மசாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த செனட்டரும் கல்வியாளருமான எலிசபெத் வாரென் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
அவரது இந்த அறிவிப்பு மிக உயர்ந்த பதவிக்கு பெண்ணொருவரைத் தெரிவுசெய்வதற்கு வாக்களிக்கக்கூடிய ஆற்றல் தனக்கு இருக்கிறதா என்ற கேள்வியை தன்னையே கேட்பதற்கு அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆற்றல்வாய்ந்தவர்களாக இருக்கிறார்களா என்று பல பெண்மணிகள் பரீசீலிக்கப்படுகின்ற நிலைமை உலகின் மிகவும் பழமைவாய்ந்த ஜனநாயகத்தின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் காணக்கூடியதாக இருக்கின்ற ஒரு முக்கியமான வேறுபாடாகும். கிறிஸ்ரின் கில்லிபிராண்ட், கெலி அயோட், ஜொனி ஏண்ஸ்ட், ருல்சி கபாரட் என இந்தப் பெண்களின் பெயர்ப் பட்டியல் நீண்டுகெண்டு போகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரிஸ், நிக்கி ஹேலி என்ற இரு பெண் அரசியல்வாதிகளும் இதில் அடங்குகின்றனர் என்பது குறிப்பாகக் கவனிக்கவேண்டியதாகும்.
அமெரிக்காவின் வரலாற்றில் நாற்பதுக்கும் அதிகமான பெண்கள் ஜனாதிபதவிக்கு வருவதற்காகப் போட்டியிட்டிருக்கிறார்கள்.ஆனால், ஹிலாரி கிளின்டன் தான் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றின் முதலாவது பெண் வேட்பாளராகவும் ஜனாதிபதியாக வருவதற்கான நம்பகமான வாய்ப்பைக்கொண்டிருந்த ஒரேயொருவராகவும் இருந்தார். உலகின் மிகவும் வல்லமைகொண்ட தேசத்துக்குத் தலைமைதாங்குவதற்கு எந்தத் தகுதியும் இல்லாத ஒரு ஆணிடம் அவர் கண்ட தோல்வி அமெரிக்க வாக்காளர்கள் பால்நிலை வேறுபாட்டைப் பொறுத்தவரை பெண்களுக்கு எதிராக கடுமையான உணர்வுகளைத் தொடர்ந்தும் கொண்டிருக்கிறார்கள் என்ற வாதத்துக்கு சான்றாக முன்வைக்கப்பட்டுவந்திருக்கிறது.
ஹலாரி கிளின்டனின் பால்நிலை ஒரு பாத்திரத்தை வகித்திருந்த அதேவேளை, பெரும்பான்மையான வாக்குகள் அவருக்கு ஆதரவாகவே அளிக்கப்பட்டன என்பதும் உண்மையே. முக்கியமான பிரசாரத் தவறுகள் சிலவற்றை அவர் இழைத்தார்.வாக்காளர்களின் மனநிலையும் வழமைக்கு மாறானதாகவே இருந்தது.பல ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், பெண்ணாக அவர் இருந்தமை அவரது தோல்விக்கான மிச்சிறிய ஒரு காரணி மாத்திரமே.எல்லாவற்றுக்கும் மேலாக கறுப்பினத்தவர் ஒருவரை இரு தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்து அமெரிக்க வாக்காளர்கள் தங்களது பக்குவத்தை ஏற்கெனவே வெளிக்காட்டிவிட்டார்கள். கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக வருவதென்பது தாண்டுவதற்கு மிகவும் கஷ்டமான தடையாக நீண்டகாலமாக விளங்கிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணொருவர் அமெரிக்க ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் கடந்த இரு வருடங்களில் கூடுதலான அளவுக்கு அதிகரித்திருப்பதற்கு நான்கு காரணங்களைக் கூறலாம்.முதலாவது, அமெரிக்காவில் சகல மட்டங்களிலும் பெண் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை மிக விரைவாக பெருமளவில் அதிகரித்திருக்கிறது.உதாரணமாக, இப்போது அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களில் 25 வீதமானவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். அந்த நாட்டின் வரலாற்றில் காங்கிரஸில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்த வீதத்தில் இருப்பது தற்போதுதான்.
இரண்டாவதாக, ஜனாதிபதி தேர்தல்களில் ஆண்களை விடவும் கூடுதலாக பெண்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளக்கூடிய சாத்தியமும் அதிகரித்திருக்கிறது. அத்துடன் பெண்கள் அரசியல்ரீதியில் கூடுதலானளவுக்கு விழிப்புணர்வு கொண்டவர்களாகவும் துடிப்பானவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த இடைவெளி கடந்த ஏழு வருடங்களாக வளர்ந்துவந்திருக்கிறது.மூன்றாவதாக , பராக் ஒபாமாவும் டொனால்ட் ட்ரம்பும் தெரிவுசெய்ப்பட்ட தொடர்ச்சியான மூன்று தேர்தல்களிலும் அமெரிக்க வாக்காளர்கள் மத்தியில் ஒருவித அமைதியின்மை அவதானிக்கப்பட்டுள்ளது. வெள்ளையின ஆண்களாக இல்லாதவேட்பாளர்கள் மத்தியில் இருந்து தெரிவைச் செய்வதற்கு வாக்காளர்களுக்கு அதிகமாக வாய்ப்பு வழங்கப்படுமானால், பால்நிலைத் தடையைத் தகர்ப்பதென்பது மிகவும் பெருமளவுக்கு சாத்தியமாயிருக்கும்.