நாட்டில் மீண்டும் ஒரு குருதிக்களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனின் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல், பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த தரப்புகளைச் சேர்ந்தோர்; ஓரணியில் நின்று, புதிய அரசமைப்பு வெற்றி பெற உழைக்க வேண்டும்.
இவ்வாறாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். எந்தத்தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து, முழுமூச்சுடன் பயணிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை எனக் கூறுவார்கள். அவ்வகையில் ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களது அரசியல் இலக்குகளை அடைவதற்காக 2015 ஜனவரி எட்டில் இணைந்தார்கள். 2018 ஒக்டோபர் 26இல் பிரிந்தார்கள்.
இது இவ்வாறு நிற்க, 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியால் 1978ஆம் கொண்டு வரப்பட்ட அரசமைப்பு, சிங்கள பௌத்தம் என்ற எண்ணக்கருவை வலுப்படுத்தக் கூடிய யாப்பு ஆகும். அந்த அதிகார வரம்பு பெரும்பான்மை மக்களுக்கு வரம்புக்கு மீறிய சலுகைகளை வழங்கி வருகின்றது.
அதேவேளை, தங்களைப் பொருட்படுத்தாது, தங்களது சம்மதமின்றி ஆட்சியாளர்களால் வலுக்கட்டாயமாகத் தம் மீது திணிக்கப்பட்ட அரசமைமைப்பு முறைகளைச் சகித்துக் கொள்ள, ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது சிறுபான்மைத் தமிழினம். தமக்குத் தாமே மேலாளர்களாக இருக்க விரும்புகின்றது.
அதிகமாக கட்டுப்படுத்தப்பட்ட உணர்வுகள், அதிகமாக வெளிப்படும். அதேபோல, பேரினவாதம் அதிகமாக, அதிகாரத்தனமாகத் தமிழ் மக்களது உணர்வுகளை, உரிமைகளை மறுத்தமையால் தமிழ் மக்களது உணர்வுகளும் அதிகமாக வளர்ந்தே வந்தது வருகின்றது.
பொருளாதாரம், வேலைவாய்ப்புப் பிரச்சினைகள், மது, போதைப் பொருட்பாவனைகள், அத்துடன் அன்றாட குடும்பப் பிரச்சினைகளே, சிங்கள மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளாக உள்ளன. இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க அரசமைப்பில் திருத்தம் கொண்டு வரத் தேவையில்லை.
ஆகவே சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சாதாரண சிங்கள மக்கள் அரசமைப்பு மாற்றம் தொடர்பில் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமோ தேவையோ இல்லை. ஆனால் தமிழ் மக்களது வாழ்வும் வளமும் நீதியான பக்கச்சார்பற்ற அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாகவே ஏற்றம் அடையும்.
புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு மிகப் பெரிய ஆபத்துக் காத்திருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை செய்துள்ளார்.
வரவிருக்கின்ற அரசமைப்பைத் (?) தோற்கடிக்க, புதிய கூட்டணியை உருவாக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் மஹிந்தவுக்கும் அவசர அறைகூவல் விடுத்து உள்ளார்.
புதிய அரசமைப்பு விரைவாக நியாயமான முறையில் நடைமுறைக்கு வரவேண்டும். அது பல தசாப்த காலமாகப் புரையோடிப் போயுள்ள இனப்பிணக்குக்கு பரிகாரம் படைக்க வேண்டும் எனப் பெரும்பான்மை அரசியல்வாதிகள் இன்னமும் மனப்பூர்வமாகச் சிந்திக்கவே இல்லை. சிந்திக்க வேண்டிய தேவையும் தற்போது அவர்களுக்கு இல்லை.
இவ்வாறாகத் தெற்கின் அரசியல் களநிலைவரங்கள் உள்ள வேளை, மைத்திரி, மஹிந்த, ரணில் ஆகியோர் ஒன்று கூடி, இனப்பிணக்கைத் தீர்க்க முன்வர வேண்டும் என்று சம்பந்தர் கோருவது நடைமுறைக்கு ஒத்து வரக் கூடிய விடயமாகத் தமிழ் மக்களால் சற்றும் பார்(நோ)க்கப்படவில்லை.
பிரதமரை மாற்றும் தனது அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்த பின்னர் கொஞ்சமும் விருப்பமில்லாமலே மிகுதி ஆட்சியைப் பிரமதருடன் முன்னெடுக்கின்றார் அல்லது முட்டுக் கொடுக்கின்றார் ஜனாதிபதி. ஜனாதிபதியையும் முன்னாள் ஜனாதிபதியையும் (மஹிந்த) ஒரே நேரத்தில் ஒரு கல்லில் இரு மாங்காய்கள் போல, எப்படி வீழ்த்தலாம் எனக் குறி பார்த்துக் காத்திருக்கின்றார் பிரதமர் ரணில்.
இப்படிக் களநிலைவரம் இருக்கையில், இவர்கள் மூவரும் இணைய வேண்டும் அல்லது இணைவார்கள் என, எவ்வாறு சம்பந்தர் கனவு கானலாம். புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்ளூ அது தீர்க்கப்படாத சிக்கலுக்குத் தீர்வு படைக்கும் என்ற சம்பந்தரது விடாமுயற்சி வீண்முயற்சியாகவே தமிழ் மக்களால் கணிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில், பண்டிகைகளை ஒட்டித் தீர்வு வரும் எனக் கூறி வந்த கூட்டமைப்புத் தலைவர் தற்போது சிங்களத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, தீர்வு தர வேண்டும் எனத் தனது சுருதியை மாற்றி விட்டாரோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.
