கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பகர நிலைமைகள் மற்றும் மோதல்கள் குறித்த விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு ஒப்படைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மோதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடு திரும்பியவுடன் துரித நடவடிக்கைகள் இடம்பெறும் என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பிரதான இரண்டு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளின் போது கடந்த நவம்பர் மாதம் 14,15,16 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் மோதல்களை அடுத்து நாட்டில் பாரிய குழப்பநிலை உருவாகியது.
இதனை அடுத்து நாடாளுமன்ற வாரத்தில் ஏற்பட்ட குழப்பங்களின் போது அரச ஊழியர்களை தாக்கிய மற்றும் அரச சொத்துக்களை சேதமாக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் எழுவர் கொண்ட நாடாளுமன்ற விசாரணைக் குழுவொன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவினர் கடந்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகளின் போது இறுதியாக கூடி சில தீர்மானங்களை எடுத்திருந்தனர். குறிப்பாக நபம்வர் மாதம் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் கலவரங்கள் குறித்த நாடாளுமன்ற காணொளிகள் மற்றும் வாக்குமூலங்களை தயாரித்தும் சொத்து சேத விபரங்களை மதிப்பீடு செய்தும் அறிக்கை ஒன்றினை தரித்திருந்தனர். இந்த அறிக்கையை சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கு ஒப்படைக்கவும் தீர்மானம் எடுத்திருந்தனர். இது குறித்து குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி கூறுகையில்,
இறுதியாக கூடிய குழுக் கூட்டத்தில் நாம் அறிக்கை தயாரித்து வைத்துள்ளோம். சபாநாயகர் தற்போது பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். சபாநாயகர் நாடு திரும்பியவுடன் அறிக்கையை நாம் சபாநாயகரிடம் ஒப்படைப்போம். அவர் அறிக்கையை சட்டமா அதிபரிடம் கையளிப்பார். அறிக்கையில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சட்ட நுணுக்கங்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றால் அதனை சரிசெய்து சட்டமா அதிபர் மீண்டும் அறிக்கையை சபாநாயகருக்கு அனுப்புவார். அது குறித்து நாடாளுமன்றத்தில் பிரேரணையாக நிறைவேற்றி மீண்டும் சட்டமா அதிபருக்கு வழங்கப்படும். அதன் பின்னர் நீதிமன்றத்தை நாடி உரிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பக்கடும் எனக் குறிப்பிட்டார்.