வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிரான மற்றும் ஆதரவு போராட்டங்களின்போது ஏற்பட்ட மோதல்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. மதுரோவுக்கு எதிரான போராட்டம் மற்றும் ஆதரவு போராட்டங்களால் பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்தது.

நேற்று மதுரோவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகீசா, பரினாஸ், டாச்சிரா, காரகாஸ், அமமேசானஸ் மற்றும் பொலிவார் மாநிலங்களில் நடந்த மோதல்களில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக நேற்று பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிபர் மதுரோ பதவி விலகவேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
Eelamurasu Australia Online News Portal