அவுஸ்ரேலிய நாட்டிற்கு வெளியே உள்ள அவுஸ்திரேலியாவின் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு நிலையத்தை மூடுமாறு வலியுறுத்தி அங்கு பணியாற்றிய நூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த தடுப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவின் பிரதான நகருக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
பசுபிக் தீவான நவ்றூ மற்றும் பப்புவான நியூகினியிலுள்ள மனூஸ் தீவு ஆகியவற்றிலுள்ள தடுப்பு நிலையங்களில் பணியாற்றியவர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த தடுப்பு நிலையங்களில் உள்ள அகதிகளை அவுஸ்திரேலியாவில் குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் ஊழியர்கள் கடிதமொன்றிலும் கையெழுத்திட்டுள்ளனர்.
நவ்றூ தீவிலுள்ள தடுப்பு நிலையம் தொடர்பான 2 ஆயிரத்திற்கும் அதிகமான இரகசிய ஆவணங்களை த காடியன் பத்திரிக்கை அண்மையில் வெளியிட்டிருந்தது.
குறித்த நிலையத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் அவர்களுக்கு உடல் ரீதியில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டமை போன்ற தகவல்கள் குறித்த ஆவணங்கள் மூலம் வெளிவந்திருந்தன.
இந்த நிலையில் குறித்த தடுப்பு நிலையங்களில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை பாதுகாப்பதற்கு, அவர்களை அவுஸ்திரேலியாவிற்கு கொண்டுவருதே ஒரே வழியென முன்னாள் ஊழியர்கள் வாதிட்டுள்ளனர்.
பல்வேறு விசாரணைகளுக்காக குறித்த தடுப்பு நிலையம் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக பல முன்னாள் ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal