சூடானில் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் காவல் துறையின் நடவடிக்கைகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு காவல் துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறைகுமிடையே கடும் மோதல் ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படுகிறது. கடந்த மாதம் நடந்த போராட்டங்களில் 19 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று அதிபர் பஷீருக்கு ஆதரவாக தலைநகர் கர்த்தூமில் போட்டி பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அரசுக்கு எதிராகவும் தனியாக போராட்டம் நடைபெற்றது. இதனால் தலைநகரில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் காவல் துறை தாக்கியதால் 3 பேரும் உயிரிழந்தார்களா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறைகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் 40 பேர் வரை இறந்திருக்கலாம் என நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.