இளம்பெண்கள் பலரும் இந்த புகைப்படம் மோகம் என்னும் மாயவலையில் சிக்கியுள்ளனர். புற அழகு மட்டுமே முக்கியம் என்ற மனப்போக்கு இன்றைய பெண்களிடம் காணப்படுகிறது.
இளசுகள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருமே இந்த புகைப்பட மோகத்தில் சிக்கி சீரழிந்து வருகின்றனர்.
வித்தியாசமாக செல்பி எடுத்து நண்பர்களிடையே பாராட்டு பெறவேண்டும் என்று மலை உச்சியில் தலைகீழாய் தொங்குவது, உயரமான நீர்வீழ்ச்சியின் மேலே ஒற்றைக்காலில் நிற்பது, ஓடுகிற மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு சவாரி செய்து போஸ் கொடுப்பது, மிக உயரமான கட்டிடங்களின் மேல்தளத்தின் விளிம்பில் அமர்ந்து போட்டோ எடுப்பது என்று ஆபத்தை உணராமல் விபரீத சாகசம் செய்ய ஆரம்பித்து விட்டனர் இன்றைய இளம் தலைமுறையினர்.
இளைஞர்களின் இந்த மோகத்திற்கு தீனி போடுவதற்காகவே புகைப்படம் பதிவிடுவதற்கெனவே சில சமூக வலைத்தளங்களும் இயங்குகின்றன. இதில் காலவரையறை இன்றி நாளும் பொழுதும் போக்குவதால் படிப்பில் கவனம் சிதறுகிறது. மேலும் ஓவியம் வரைவது, பாடுவது, நடனம் ஆடுவது, பேச்சுப் போட்டி போன்ற அவர்களுக்கு உரித்தான தனித்திறமைகளையும் மறந்து தங்கள் சுயத்தையும் இழந்து மந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
நல்ல அதிகமான பிக்சல் கொண்ட கேமராக்கள் உள்ள செல்போன்களை வாங்குவதும் அதிகரித்து வருகிறது. இவ்விதமான போன்களை கொண்டோ அல்லது நமது முகத்தை மாசு மருவின்றி காட்டக்கூடிய மொபைல் செயலிகள் கொண்டோ போட்டோ எடுத்து தனக்கென ஒரு போலியான பிம்பத்தை தோற்றுவித்துக் கொள்கின்றனர்.
கருப்பான முகத்தை வெண்மையாக்கி, சிறிய கண்களை பெரிதாக்கி, பருக்கள் மற்றும் தழும்புகளை நீக்கி, முகத்தையும் உடலையும் மெலியச் செய்து காட்டுவது என தங்கள் அடையாளத்தையே முழுவதுமாக மாற்றி வழுவழுப்பான முகத்துடன் பேரழகாக காட்டிக் கொண்டு போலியான உலகத்தில் வாழுகிறார்கள்.
திருமணத்திற்கு வரன் தேடும் வலைத்தளங்களில் இது போன்ற புகைப்படங்களை பதிவிடுகின்றனர். இதனால் நேரில் பார்ப்பதற்கும் நிழற்படத்துக்கும் நிறைய வேறுபாடு இருப்பதால் பெண்ணையோ, ஆணையோ நிராகரிப்பதும் நடந்து வருகிறது. அந்த நேரத்தில் ஏற்படும் மனஉளைச்சலும் வேதனையும் மிக அதிகம். பெண்கள் தங்கள் புகைப்படங்களை எல்லோரும் பார்க்கும்படி பகிருவதால் ஏற்படும் ஆபத்துகளை பற்றி எண்ணிப் பார்க்கவேண்டும். அந்த புகைப்படங்களை யார் வேண்டுமானாலும் தங்களுடைய போனில் தரவிறக்கம் செய்யலாம். அதை எப்படி வேண்டுமானாலும் ‘மார்ப்பிங்’ மூலம் மாற்றம் செய்து தவறான நோக்கத்திற்கு பயன்படுத்த முடியும். இதனால் அவர்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
இது போன்ற பல விஷயங்களை செய்திகளில் கேள்விப்பட்டாலும் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கும் அலட்சியப் போக்கே காணப்படுகிறது. ஆபத்து வருமுன் தற்காத்து கொள்வதே புத்திசாலித்தனம். இது மட்டுமின்றி, பள்ளிக் குழந்தைகளை சீருடையுடன் புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிடுவது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும். குழந்தை என்ன வகுப்பு படிக்கிறது, என்ன பெயர் என்று எல்லா தகவல்களையும் நாமே வலிய வந்து கொடுக்கிறோம். இதனால் குழந்தைக் கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாதது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தவறில்லை.
புகைப்படம் எடுப்பது, ரசிப்பது என்பதெல்லாம் நம் வாழ்வோடு ஒன்றி விட்ட விஷயங்கள். தேவையான அளவு எடுத்துக் கொள்வதில் தவறில்லை. நமது புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர விரும்பினால் அதை நம் நம்பகமான நண்பர்களிடம் மட்டுமே பகிரக் கூடிய பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் என்று தெரிந்த எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்பதே நல்லது.
சுற்றி இருக்கும் நிஜ உலகத்தை மறந்து இந்த நிழல்திரைக்குள் சிக்கிக் கொண்டால் நமது பொன்னான நேரமும் வீணாகி, விபரீதமும் விளைகிறது. அழகியல் சார்ந்த உணர்வுகள் இருப்பது அவசியம் தான். வாழ்க்கையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதும் ரசனைகளே. ஆயினும் எதிலும் எல்லை மீறாமல் எச்சரிக்கையாக இருப்பது நன்மை பயக்கும். அது புகைப்பட போதைக்கும் பொருந்தும்.
விஷ்வசாந்தி சரவணகுமார்