1978ல், நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது, ‘தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஒருவர் பைத்தியக்காரராக இருந்தால் என்ன நடக்கும்’என லங்காசமசமாஜக் கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா கேள்வியெழுப்பியிருந்தார்.
சிறிலங்காவில் தற்போதுஅரசியற் குழப்பங்கள் இடம்பெற்றபோது இந்த வினாவானது மீண்டுமொருமுறை நினைவுகூரப்படுகிறது.
சிறிலங்காவின் அரசியல் சீர்திருத்தத்தில் ஏற்பட்ட இந்த இடைவெளியானது இன்னமும் நிரப்பப்படவில்லை. அரசியல் சீர்திருத்தத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இப்பிரச்சினைக்கு இவை எவ்விதத்திலும் உதவவில்லை.
சிறிலங்காவின் முதலாவது நிறைவேற்று அதிபரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன முட்டாளல்ல, ஆனால் அவர் மோசமான ஒரு சந்தர்ப்பவாதியாகத் திகழ்ந்துள்ளார். 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனஅரசியல் சாசனத்தை வரைந்த போது அவர் தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களை அடைவதை நோக்காகக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர் இந்தஅரசியல் சாசனமானது 13 தடவைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இவர் வயதுமுதிர்ந்த,தலைக்கனம் பிடித்தஅரசியல்வாதியாகவும் திகழ்ந்துள்ளார்.
மூன்றாம் உலக நாடுகள் எதிர்நோக்கும் முதன்மையான பொருளாதார அபிவிருத்திசார் பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்தும் நோக்கிலேயே நிறைவேற்று அதிபர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும்,இவ் எண்ணக்கருவை தமது நாடுகளில் அறிமுகம் செய்த லீ குவான் யூ, மஹதிர் மொஹமட், சுகார்டோ, ஒகஸ்ரோ பினோசெற் போன்ற தலைவர்களில் சிலர் கொடூரமானவர்களாக இருந்த போதிலும் இவர்கள் பொருத்தமான அதிகாரத்துவ ஆட்சியின் ஊடாக தமது நாடுகளின் பொருளாதார அபிவிருத்தியை முன்னேற்றியிருந்தனர்.
ஆனால் இவர்களுடன் ஒப்பிடுகையில், ஜே.ஆர் இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரியளவில் பங்காற்றவில்லை. ஆனால் தான் ஒரு ஆபத்தான தலைவர் என்பதை அவர் நிரூபித்தார்.
குறிப்பாக, அரச விவகாரங்களில் ஜே.ஆர் ஜெயவர்த்தன திமிர்த்தனமாக நடந்து கொண்டதன் விளைவாக நாட்டில் அரசியல் உறுதியற்ற நிலை ஏற்பட்டது. இதனால் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இருவேறு கிளர்ச்சிகள் உருவாகின.
இவரது காலத்தில் வாழ்ந்த வலதுசாரி அரசியற் தலைவர்களுடன் ஒப்பிடும் போது ஜே.ஆர் ஜெயவர்த்தன தனது ஆட்சிக்காலத்தில் பல மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளார்.
ஜே.ஆர் தனது ஆட்சிக்காலத்தில் தன்னால் உருவாக்கப்பட்ட குழப்பநிலையை தீர்க்காது தனக்குப் பின்னர் நாட்டை ஆட்சிசெய்த ஆர்.பிறேமதாசாவிடம் சீர்குலைந்திருந்த நாட்டைக் கையளித்திருந்தார். அத்துடன் ஜே.ஆர் இந்த நாட்டில் எந்தவொரு செழுமையையும் உருவாக்கவில்லை.
இவரது ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சியானது 4 சதவீதமாகக் காணப்பட்டது. ஜே.ஆரின் காலத்தில் மொத்தத் தேசிய உற்பத்தி மிகத்தாழ்வாகக் காணப்பட்டது. இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஆர்.பிறேமதாசா மிகக் குறுகிய காலம் நாட்டை ஆட்சி செய்த போதிலும் நாட்டில் இடம்பெற்ற கிளர்ச்சியைத் தடுத்ததுடன் பொருளாதார அபிவிருத்தியையும் இரண்டு மடங்காக அதிகரித்தார்.
நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை என்பது சில நாடுகளில் அவற்றின் அரசியல், தேர்தல், சமூக நிபந்தனைகளுக்கு இலகுவாக பொருந்தக் கூடியதாக உள்ளது.
குறிப்பாக பிரான்ஸ் நாட்டு நிறைவேற்று அதிபர் முறைமையானது மிகச்சரியான அரசியலமைப்பு ஏற்பாடாக நோக்கப்படுகிறது. எனினும், சிறிலங்காவிற்கு இது பொருத்தமற்றதாக இருந்தது.
சிறிலங்காவிலும் மூன்றாம் உலக நாடுகளில் பெரும்பாலானவற்றிலும் நிறைவேற்று அதிபர் முறைமையானது சர்வ அதிகாரங்களைக் கொண்ட பக்கச் சார்புடைய மற்றும் விரோதங்களை அதிகரிக்கின்ற ஒன்றாக உருவாக்கப்பட்டது. இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, நிறுவக கட்டமைப்பாகும். எடுத்துக்காட்டாக, சிறிலங்காவில், பிரான்ஸ் அல்லது அமெரிக்காவைப் போலல்லாது, மிகக் குறைந்த சுயாதீன நிறுவகங்களே காணப்படுகின்றன.
இந்த நிறுவகங்களாலேயே நிறைவேற்று அதிகாரத்துவ அதிபர் ஒருவரின் நடத்தைப் பாங்கை மாற்றியமைக்க முடியும். இதற்கு மாறாக, நிறைவேற்று அதிபரின் அதிகாரங்கள் சுயாதீன நிறுவகங்களின் நோக்கங்களைப் பலவீனப்படுத்தியுள்ளன.
