அவுஸ்திரேலியா மெல்பேணில் தமிழர் விளையாட்டு விழா 2019

வங்கக்கடலில் வீரகாவியமாகிய மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் தமிழர் விளையாட்டுவிழா இவ்வாண்டும் அவுஸ்திரேலியா- மெல்பேர்ணில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கடந்த 06 -01 – 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு வேர்வூட் கிழக்குப் பகுதியில் உள்ள பிரதான திறந்தவெளி மைதானத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை செயற்பாட்டாளர் செல்வன் சஞ்சீவன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை மாவீரர் லெப் கேணல் சதன் அவர்களின் மகன் செல்வன் பவித்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு செல்வி காவேரி ஜெயக்குமார் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து விளையாட்டுப் போட்டிவிழாவிற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு மைதான விளையாட்டுக்கள் ஆரம்பமாகின.

சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் மைதானத்தில் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க மைதானத்தின் மத்தியில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கான கரப்பந்தாட்டம் உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பாட்டம் முதலான விளையாட்டுக்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன. அத்துடன் சமநேரதத்தில் மற்றுமொருபுறத்தில் கிளித்தட்டு சாக்கு ஓட்டம் தேசிக்காய் கரண்டியில் வைத்து ஓடுதல் என்பவற்றுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான சங்கீதக் கதிரை போட்டிகளும் நடைபெற்றன. குறித்த விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தமிழர்களின் பாரம்பரிய இசைவடிவங்களில் ஒன்றான பறையிசை நிகழ்வை Australian Tamil Arts அமைப்பினர் நடத்தி அனைவரது கவனத்தை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

கரப்பந்தாட்டப்போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு தேர்வான Northern Tamil Tigers கழகத்திற்கும் டெனிஸ் கழகத்திற்குமிடையில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் Northern Tamil Tigers கழகத்தினர் வெற்றியீட்டி வெற்றிக்கேடயத்தை பெற்றுக்கொண்டனர்.

உதைபந்தாட்டப் போட்டியில் இறுதி ஆட்டத்திற்குத் தேர்வான கரிகாலன்-A அணியினருக்கும் மில்லர்-A அணியினருக்குமிடையிலான இறுதிச் சுற்றில் கரிகாலன்-A அணியினர் வெற்றியீட்டி வெற்றிக்கேடயத்தை பெற்றுக்கொண்டனர்.

துடுப்பாட்டப்போட்டியில் இறுதி ஆட்டத்திற்குத் தேர்வான சிவாஸ் றீகல் அணியினருக்கும் Mulgrave கிறிக்கெற் கழகத்திற்குமிடையிலான இறுதிச்சுற்றில் சிவாஸ் றீகல் அணியினர் வெற்றியீட்டி வெற்றிக்கேடயத்தைப்பெற்றுக்கொண்டனர்.

பரிசளிப்புநிகழ்வுகளையடுத்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு “தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்” என்ற உறுதிமொழியுடன் இரவு 9.00 மணியளவில் 2019-ம் ஆண்டிற்கான தமிழர் விளையாட்டுவிழா நிறைவடைந்தது.

வழமைபோன்று இவ்வாண்டும் தாயகத்து உணவுவகைகளான தோசை அப்பம் வடை ஒடியற்கூழ் கொத்துரொட்டி மற்றும் குளிர்பானங்களும் விற்பனைசெய்யப்பட்டதுவும் குறிப்பிடத்தக்கது.