அணு ஆயுத கைவிடல் தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் இரண்டாவது உச்சி மாநாட்டில் டிரம்பும், கிம் ஜாங் அன்னும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் உலகமே வியக்கிற வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
அதில், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிப்பதற்காக உழைப்பது என டிரம்பும், கிம்மும் உறுதி எடுத்துக்கொண்டனர்.
ஆனால் அந்த ஒப்பந்தத்தின்படி, அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு வடகொரியா உறுதியான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அமெரிக்கா கருதுகிறது.
இருப்பினும், மீண்டும் உச்சி மாநாடு நடத்தி டிரம்பை சந்திக்க கிம்ஜாங் அன் விருப்பம் தெரிவித்தார்.
இந்த நிலையில், அவரது சிறப்பு தூதரான கிம் யாங் சோல், நேற்று முன்தினம் வாஷிங்டன் சென்று டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவர், டிரம்பிடம் கிம் ஜாங் அன் தந்து அனுப்பிய கடிதத்தை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, அணு ஆயுத கைவிடல் தொடர்பாக அடுத்த மாத (பிப்ரவரி) இறுதியில் இரண்டாவது உச்சி மாநாடு நடத்தி டிரம்பும், கிம் ஜாங் அன்னும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்திதொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “அணு ஆயுத கைவிடல் விவகாரத்தில் நாங்கள் தொடர்ந்து முன்னேற்றம் காண விரும்புகிறோம். நாங்கள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துகிறோம்” என குறிப்பிட்டார். அதே நேரத்தில் இரண்டாவது உச்சி மாநாடு எங்கே நடத்தப்படும் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.