இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள்!

இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்டவர்கள் குறித்த  எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள இரு சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் இந்த நடவடிக்கைகளிற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவுமே இந்த  முயற்சியை ஆரம்பித்துள்ளன.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தங்களிடமுள்ள விபரங்களை வழங்கவேண்டும் என இரு அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆகக்குறைந்த அளவில் இறந்தவர்களின் பெயர்களை சேகரிப்பதன் மூலமாவது அவர்களிற்கு மரியாதை செலுத்தவேண்டும் என ஐடிஜேபியின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளை கணக்கிடுவதற்கு இந்த எண்ணிக்கை முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் சமூகங்களிற்கு மிகவும் முக்கியமான நினைவுகூறுதலிற்கும் இது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தகாலத்தின் பின்னரும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை என்னவென்பது எவருக்கும் தெரியாது என குறிப்பிட்டுள்ள இரு அமைப்புகளும் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தெரியாத நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ளன.

கொல்லப்பட்டவர்களின் இறுதி எண்ணிக்கையை கணிப்பிடுவதற்கு புள்ளிவிபர அணுகுமுறையை  பயன்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2009 மே மாதம் 18-19 திகதிகளில் சரணடைந்த பின்னர் காணாமல்போனவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு இந்த முறை பயன்படுத்தப்பட்டது எனவும் இரு சர்வதேச அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்களை கொல்லப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை உறுதிசெய்வதற்காக அவர்களது குடும்பத்தவர்கள் உறவினர்கள் அயலவர்களுடன் உரையாடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனமனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவின் தலைவர் பட்ரிக் போல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பல அமைப்புகள் ஏற்கனவே இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன,எனவும் குறிப்பிட்டுள்ள அவர் பெயர்களை பதிவு செய்வதன் மூலம் ஏற்கனவே காணப்படுகின்ற தகவல்களை பதிவு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.