அம்பாறையில் பலத்த மழை! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ள நிலையில் இரவு வேளைகளில் இம்மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

 

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. வீதிகள்  பலவற்றில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் மக்களின் போக்குவரத்துகளுக்கும் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோவில், தம்பட்டை, தம்பிலுவில், பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, சம்மாந்துறை, இறக்காமம் போன்ற பகுதிகளில் உள்ள தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை இம்மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக தாழ்நில விவசாயச் செய்கைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், கடற்றொழிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடற் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள தாழ்நிலக் குடியிருப்புக்கள், தாழ் வீதிகள் மற்றும் வடிகான்கள் போன்றவற்றில் நிறைந்துள்ள நீரை அப்புறப்படுத்தும் முயற்சிகளில் உள்ளுராட்சி மன்றத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாயச் செய்கைகளிலும் நிறைந்துள்ள நீர் முகத்துவாரங்களினூடாக அப்புறப்படுத்தும் முயற்சிகளில் துறைசார் உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.