பன்னாட்டு நீதித்துறையின் தலையீடு இனியும் இலங்கைக்குத் தேவையில்லை. இலங்கை நீதித்துறையின் சுயாதீனம் அதை உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும், சர்வ மதத் தலைவர்களுக்கும் இடையே நேற்றுமுன்தினம் சந்திப்பு நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரச தலைவர் மைத்திரிபால சிறிவேனவுக்கும், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கருத்து மோதல்கள் வலுப்பெற்றன. அதைத் தணித்து இருவருக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நான் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.
அரச தலைவர் என்னைத் தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பல தடவைகள் கோரினார். அரச தலைவராக மைத்திரிபால சிறிசேனவும், தலைமை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கவும் செயற்படவே 2018ஆம் ஆண்டு மக்களின் ஆணை கிடைத்தது. அதை மீறிச் செல்ல நான் தயாராக இருக்கவில்லை.
கடந்த இரு மாதத்தில் யார் வெற்றி பெற்றனர் என்பது முக்கியம் அல்ல. நாட்டுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. உலகத்துக்கே முன்னுதாரணமாக இருந்த எமது நாட்டின் நாடாளுமன்ற மதிப்புக்கு பெரும் கறை படிந்துள்ளது. சுயாதீனமாகச் செயற்பட்ட உயர் நீதிமன்றம் நாட்டுக்குப் பெரும் மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்படுகின்றது. இனி பன்னாட்டு நீதித்துறையின் தலையீடு தேவையற்ற என்றார்.
இதேவேளை, இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்படுகின்றது. பன்னாட்டு நீதித்துறையின் தலையீடு தேவையில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி, நாடாளுமன்றத்தில் இடைக்கால கணக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டபோது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.