தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்த கடுமையான நினைவுகள்குறித்து, தன் சுய சரிதைப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார், நடிகை மனிஷா கொய்ராலா.
மனிஷா கொய்ராலா, 1990-களில் தமிழ், இந்தித் திரையுலகைக் கலக்கியவர். வினு வினோத் சோப்ரா இயக்கத்தில் வெளியான `1942 லவ் ஸ்டோரி’ இந்திப் படம் அடையாளம் கொடுத்தது. மணிரத்னத்தின் `பம்பாய்’, சங்கரின் `இந்தியன்’ படங்கள் மனிஷாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நிறைய இந்திப் படங்களில் நடித்தார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த மனிஷா, சில வருடங்களுக்கு முன்பு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின், முழு நம்பிக்கையுடன் புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்துள்ளார்.
தான் கேன்சரால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்ததை, எப்படி கேன்சர் எனக்கு புது வாழ்க்கையை அளித்தது?’ என்பதை, ‘ Healed’ என்ற சுய சரிதைப் புத்தகமாக எழுதியுள்ளார். அதில், ‘ கேன்சர் என் வாழ்வில் நிறைய தைரியங்களைக் கொடுத்துள்ளது. என்னுடைய மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன். நான் பல இருட்டான நாள்களையும், தனியான இரவுகளையும் கடந்திருக்கிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை நினைத்துப்பார்க்கும்போது, எனக்கே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.
என் காலடியில்தான் உலகமே இருப்பதாகக் கருதினேன். இடைவிடாத தொடர் படப்பிடிப்புகளால் 1999-ம் ஆண்டு உடல் அளவிலும் மனத்தளவிலும் அதிகம் பாதிக்கப்பட்டேன். அதிலிருந்து மீள்வதற்கு மது மட்டுமே எனக்கு சிறந்த வழியாக இருந்தது. என் நண்பர்கள் நிறைய அறிவுரை கூறியும் நான் அதைக் கேட்கவில்லை. கேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன். என் சிந்தனை கூர்மையானது, என் மனம் தெளிவானது, என் கண்ணோட்டம் மாறியது. முன்பெல்லாம் அதிகம் கோபமாக, பதற்றமாகவே இருப்பேன். ஆனால் அதிலிருந்து மீண்டு, தற்போது முற்றிலும் அமைதியாக உள்ளேன்” என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.