உண்மைகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சி தொடரும்- சாலிய பீரிஸ்

காணாமல்போனவர்கள் குறித்த உண்மைகளை கண்டுபிடிப்பதில்  உறுதியாக உள்ளதாக காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணாமல்போதல் எவ்வாறான நிலையில் இடம்பெற்றது  அவ்வாறு காணாமல்போனவர்களிற்கு என்ன இடம்பெற்றது என்ற உண்மைகளை வெளிக்கொணர்வது குறித்து உறுதியாகவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்த விசாரணைகளிற்கு காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் உதவுவது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

விசாரணை நடவடிக்கைகளின் உயர்தராதரத்தை பேணுவதுடன் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவேண்டியதன் அவசியம் குறித்து உயர் அதிகாரிகளிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களில் சிலவற்றை கார்பன் டேட்டிங் எனப்படும் பரிசோதனைகளிற்கு உட்படுத்துவதற்கு தேவையான நிதியுதவியை வழங்குவதற்கு காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் முன்வந்துள்ளது.

காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து கார்பன் டேட்டிங் பரிசோதனைகளிற்காக ஆறு எலும்பு மாதிரிகளை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை பார்வையிட்டுவந்துள்ளதாக காணாமல்போனோர் குறித்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

மன்னார் நீதவான் ரீ சரவணராஜாவின் மேற்பார்வையின் கீழ்   இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

 

காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் ஆணையாளர்கள் மிராக் ரஹீம், வேந்தன் ஆகியோர் இந்த நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர்.மேலும் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் சட்டத்தரணிகளும் பிரஜைகள் குழுவின் உறுப்பினர்களும் இவற்றை பார்வையிட்டுள்ளனர்