ஏனெனில், தீர்வு முயற்சிகள் தொடர்பில் காலக்கெடுகளை காலவரையறைகளைத் தாமே நிர்மாணிப்பதும் அவற்றைத் தாங்களே நிர்மூலமாக்குவதும் நம் நாட்டின் கறை படிந்த வரலாறு என ஆகி விட்டதே?
ஆகவே, இவ்வாறான களத்தில் தமிழ் மக்கள் என்ன செய்வது, என்ன செய்யப் போகின்றார்கள்? பொதுவாக உலகம் யாரை அதிகம் கொடுமைக்குள் தள்ளுகின்றதோ, அவர்கள் அதிகம் தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாறி விடுகின்றார்கள்.
அனைவராலும் பிரச்சினையாக நோக்கப்படும் ஒரு விடயத்தை, த(ம)னக்கான வாய்ப்பாகப் பார்ப்பவரே வெற்றியாளர்(கள்) ஆவார். ஆகவே, இனப்பிணக்குக்குத் தீர்வுக்காண விருப்பமில்லாது, பிரச்சினையைப் பிரச்சினையாகவே பராமரிக்க முயலும் பேரினவாதத்தின் விருப்பத்தைப் பிரச்சினையாக்க வேண்டும். இதை எமக்கான பொன்னான வாய்ப்பு என மாற்ற வேண்டும்.
தற்போது தமிழர்கள் தனிநாடு கேட்கவில்லை, தமிழீழம் கேட்கவில்லை. ஒருமித்த நாட்டில், சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக, ஆனால் தங்களது நிலம், மொழி, பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றின் இருப்பைப் பேணி, கௌரவமாக வாழ விரும்புகின்றனர். இவற்றையெல்லாம் உதறித் தள்ளி, உதிரிகளாக வாழத் தமிழ் மக்கள் விரும்பவில்லை.
இந்தச் செய்தியை உள்நாட்டுக்கும் உலகத்துக்கும் சற்றும் சலிக்காது உரைக்க வேண்டும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் யதார்த்தமானதும் பொருந்தக்கூடியதுமான தமிழ் மக்களது கோரிக்கைக்கு, உலகைச் செவி சாய்க்க வைக்க வேண்டும்.
பொதுவாக, எந்தவொரு கருத்தும் முதலில் புறக்கணிக்கப்படும். பின்னர் எள்ளிநகைபாடப்படும். அதன் பின், கொடூரமாக எதிர்க்கப்படும். இறுதியாகவே அக்கோரிக்கை அல்லது கருத்து நியாயமானது என ஏற்றுக் கொள்ளப்படும்.
ஆகவே, எங்கள் கோரிக்கைகளை வலுப்படுத்த, செயற்றிறன் உள்ளதாக மாற்ற, அவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வார்த்தை ஜாலத்தை விட்டு விட்டு, நாங்கள் ஒன்றிணைய வேண்டும்.
அரசமைப்பை மாற்ற எத்தடைகள் வரினும் அந்தத் தடைகளைத் தகர்த்தெறிய முழு மூச்சுடன் உழைப்போம் என வீரவசனம் பேசும் சம்பந்தன் ஐயா, ஏன் நமது (தமிழ் மக்களது) முழுமையான ஒற்றுமைக்கு முழக்கமிடக் கூடாது; முயற்சி செய்யக் கூடாது.
மைத்திரி, மஹிந்த, ரணில் ஆகிய மூவரும் ஒன்று கூடி, இனப்பிணக்கைத் தீர்க்க முன்வர வேண்டும் எனக் கோருகின்றார் சம்பந்தர். மறுவளமாக, சம்பந்தர், விக்னேஸ்வரன், ஆனந்தசங்கரி ஆகிய மூவரும் ஒன்று கூடித் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினை தொடர்பாக, ஒரு மணித்தியாலம் உரையாடுவார்களா?
தமிழர் பிரதேசங்களில் போர் மூண்டிருந்த காலங்களில், குண்டு வீசு;சுக்கும் சுற்றி வளைப்புகளுக்கும் உணவு, மருந்துப் பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் என அச்சத்துடன் வாழ்ந்தது தமிழ் சமூகம். அதே போர் முடிவுற்ற இன்றைய வாழ்க்கைச் சூழலிலும் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் அச்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் மக்களுக்கு ஆக்கங்கள் தரக் கூடிய விடயங்களில் சிங்களத் தலைவர்கள் ஒன்று சேர மாட்டார்கள். அழிவுகள் தரக் கூடிய விடயங்களிலேயே ஒன்று சேர்வார்கள். இதுவும் கடந்த காலப் பட்டறிவுப் பகிர்வே.
சிங்கள அரசியல் தலைவர்கள் ஓரணியில் ஒன்று கூடாதவிடத்து, சிங்கள மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழ் அரசியல் தலைவர்கள் ஓரணியில் ஒன்று கூடாதவிடத்து, தமிழ் மக்களுக்கு எல்லாமே பிரச்சினை ஆகும்.
அமெரிக்க ஜனாதிபதி கென்னடி கூறியதுபோல், ‘மிகப் பெரிய சிக்கல்கள் தான், மிகப் பெரிய சாதனைகளையும் மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்கி இருக்கின்றன’ என்ற வார்த்தைகள் நமக்கு வழி காட்டிகளாக வேண்டும்.
காரை துர்க்கா