அமெரிக்காவில் அரசுத் துறைகள் முடங்கியிருப்பதால், டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்கும் தனது குழுவின் பயணத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார்.
அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் அதிபர் டிரம்ப் ஒப்புதல் கேட்டார். அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை.
அதனால் ஆண்டு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் சுமார் ஒரு மாத காலமாக, பாதி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன. இதனால் 8 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, வெள்ளை மாளிகையில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். ஆனால், இந்த கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. தனது நிபந்தனைகள் ஏற்கப்படாததால் பாதியில் வெளியேறினார் டிரம்ப்.
அரசுத் துறைகள் முடக்கம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், டாவோசில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்பதை டிரம்ப் ரத்து செய்தார். அவர் சார்பில் கருவூலத்துறை மந்திரி ஸ்டீவ் மினுச்சின் தலைமையில், வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, வர்த்தகத்துறை மந்திரி வில்பர் ரோஸ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு டாவோஸ் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், கடைசி நேரத்தில் அமெரிக்க குழுவின் டாவோஸ் பயணத்தையும் டிரம்ப் ரத்து செய்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசுத் துறைகள் முடக்கத்தினால் 8 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காத நிலை நீடிப்பதாலும், அவர்களுக்கு தனது அமைச்சரவை உறுப்பினர்களின் உதவி தேவைப்படுவதாலும் டாவோஸ் பயணத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்திருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
முன்னதாக, பிரசல்ஸ், எகிப்து, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி மேற்கொள்ளவிருந்த பயணத்தை டிரம்ப் நேற்று ரத்து செய்தார்.
உலக பொருளாதார மன்ற மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வரும் 21-ம் திகதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.