காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தர அமெரிக்கா வரவேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 694 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினாலேயே இன்று இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக வவுனியா கந்தசாமி கோவிலுக்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கு வழிப்பாடுகளை மேற்கொண்ட பின்னர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு பசார் வீதி வழியாக ஊர்வலமாக வந்த அவர்கள் தமது போராட்ட தளத்தை அடைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது எமது பிள்ளைகள் வராது எமக்கு பொங்கல் இல்லை. மாறி மாறி வந்த அரசாங்கங்களில் நாம் நம்பிக்கையிழந்து விட்டோம்.

கூட்டமைப்பும் எம்மைப் பற்றி பேசாது சிங்கள மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுப்பது போன்று செயற்படுகின்றது. இனி நாம் அமெரிக்காவையையும், ஐரோப்பிய ஒன்றியத்தையுமே நம்புகின்றோம். அமெரிக்கா வந்து விரைவாக எமக்கு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என இதன்போது அவர்கள் தெரிவித்தார்கள்.
Eelamurasu Australia Online News Portal