பொறுப்புக் கூறல் சாத்தியமா?

மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கம் எவ்வாறு பொறுப்பு கூறப் போகின்றது என்பது, பிறந்துள்ள புதிய ஆண்டில் எழுந்துள்ள பல்வேறு கேள்விகளில், அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய அவசியத் தேவையைக் கொண்டுள்ள தமிழர் தரப்பு அரசியலிலும் கூர்மையான விடயமாகக் கருதப்படுகின்றது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநாவின் மனி;த உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை விவகாரம் முன்னெப்போதும் இல்லாத அளவில் சூடு பிடித்திருக்கும் என்பதே இதற்கான காரணமாகும்.

யுத்தம் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாகின்றது. ஆனால், யுத்தகாலத்தில்; குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களுக்கும், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கும் அரசு இன்னும் பொறுப்பு கூறவில்லை. ஆயுத ரீதியான முரண்பாடு அல்லது யுத்த மோதல்களுக்குக் காரணமான இனப்பிரச்சினைக்கு, யுத்தத்தை முடிவுக்கு வந்ததையடுத்து, ஓர் அரசியல் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை.

பொறுப்பு கூறுதல், அரசியல் தீர்வு காணுதல் ஆகிய இரண்டும், இலங்கை அரசியலில் உள்ளூரிலும் சர்வதேச வெளியிலும் நிறைவேற்றப்பட வேண்டிய மிக முக்கியமான காலம் தாழ்த்தப்பட்ட விடயங்களாக மிளிர்கின்றன. யுத்தம் முடிவடைந்ததும், யுத்த மீறல் நடவடிக்கைகள் குறித்து பொறுப்பு கூற வேண்டும் என்று ஐநா செயலாளர் நாயகம் பன் கீ மூன் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தார்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டை பயங்கரவாதப் பிடியில் இருந்து மீட்டு, மக்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்ததாகப் புகழாரம் சூட்டப்பட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, உரிமைகள் மீறப்பட்டமைக்கு பொறுப்பு கூறுவதாக அப்போதைய ஐநா செயலாளர் நாயகம் பன் கீ மூனிடம், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி குருதி தோய்ந்த கைகளுடன் உறுதியளித்திருந்தார். இந்த உறுதிமொழி பின்னர் கொள்கையளவிலான ஒரு விடயமாகக் கபடனத்தனமாக இலங்கை அரசினால் மாற்றப்பட்டது.

ஆயினும், ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராயப்பட்டு, ஐநா பாதுகாப்பு சபையின் கவனத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, போர்க்குற்ற நடவடிக்கைகளாகக் கருதப்பட்ட, அரச படைகளின் இறுதிக்கட்ட யுத்தகால மனித உரிமை மீறல் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் நடத்தவும், நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறைகளை உருவாக்கி நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்கவும் அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக 2009 ஆம் ஆண்டின் பின்னர் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்டன.

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பயன்படுத்தப்பட்ட வெடி குண்டுகள், துப்பாக்கி வேட்டுக்களின் புகை மண்டலம் சூழ்ந்து, முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இரத்தம் காயாத நிலையில் யுத்தம் முடிவடைந்த ஐந்தாவது நாளாகிய மே 23 ஆம் திகதி ஐநா செயலாளர் நாயகம் பன் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்து யுத்தம் நடைபெற்ற பிதேசத்திற்கு மேலாகப் பறந்து நிலைமைகளை நேரடியாக அவதானித்திருந்தார்.

யுத்தம் முடிவடைந்துவிட்டது என்று யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மறுநாளாகிய மே மாதம் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரகடனப்படுத்திய அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாட்டில் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தி அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் யுத்த மோதல்களுக்குக் காரணமான இனப்பிரச்சினைக்கு தேசிய அளவில் அனைத்து மக்களுக்கும் ஏற்புடையதோர் அரசியல் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

அரசியல் தீர்வுக்காக 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், யுத்தம் முடிவுக்கு வந்துள்ள புதிய சூழலில் தமிழர் தரப்புக்கள் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் விரிவான பேச்சக்கள் நடத்தி அரசியல் தீர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதிப்பட கூறியிருந்தார்.

மனித உரிமைகள் மட்டுமல்ல அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் முக்கியம்

அவருடைய அந்தக் கூற்றை வரவேற்றிருந்த ஐநா செயலாளர் நாயகம் நாட்டின் நீண்டகால சமூக பொருளாதார அபிவிருத்திக்கு இறுதியானதோர் அரசியல் தீர்வு அடிப்படைத் தேவை என்பதை வலியுறுத்தியிருந்தார். சகல சமூகங்களினதும் அபிலாசைகளை நிறைவேற்றுவதே நிரந்தரமான அமைதிக்கு வழிகோலும் என்பதையும் பன் கீ மூன் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஐநாவின் இந்த வலியுறுத்தல்கள், சரியாக 9 வருடங்கள், 7 மாதங்கள் 27 தினங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அரசாங்கத்தினால் சரியான முறையில் கவனத்திற் கொள்ளப்பட்டு உளப்பூர்வமாக நிறைவேற்றப்படவில்லை.

