எகிப்தில் பிரமிடுகள் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் வியட்நாம் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர்.
எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்ப்பதற்காகவும், அங்கு நடைபெறும் ஒலி ஒளி நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காகவும் வியட்நாமைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நேற்று ஒரு பேருந்தில் சென்றனர். அந்த பேருந்து, பிரமிடுகளுக்கு அருகில் உள்ள மரியோத்தியா என்ற இடத்தில் சென்றபோது சாலையோரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.
இதில் பேருந்து சின்னாபின்னமாகச் சிதறியது. பேருந்தில் பயணம் செய்த 3 சுற்றுலாப் பயணிகள், மற்றும் எகிப்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். எகிப்தைச் சேர்ந்த டிரைவர் உள்ளிட்ட 11 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எகிப்தில் பிரமிடுகள் உள்ள பகுதியில் திறந்தவெளியில் ஒலி ஒளி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒளி வெள்ளத்தில் பிரமிடுகள் மூழ்கியிருக்கும் காட்சியை காண்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.