முக்கிய நபர் ஒருவரின் குடியுரிமையை ரத்து செய்த அவுஸ்திரேலிய அரசாங்கம்!

IS பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும், முக்கிய நபர் ஒருவரின் குடியுரிமையை அவுஸ்திரேலிய அரசாங்கம், ரத்து செய்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பிறந்த நீல் பிரகாஷ் (Neil Prakash) என்பவர், பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளின் பேரில், துருக்கியில் விசாரிக்கப்பட்டு வந்ததாக, அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், துருக்கியில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, அவர் அங்கு பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அவுஸ்திரேலியாவிலும் அவர் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளின் பேரில் தேடப்பட்டு வருவதாக, அமைச்சு குறிப்பிட்டது.

மெல்பர்னில், காவல் துறை  அதிகாரி ஒருவரின் தலையைத் துண்டிக்கச் சதித் திட்டம் தீட்டியதன் தொடர்பில், அவர் தேடப்பட்டு வந்தார்.

அந்த நபரின் தாயார், கம்போடியாவைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை, ஃபிஜியைச் சேர்ந்த இந்தியராகும். அவருக்கு, ஃபிஜி குடியுரிமையும், அவுஸ்திரேலியக் குடியுரிமையும் உள்ளன.

அவுஸ்திரேலியக் குடியுரிமைச் சட்டத்தின்படி, இரு நாட்டுக் குடியுரிமை கொண்ட ஒருவர், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டால், அவுஸ்திரேலியக் குடியுரிமையை இழக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.