நன்கொடை திரட்ட நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் நடிகை காஜல் அகர்வால் கலந்துக் கொண்டிருக்கிறார்.
காஜல் அகர்வால் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் திரைப்படம் வெளியீட்டை எதிர் பார்த்துள்ளது. கமல் ஹாசனுடன் இணைந்து அவர் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18ந்தேதி தொடங்கியது. விரைவில் காஜல் படக்குழுவுடன் இணைய உள்ளார்.
டாடா கண்சல்டன்சி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மும்பையில் பல்வேறு தலைப்புகளின் கீழ் மாரத்தான் போட்டியை நடத்தி வருகிறது. இதில் இந்தி, தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.
16-வது முறையாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நடிகை காஜல் அகர்வால் கலந்து கொண்டு 10 கிமீ., தூரம் ஓடியுள்ளார். பழங்குடியினருக்கு விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், திறமைவாய்ந்த பழங்குடியின விளையாட்டு ஆளுமைகளுக்குச் சக்தி வாய்ந்த உணவு கிடைத்திடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
திங்க் பீஸ் அமைப்பு இதை ஒருங்கிணைத்திருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியிலும் காஜல் அகர்வால் கலந்து கொண்டார்.
மாரத்தானில் கலந்து கொண்டது குறித்து காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இது எனது இரண்டாவது மாரத்தான். பத்து கிலோ மீட்டர் தூரத்தை 70 நிமிடங்களில் கடந்துள்ளேன். கடந்த ஆண்டை விட 8 நிமிடங்கள் குறைவாகவே இலக்கை அடைந்துள்ளேன்.
தற்போது இலக்கைக் குறிவைத்தல், உறுதியோடு இருத்தல், உடல்நிலையைச் சீராக வைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு 21 கிலோ மீட்டர் ஓட வேண்டும். திங்க் பீஸ் அமைப்பிற்கு ஆதரவளித்து நன்கொடைகளைத் திரட்ட வேண்டும். பழங்குடியின மக்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க ஊக்கமளிக்க வேண்டும்” என்று பதிவிட்டு உள்ளார்.