இரண்டாவதாக, கீழைத்தேய நாடுகளின் கோட்பாடுகள் நிறைவேற்று அதிபர் முறைமையைத் தோல்வியுறச் செய்துள்ளன. கீழைத்தேய நாடுகளின் தலைவர்கள் மற்றும் மக்கள் பொதுவாகவே கொள்கைப் பற்றற்றவர்களாக உள்ளனர்.
குறிப்பாக அரசியல் சாசன ஆட்சி முறைமையைக் கூறலாம். இந்த சமூகங்களில் தேர்தல் ஜனநாயகம் என்பது பகுத்தறிவு ரீதியான தெரிவை வலியுறுத்தவில்லை.
இது அடிமட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உயர் மட்ட அரசியல் பிரதிநிதித்துவங்களுக்கே முக்கியத்துவம் வழங்குகின்றது.
எடுத்துக்காட்டாக, இந்திய நாடாளுமன்றின் கீழ்ச்சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 34 சதவீதத்தினர் நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளுக்கு முகங்கொடுத்து வருபவர்களாக அல்லது குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டவர்கள் என Carnegie Endowment for Peace நிறுவனத்தைச் சேர்ந்த மிலான் வைஸ்ணவ் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மிகமோசமான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய இந்திய அரசியல்வாதிகள் மிகக் குறைவான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய அரசியல்வாதிகளை விட தேர்தல்களில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுவதாக இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான அடிமட்ட நிபந்தனைகள் அரசியலமைப்பு வாதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்துகின்றன. அரசியல்வாதிகள் அரசியல் சாசனத்தை மீறுவதுடன் மக்கள் மத்தியில் தமது செயற்பாடுகளை நியாயப்படுத்துகின்றனர்.
எனினும், சிறிலங்காவில் தற்போது ஏற்பட்ட அரசியல் பிரச்சினையானது கடந்த காலங்களில் ஏற்பட்டதை விட வேறுபட்டதாகும்.
எனினும் பிற்போக்கு அரசியல் எண்ணங்கள் முற்றுமுழுதாக அழிவடைந்து விடவில்லை. சிறிலங்காவில் புதிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிறைவேற்று அதிபருக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 17வது திருத்தச்சட்டத்தின் மூலம் முதலில் நிறைவேற்று அதிபருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் சில குறைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 18வது திருத்தச்சட்டத்திலும் இவை உள்ளடக்கப்பட்டுள்ளன. சிறிலங்காவின் அதிபர் ஒருவர் நான்கரை ஆண்டுகள் முடிவடையும் வரை நாடாளுமன்றைக் கலைப்பதற்கான அதிகாரம் 19வது திருத்தச் சட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல், அரசாங்கத்தின் முக்கிய துறைகளை அரசியலிலிருந்து நீக்குதல் போன்றனவும் 19வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனாலேயே அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையை தீர்ப்பதற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்துவத்தை முற்றுமுழுதாக பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.
ஜே.ஆர் ஜெயவர்த்தனவை தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்ததுடன் அரசியல் சாசனத்தில் இவற்றை நியாயப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது போலல்லாது, சிறிசேன தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அரசியல் சாசன ஏற்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.
இதன் காரணமாக சிறிசேன நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டார். அரசியல் சாசனத்தின் 38வது உறுப்புரையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், நாடாளுமன்ற சபாநாயகரிடம், அதிபர் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு மனரீதியாக அல்லது உடல் ரீதியாக தகைமையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குற்றம் சுமத்தி பரிந்துரைக்கான அறிவித்தல் ஒன்றைக் கையளிக்க முடியும்.
அதாவது அதிபர், அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறுகின்றார், துரோகம் இழைத்துள்ளார், ஊழலில் ஈடுபட்டுள்ளார், தனது அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்கின்றார் போன்ற ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இவருக்கு எதிராக விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்க முடியும்.
இந்த அறிவித்தலானது சபாநாயகருக்கு விலாசமிடப்பட்டு எழுதப்படுவதுடன் இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பகுதியினர் கையொப்பமிடவேண்டும் அல்லது பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடுவதுடன், இக்குற்றச்சாட்டானது உச்சநீதிமன்றின் விசாரணைக்கு உகந்தது என சபாநாயகர் திருப்தி கொள்ள வேண்டும்.
இதனைத் தொடர்ந்து அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கு மூன்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் இது தொடர்பாக சபாநாயகரால் உச்சநீதிமன்றுக்கு அறிக்கையிடப்படும்.
உச்சநீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டு அதிபர் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர் என்பதை சபாநாயகருக்கு உறுதிப்படுத்தும் இடத்து, அதிபரை பதவியிலிருந்து விலக்குவதற்கு நாடாளுமன்றில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்றால் அதிபரை பதவியிலிருந்து நீக்கமுடியும்.
அதிபர் சிறிசேன இரண்டு மாதங்களின் முன்னர் அரசியல் சாசன விதிமுறைகளை மீறி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து விலக்கியிருந்தார்.
ஆனால் இவ்வாறான சட்ட மீறல்களுக்கு அதிபர் சிறிசேன பொறுப்பளிப்பாரா?
உயர்மட்ட அரசியல் தலைவர்கள் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடும் போது அதனை சிறிலங்காவின் ஜனநாயகக் கோட்பாடானது எதிர்க்கும் நிலை உருவாகினால், இத்தலைவர்கள் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் கூட அவர்களுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
வழிமூலம் – Daily mirror
ஆங்கிலத்தில் – Ranga Jayasuriya
மொழியாக்கம் – நித்தியபாரதி