இந்தோனேசியாவை தாக்கிய சுனாமிக்கு சுமார் 300 பேர் பலியாகி உள்ள நிலையில், இசை நிகழ்ச்சியில் சுனாமி புகுந்து மக்களை அடித்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை நேற்று முன்தினம் இரவு வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது. பின்னர் சிறிது நேரத்தில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து எழுந்த ராட்சத சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சுமார் சுமார் 65 அடி உயரத்தில் (20 மீட்டர்) சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. ஏராளமான மக்கள், அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். இன்று காலை நிலவரப்படி சுனாமிக்கு 281 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.