மோட்டோரோலாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி மோட்டோ ஜி7 சீரிஸ் இந்த ஆண்டு அறிமுகமான மோட்டோ ஜி6 மாடல்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும்.
மோட்டோ ஜி7 சீரிஸ் இல் அந்நிறுவனம் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் என நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம். இந்த ஆண்டு போன்றே மோட்டோரோலா தனது புதிய ஸ்மார்ட்போன்களை முதலில் பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
பிரேசில் நாட்டில் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்பதால், அந்நிறுவனம் தனது புதிய சாதனங்களை முதற்கட்டமாக அங்கு அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் மோட்டோ ஜி7 வெளியீடு 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கு முன் நடைபெறலாம்.
2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பிப்ரவரி 25 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் மோட்டோ ஜி7 சீரிஸ் வெளியிடப்படலாம். புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகிவருகிறது.
அந்த வகையில் இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் வழங்கப்படும் என்றும் மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் உள்ளிட்டவற்றில் வழக்கமான நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
இதேபோன்று மோட்டோ ஜி7 மற்றும் ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படும் என்றும் மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்படலாம்.
மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியன்ட்களில் கிடைக்கும். மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியன்ட்களில் கிடைக்கும்.
மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்றும் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், மோட்டோ ஜி7 பிளே ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 2820 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.