நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலத்தை, கரடுமுரடான பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கி சீனா சாதனை படைத்துள்ளது.
நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி, அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதற்காக சீன விண்வெளி ஆய்வு மையம், சாங் இ (Chang’e Program) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது ‘சாங் இ 4 மிஷன்’ (Chang’e 4 Mission) எனும் திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது. அதன்படி, பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ரோபோ உள்ளடங்கிய விண்கலம் கடந்த டிசம்பர் மாதம் அனுப்பப்பட்டது.
இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.
பொதுவாக நிலவின் ‘இருண்ட பக்கம்’ என்றழைக்கப்படும் இந்த இடத்திலும் சூரிய வெளிச்சம் காணப்பட்டாலும், பூமியிலிருந்து இந்த இடத்தை பார்க்க முடியாது என்பதால்தான் இதை அவ்வாறு அழைக்கின்றனர்.
பூமியின் தொலைதூரத்தில் ரேடியோ அலைகளை அடிப்படையாக கொண்ட தொலைநோக்கிகளை நிலவின் தென் துருவத்தில் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும் இந்த விண்கலம் மேற்கொள்ளும்.
அதுமட்டுமின்றி, நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள் மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.