சிறிலங்காவை 50 நாட்களுக்கு மேலாக நாசமாக்கிய ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியின் முழு விபரத்தை விரைவில் வெளியிடவுள்ளேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்தி நிறுவனமொன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் தொடர்புபடவில்லை. ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் முழுக் குடும்பமும் இதில் தொடர்புபட்டுள்ளது.
ஆகவே இந்த சதித் திட்டத்தினூடாக அவர்கள் ஒவ்வொருவரும் என்ன என்ன பதவிகளுக்கு ஆசைப்பட்டுள்ளர்கள் என்ற விபரத்தையும் நான் விரைவில் வெளியிடுவேன். அத்துடன் அவர்களின் இந்த சதிக்கு துணைபோன கறுப்பு ஊடகங்களின் பெயர்களையும் அம்பலப்படுத்தவுள்ளேன்.
மேலும் மஹிந்த அணியைச் சேர்ந்த சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசியல் சூழ்ச்சியுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளார்கள் அவர்களின் விபரமும் விரைவில் வெளி வரும்.
எமது கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த அரசியல் சூழ்ச்சிக்குள் சிக்குண்டு மயிரிழையில் தப்பியுள்ளனர். எனினும் கட்சியின் ஒற்றுமையைக் கருத்தில்கொண்டு அவர்களின் விவரங்களை வெளியிடமாட்டேன்.
இந் நிலையில் இந்த அரசியல் சூழ்ச்சியை முடிவுக்கு கொண்டுவர எமது ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கடினமாக உழைத்தனர். அவர்களின் எண்ணத்தின்படி நாம் வெற்றியடைந்தோம் என்றார்.
Eelamurasu Australia Online News Portal