ஃபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் வசதி!

ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதிக்கான சோதனை துவங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம்.

ஃபேஸ்புக் எஃப்8 2018 டெவலப்பர் நிகழ்வில் மெசஞ்சர் செயலி முழுமையாக மாற்றப்படுவதாக அந்நிறுவனம் கடந்த ஆண்டின் மே மாதத்தில் அறிவித்திருந்தது. அன்று முதல் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு மாற்றங்களை உலகின் வெவ்வேறு பகுதிகளில் படிப்படியாக மேற்கொண்டு வருகிறது.
ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தகவல் பரிமாற்றத்திற்கென மெசஞ்சர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மெசஞ்சரில் டார்க் மோட் வசதியை வழங்குவதாக ஃபேஸ்புக் கடந்த ஆண்டு அறிவித்தது. இதைத் தொடர்ந்து டார்க் மோட் அம்சம் பல்வேறு நாடுகளில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.
தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுகிறது என ஜேன் மேன்சுன் வொங் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து பகுதிகளிலும் டார்க் மோட் வசதி வழங்கப்படாத நிலையில், செயலியில் பணிகள் நடைபெறுகிறது (Work in Progress) என குறிப்பிட்டுள்ளதாக வொங் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக மெசஞ்சரில் டார்க் மோட் பற்றிய ட்விட் பதிவிட்ட வொங், பின் இந்த அம்சத்திற்கான ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டார். ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று டார்க் மோட், பின்னணி நிறங்களை கருப்பு நிறத்திற்கு மாற்றுகிறது. எனினும், சில விவரங்கள் மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மெசஞ்சர் செயலியை ஃபேஸ்புக் மாற்றியமைத்தது. அதன்படி புதிய செயலியில் பயனர்கள் மிக எளிமையாக சாட் செய்யவும், வீடியோ கால் மற்றும் இதர அம்சங்களை பயன்படுத்தும் படி உருவாக்கப்பட்டு இருந்தது. மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி எங்கு சோதனை செய்யப்படுகிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
மெசஞ்ரில் டார்க் மோட் வசதி Me பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனை செயல்படுத்தியதும், ஃபேஸ்புக் தரப்பில் இந்த அம்சம் இறுதிகட்ட பணிகளில் இருப்பதாக தெரிவிக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.