மட்டக்களப்பில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்த 8.5 ஏக்கர் காணி விடுவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி  விடுவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக ,இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட நிகழ்வு இன்று வியாழக்கிழமை இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி செயலணியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்த 8.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு அதன் ஆவனங்களை கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கபில அநுர ஜெயசேகரவினால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.

இதையடுத்து கையளிக்கப்பட்ட காணி ஆவனங்களை கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந்திடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு மாகாண ,இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கபில அநுர ஜெயசேகர, மட்டக்களப்பு மாவட்ட ,இராணுவ பிரிகேடியர் கபில உதலுவவெல மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,

மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் உட்பட திணைக்கள தலைவர்கள் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள் ,இராணுவ பொலிஸ் உயரதிகாரிகள் சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில். 2.5 ஏக்கரும், மண்முனை தெண் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒந்தாச்சிமடத்தில் 0.5 ஏக்கரும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொக்கட்டிச்சோலையில் 0.75 ஏக்கரும் வெளிக்கந்த பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோனிதாண்டமடுவில் 5 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.

இதில் 5 ஏக்கர் மகாவலிக்குட்பட்ட அரச காணியும், 3.5 ஏக்கர் பொது மக்களின் காணிகளும் உள்ளடங்கியமை குறிப்பிடத்தக்கது.