இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரத்தில் செல்வாக்குச் செலுத்துகின்ற மூன்று காரணிகளின் விளைவாக புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பில் அரசியல் கருத்தொருமிப்பு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
முதலாவது காரணி கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுக்கு ( அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் நிபுணர்களின் அறிக்கை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவும் காட்டுகின்ற எதிர்ப்பு. ராஜபக்ச மாத்திரமே இதுவரையில் தனது எதிர்ப்பை பகிரங்கமாக வெளிக்காட்டி கருத்து வெளியிட்டிருக்கிறார்.
சிறிசேனவும் ராஜபக்சவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை தொடரவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஜனாதிபதி பதவியை மேலும் பலம்பொருந்தியதாக மாற்றுவதையும் அவர்கள் விரும்பக்கூடும். ஆனால் அரசியலமைப்பு வரைவு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து அதனிடத்தில் பிரதமரை முதன்மை அதிகாரத்திற்கொண்ட வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற ஆட்சிமுறையை மீண்டும் கொண்டுவர விரும்புகிறது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையைப் பொறுத்தவரை சிறிசேனவும் ராஜபக்சவும் தங்களது அனுபவங்களின் அடிப்படையில் பேசுகிறார்கள். ஆட்சியல் இருந்த 9 வருடகாலத்திலும் ராஜபக்ச நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியிலிருந்து முழுமையான பயனைப் பெற்றார். அதேவேளை அந்த பயனை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் மேலும் கூடுதலான காலம் பதவியில் இருக்கவிரும்புவதுடன் கூடுதல் அதிகாரங்களையும் நாடுகிறார்.
இவர்கள் இருவரும் மாகாணசபைகளுக்கு பரவலாக்கப்படக்கூடிய அதிகாரங்கள் அரசியலமைப்புக்கான 13 திருத்தத்தை தளர்வுபடுத்துவதன் மூலமாக குறைந்தபட்சமாகப் பேணப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஆனால், அரசியலமைப்பு வரைவு அரச நிலம் தொடர்பான அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதையும் தேசிய பொலிஸில் இருந்து மாகாண பொலிஸ் வேறுபடுத்தப்படுவதையும் விதந்துரைக்கிறது. ஆனால், இலங்கையை துண்டு துண்டாகப் பிரிப்பதற்கான ஒரு திட்டத்தின் நகல் ஆவணம் என்று இதை ராஜபக்ச வர்ணிக்கிறார். இது நாட்டை 9 அரை சுயாதீனம் கொண்ட அலகுகளாகப் பிரிக்கும் என்று அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
கருத்தொருமிப்பொன்று ஏற்படக்கூடிய சாத்தியத்தைக் குழப்புகின்ற இரண்டாவது காரணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தெளிவற்ற நிலைப்பாடாகும். அவர் கடைப்பிடிக்கின்ற பற்றுறுதியற்றதும் நழுவல் தனமானதுமான போக்கு அரசியல் அனுகூலத்தின் அடிப்படையிலேயே அவரது இறுதித் தீர்மானம் அமையும் என்பதை உணர்த்துகின்றது.
மூன்றாவது காரணி – இலங்கை இப்போது மாகாணசபை தேர்தல்கள், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்று முக்கியமான தேர்தல்களை நடத்தவேண்டிய தறுவாயில் இருக்கிறது. இத்தகைய பின்னணியிலே, ஆளும் கட்சி ( பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி) அரச கட்டமைப்பிலும் மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்விலும் பரந்தளவு மாற்றங்களை விதந்துரைக்கின்ற புதிய அரசியலமைப்பு போன்ற சர்ச்சைக்குரிய எந்தவொரு செயற்திட்டத்தையும் முன்னெடுப்பது சாத்தியமில்லை.
( நியூஸ் இனன் ஏசியா)