இலங்கை அரசாங்கங்களினால் பயங்கரவாதம் என சித்தரிக்கப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில், ஆயுத மோதல்களில் ஈடுபட்டிருந்த அரசு மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய இருதரப்பினருமே மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டு, இதனை மறுக்க முடியாது. ஆனாலும் யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட நிலையில் உரிமை மீறல்களாகிய போர்க்குற்றச் செயல்களுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டது என்ற பொறுப்புடைய அரசாங்கம் பொறுப்பு கூறுகின்ற கடமையில் இருந்து தவற முடியாது. இதன் காரணமாகத்தான் ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு எதிராகவும், மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துகின்ற நோக்கத்திலும் அடுத்தடுத்து தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஐநா செயலாளர் நாயகம் பன் கீ மூன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி ஜனாதிபதி மைகிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் செய்து யுத்த மோதல் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டிருந்தார். குறிப்பாக யுத்தத்திற்குள் சிக்கியிருந்து அரசாங்கத்தினால் இடம்பெயரச் செய்யப்பட்டு, அரச படைகளினால் அழைத்து வரப்பட்;;ட மூன்று லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வவுனியா செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமுக்கும் அவர் நேரடியாகச் சென்று நிலைமைகளை அவதானித்திருந்தார்.

இராணுவத்தின் இறுக்கமான பாதுகாப்பு கெடுபிடிக்குள் அங்கு தஞ்சம் புகுந்திருந்த மக்களுடனும், கலந்துரையாடி அந்த மக்களின் நிலைமைகளையும் தேவைகள், வேதனைகளையும் கேட்டறிந்த பின்னர், மே மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற ஐநாவின் விசேட கூட்டத்தில் இலங்கை நிலைமைகள் குறித்து அவர் எடுத்துரைத்திருந்தார்.

அப்போது, இலங்கை நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்த அந்தக் கூட்டத்தில் ஐநா செயலாளர் நாயகமும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையை உறுதிப்படுத்தியதுடன், அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இன மதம் சார்ந்த அனைத்து மக்களிடையே நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டி, நீடித்த அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக பரந்த அளவிலான கலந்துரையாடல்களின் மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று அந்தத் தீர்;மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

முடிவுக்கு வருகின்ற கால அவகாசமும் பொறுப்புக்களை நிறைவேற்ற விரும்பாத போக்கும்
பாதிக்கப்பட்டு உள்ளூரிலேயே இடம்பெயர்ந்துள்ள மக்களை பாகுபாடற்ற வகையில் ஆறுமாத காலத்திற்குள் அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுடைய மறுவாழ்வு மற்றும் உளவியல் பாதிப்புகளுக்கான நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தத் தீர்மானத்தில் ஐநாவினால் வலியுத்தப்பட்ட அல்லது நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்திருந்த நடவடிக்கைகள் முழுமையாக இன்னும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாத காரணத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களில் சென்று மீள்குடியேற முடியாத நிலைமை தொடர்கின்றது.

மீள்குடியேற்றப் பிரதேசங்களில் மீள்குடியேறியுள்ள மக்களின் நிலையான அபிவிருத்தியை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் பாகுபாடான முறையிலேயே நடந்து கொள்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் உளநல மேம்பாட்டுக்குரிய வேலைத்திட்டங்கள் பயன்தரத்தக்க வகையில் முன்னெடுக்கப்படவில்லை. இதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை. அதேபோன்று பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என சொல்லப்படுகின்ற தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் தலைமைகளிடமும் இந்த விடயம் சார்ந்த வேலைத்திட்டங்களோ அல்லது அத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்குரிய அரசியல் ரீதியான மெய்யுணர்வும் காணப்படவில்லை.

மனித உரிமைகளின் முன்னேற்றம் அவற்றின் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கான உதவி என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட 11-1 என்ற இலக்கம் கொண்ட இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் மேலும் ஐந்து தீர்மானங்கள் ஐநாவினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வகையில் 19-2 என்ற இலக்கம் கொண்ட தீர்மானம் 2012 ஆம் ஆண்டிலும், 22-1 என்ற இலக்கம் கொண்ட தீர்மானம் 2013 ஆம் ஆண்டிலும், 25-1 என்ற இலக்கம் கொண்ட தீர்மானம் 2014 ஆம் ஆண்டிலும், தொடர்ந்து 30-1 என்ற மிகவும் காரசாரமான தீர்மானம் 2015 ஆம் ஆண்டிலும், 34-1 என்ற இலக்கம் கொண்ட தீர்மானம் 2016 ஆம் ஆண்டிலும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்தத் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்சார்ந்து மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காட்டுவதில் அரசாங்கம் அசமந்தப் போக்கிலேயே சென்று கொண்டிருக்கின்றன என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து 2015 ஆம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அந்த வருடம் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கி அதனை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. நிலைமாறுகால நீதிக்கான செயற்பாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட நான்கு பொறிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கைகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்திற்கு விசேடமாக வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் இந்த மார்ச் மாதத்துடன் முடிவடைகின்றது. எனினும் பொறுப்பு கூறும் விடயத்தில் தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையற்ற போக்கிலேயே சென்று கொண்டிருக்கின்றது.

நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், இழப்பீடு வழங்குதல், மீள்நிகழாமையை உறுதி செய்தல் ஆகிய நான்கு விடயங்களுக்கான பொறிமுறைகளில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உண்மையான நிலைமை என்ன என்பதைக் கண்டறிவதற்காக காணாமல் போனோருக்கான அலுவலகம் மாத்திரமே நிறுவப்பட்டிருக்கின்றது. அந்த அலுவலகமும் பாதிக்கப்பட்ட மக்களின் பங்கேற்புடனும், அவர்களுடைய கருத்துக்களை உள்வாங்கியும் அமைக்கப்பட வேண்டும் என்ற நியதி கடைப்பிடிக்கப்படவில்லை. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்;கத் தக்க வகையில் அந்த அலுவலகத்தின் உருவாக்கமும் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என்பது கவலைக்குரியது.

அடுத்த கட்டம் என்ன?

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் செயற்பாடுகளும் அரசியல் இலாபம் கருதிய நோக்கத்திலேயே முன்னெடுக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. மக்கள் நலன் சார்ந்ததாக இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு கிட்டும், பிரச்சினைகள் தீர்;க்கப்படும், பொறுப்பு கூறல் செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் கடந்த அக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற அரச தலைவரின் அரசியல் சதி முயற்சி பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்து எதிர்பார்ப்புக்களையும் சிதறடித்துள்ளது.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவையில் பொறுப்பு கூறும் விடயத்தில் எத்தகைய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசாங்கம் அந்த விடயத்தில் தோல்வி அடைந்திருப்பதாகவே மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கம் என அழைக்கப்பட்ட அரசாங்கத்தில் 2018 அக்டோபர் 26 ஆம் திகதி அரச தலைவரினால் அரங்கேற்றப்பட்ட அரசியல் சதி முயற்சி பொறுப்பு கூறுகின்ற செயற்பாட்டை அச்சுறுத்தி சிதறடிக்கச் செய்துள்ளதாக மனித உரிமைகள் காப்பகம் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

அதன் வருடாந்த அறிக்கையில் இலங்கை விவகாரம் குறித்து விசேட கவனம் செலுத்தி கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது. இரண்டு தேசிய கட்சிகளும் இணைந்து அமைத்திருந்த அரசாங்கம் நீதி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றது என்று அந்த அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் சதி முயற்சி என குறிப்பிடப்படுகின்ற நடவடிக்கையை அரச தலைவரின் அரசியல் என்று மனித உரிமைகள் காப்பகத்தின் தெற்காசிய செயலகத்தின் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வர்ணித்துள்ளார்.

இந்த அரசியல் குழப்பநிலைமையானது, நீதி கிடைக்கும் என நம்பியிருந்த மூன்று தசாப்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் சுருங்கிச் செல்கின்ற நம்பிக்கைகளை மேலும் தாமதமடையச் செய்திருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்;.

அதேவேளை, பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அந்த நாட்டின் வெளியுறவு செயலகத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான இணை அமைச்சர் மார்க் பீல்ட் பொறுப்பு கூறும் விடயத்தில் அரசு ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றார்.

அவருடைய இந்த வலியுறுத்தல் இலங்கை விவகாரம் தொடர்பில்; மார்ச் மாதம் ஐநா மனித உரிமைப் பேரவையில் விசேட கவனம் செலுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பின் பின்னணியில் வெளியிடப்பட்டிருப்பதாக அவதானிகள் கருதுகின்றனர்.

யுத்தத்திற்குப் பின்னரான நிலைமைகளில் இன ஐக்கியமும், ஒற்றுமையும், நிலையான அபிவிருத்தியும் ஏற்படுவதற்கு மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதுடன், மீள் நிகழாமையை உறுதி செய்வதற்கு இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு காண்பதும் இன்றியமையாதன. இந்த விடயத்தில் ஐநா மன்றத்திற்கு அரசு 2015 ஆம் ஆண்டு வழங்கியுள்ள இணை அனுசரணையும், பொறுப்பு கூறுவதற்கான ஒப்புதலும் மிக முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன.

ஆனால், ஐநா மனித உரிமைப் பேரவையின் 30-1 தீர்மானத்திற்கு வழங்கியுள்ள இணை அனுசரணையை மீளப் பெறுவதற்கு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றது. பொறுப்பு கூறும் விடயத்தில் பொறுப்பற்ற விதத்தில் மிகவும் மந்த கதியில் செயற்பட்டு வருகின்ற அரசாங்கம், இத்தகைய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு செயற்படத் துணியுமேயானால் சர்வதேசத்தின் நன்மதிப்பை இழக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை. அது மட்டுமல்லாமல் சர்வதேசத்தின் உதவிகள் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வதிலும் இலங்கை பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பதிலும் சந்தேகமில்லை.

பி.மாணிக்கவாசகம்