அவுஸ்திரேலியாவில், உடல் முழுவதும் நூற்றுக்கணக்கான ஒட்டுண்ணிகள் நிறைந்த மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது
பாம்பு பிடிப்பவர்களால் குறித்த மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குயின்ஸ்லாந்தின் கோல்ட் கோஸ்டில் ஒரு வீட்டின் பின்புறத்தில் உள்ள நீச்சல் குளத்தில் உடல் முழுவதும் ஒட்டுண்ணிகள் நிறைந்து உடல்நிலை சரியில்லாத நிலையில் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது.
சிலந்திப்பேன் வகையைச் சார்ந்த உண்ணிகள் என்று அறியப்படும் சிறு பூச்சிகள் அதன் உடலின் மேல்தோலில் ஒட்டியிருந்தன.
பாம்பை மீட்ட பாம்பு பிடிக்கும் நபர் அதனை காட்டுயிர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
மருத்துவர்கள் அதன் உடலில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகளை நீக்கியுள்ளனர்.
அதன் உடல் நிலை சீராகும் என்று எதிர்பார்ப்பதாகவும் அதனை மீட்ட டோனி ஹாரிஸ் தெரிவித்தார்.
தன் தோலில் இருந்த பூச்சிகளால், அப்பாம்பு நீச்சல் குளத்தில் இறங்கியிருக்கும் என்று நம்பப்படுகின்றது.
அந்த மலைப்பாம்பு மிகவும் அசௌகரியமாக உணர்ந்திருக்கிறது. அதன் மீது வளர்ந்து கொண்டிருந்த உண்ணிகளால் அதன் முகம் வீங்கி இருந்தது” என அதனை மீட்ட டோனி குறிப்பிட்டுள்ளார்.
அப்பாம்பினை தூக்கும்போது, கற்கள் நிறைந்த பையை தூக்குவது போல இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பாம்புகள் உடலில் அவ்வப்போது உண்ணிகள் வருவது வழக்கம்தான் என குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இவ்வளவு அதிக அளவிலான உண்ணிகள் இருப்பது அப்பாம்பிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது அல்லது அதிக வெப்பத்தால் ஏற்பட்டது போல தெரிகிறது என்றும் அவர் கூறுகிறார்.
Eelamurasu Australia Online News Portal