர், பிரதேச செயலாளரைச் சந்தித்து, மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ள போதும் இது தொடர்பான முழுமையான தீர்வு கிட்டும்வரை மக்களுடன் முன்நின்று குரல் கொடுப்போமென்றார்.