இவ்வாறு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு நேற்று  யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

“சந்திரிகா தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி கைவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோ தீர்மானத்தை கைவிட்டனர். ஆனால் அதனை நான் விமர்சிக்கவில்லை.

அந்தந்த சூழலிலே அவர்கள் எடுத்த தீர்மானம் அது. அந்த சூழலுக்கு போய் நாம் தீர்வைக் காணமுடியாது.

ஆனால் இதுவரை நாம் தவறவிட்ட அந்த படிப்பினைகளை வைத்து இன்னுமொரு சந்தர்ப்பத்தை நாங்கள் தவறவிடுவோமா?

இன்று உலகில் சகல நாடுகளும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

ஆனால் போர் நடந்த காலத்தில் 33 நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று தீர்மானித்தது. இப்போதுள்ள ஆதரவு அன்று இருக்கவில்லை.

ஆனால் இன்றுள்ள இந்த சாதகமாக சூழ்நிலையை எமது மக்களுக்காக உபயோகிக்கப் போகின்றோமா என்பதுதான் இன்று இருக்கும் கேள்வி.

சர்வதேச சமூகம் இன்றைக்கு எங்களோடு நிற்கின்றது. புதியதொரு அரசியலமைப்பை கொண்டுவருவோம் என்று கூறி 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதி கொடுத்தது .

அதிலும், ஏற்கனவே இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவோம் என்று இலங்கை அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது. அதனை நிறைவேற்ற செய்வது எப்படி என்பதே இன்றைய சூழலில் உள்ள கேள்வி.

எனவே, மென்வலுவிலே இருக்கும் பிரதான பாகம் உலகத்தினுடைய ஆதரவாகும். வன்முறையற்ற ஜனநாயக வழியிலே நாங்கள் பயணிக்கிறோம் என்று அவர்கள் நம்புகின்றபோது எமக்கான தீர்வை நாம் பெற்றுக்கொள்ளலாம்” என்று அவர் தெரிவித்தார்.